Latest News :

இயக்குநர் அமீரின் ஆசையை நிராகரித்த இயக்குநர் வெற்றிமாறன்!
Monday November-06 2023

இயக்குநரும், நடிகருமான அமீர் தனது அமீர் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் படம் ‘மாயவலை’. ‘அதர்மம்’ பட புகழ் இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார்.

 

அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் 'தயா' செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சினேகன் பாடல்கள் எழுதியிருக்கிறார். எஸ்.பி.அஹமத் படத்தொகுப்பு செய்ய, வீரமணி கணேசன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பிரதீப் தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராஜேந்திரன், ஏ.ஆர்.ஜாஃபர் சாதிக், சர்தார் ஆவர் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளார்கள்.

 

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பின்னணி வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘மாயவலை’ படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நவம்பர் 5 ஆம் தேதி, சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டு படம் பற்றி பகிர்ந்துக்கொண்டார்கள்.

 

Maayavalai Press Meet

 

படம் குறித்து இயக்குநரும், நடிகருமான அமீர் பேசுகையில், “'மாயவலை' தொடங்கியதன் நோக்கம் ஒன்று தான். இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தான் இதன் மூல காரணம். மூத்த பத்திரிகையாளர்களுக்கு அவரைத் தெரியும். 'அதர்மம்' எனும் அற்புதமான படத்தை தந்தவர். பல முன்னணி நடிகர்களை இயக்கிய‌வர். எனக்கு அவருக்குமான நட்பு நீண்டது. அவர் படத்தின் ஷூட்டிங்கில் அவரை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். நான் அவரிடம் உதவியாளனாக வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன், ஆனால் அவரது சினிமா பயணம் மாறிவிட்டது. அவர் டிவி பக்கம் ஒதுங்கி விட்டார். பல வேலைகள் பார்த்தாலும் அவருக்கு சினிமா செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. சரி வாருங்கள் பண்ணலாம் என்றேன், ஒரு கதை சொன்னார் அதைப் பண்ணலாம் என பல ஹீரோக்களிடம் கதை சொன்னோம், ஆனால் நடக்கவில்லை. கடைசியில் நீயே நடி என்றார், சரிண்ணே என்று சொல்லி ஆரம்பித்தது தான் இந்தப்படம். 

 

நாங்கள் ஆரம்பித்த போது ஒரு பட்ஜெட் இருந்தது, ஆனால் அது கை மீறிப்போய்விட்டது. எனக்கு பலர் உதவிக்கு வந்தார்கள். முதல் முறையாக ஒரு படத்தை ஷீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி முடித்துவிட்டு உங்களைச் சந்திக்கிறேன். எனக்கே இதுப் புதிது தான். இந்தப்படம் ஆரம்பித்த போது வெற்றிமாறனிடம் சொன்னேன், செய்யுங்கள் நன்றாக வருமென்றார். படம் முடிந்து அவருக்கு காட்டினேன், நானே ரிலீஸ் செய்கிறேன் என்றார். இன்றைய சினிமா வியாபாரம் தெரிந்த வெற்றிமாறன் போன்ற படைப்பாளி எங்கள் படத்தை ரிலீஸ் செய்வது, எங்களுக்குப் பெருமை.  

 

என் அனைத்துப் படங்களுக்கும் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திறகும் இசை. முதலில் பாடலில்லாமல் இருந்தது, இறுதியில் மூன்று பாடல்கள் வந்துவிட்டன‌. அதை அட்டகாசமாக யுவன் செய்து தந்தார். சஞ்சிதா ஷெட்டி என்னைப்பற்றி எப்போதும் நல்லவிதமாக சொல்லமாட்டீர்களா என்பார். மிகத் திறமைசாலி அவர். இந்தப்படத்தில் இரவில் தான் ஷீட்டிங், ஆனால் முகம் சுளிக்காமல், அற்புதமாக உழைத்துத் தந்தார். நாயகனுக்கு இந்தப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும். வின்செண்ட் என் முதல் படத்தில் நடிக்க வேண்டியவர், ஆனால் அவரை தொடர்பு கொள்ளும் சிக்கல்களில் அவரை நடிக்க வைக்க முடியவில்லை, பின் 'யோகி' படத்தில் நடித்தார் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

 

ஒரு சிலருக்கு முகம் பார்க்க பயமாக இருக்கும் ஆனால் உண்மையில் அவர்கள் குழந்தையாக இருப்பார்கள், தீனா அப்படியானவர். எப்போதும் அண்ணா அண்ணா என்று அன்பைப் பொழிபவர், போலீஸாக அருமையாக‌ நடித்திருக்கிறார். 'வட சென்னை' படத்தில் தான் அவரை சந்தித்தேன், எனக்கு அவர் நடிப்பு பிடித்திருந்தது. இந்தப்படத்தில் எல்லா நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். உண்மையில் அட்டகாசமாக செய்துள்ளார். பிரதீப் அருமையாக சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். 'விக்ரம்' எடுத்த இடத்தில் தான் இப்படத்தை எடுத்தோம், அந்த இடம் என்று தெரியாத வண்ணம் கலை இயக்குநர் வீரமணி அருமையாக செய்து தந்தார். என் ஐந்து படங்களுக்கும் ராம்ஜி தான் கேமராமேன், ஒரு இரவில் நடக்கும் கதையை அருமையாக படம்பிடித்துக்காட்டியுள்ளார். எடிட்டர் அஹமது, மறைந்த நண்பர் ஜனநாதன் அறிமுகப்படுத்திய அருமையான கலைஞர், என்னுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். படம் அருமையாக வந்துள்ளது, பார்த்துவிட்டு சொல்லுங்கள். வெற்றியை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் அதுவும் அவரை ஹீரோவாக வைத்து எடுக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.

 

Sathyas and Sanjitha in Maayavalai

 

அமீரை தொடர்ந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி, இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும் அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. 'வட சென்னை' ராஜன் ரோல் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன், கேரக்டர் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் கேரக்டர் சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேன் என்று நினைத்தார், ஆனால் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் நிறையப் பேசுவோம். 

 

மனித உணர்வுகள் குறித்து ஒரு அருமையான விஷ‌யத்தை இந்தப்படம் பேசுகிறது, தீனா சிறந்த நடிகர், கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் அவராகவே இருக்கிறார், அது அவரது பலம். இந்தப்படத்தில் எல்லோருமே நன்றாக செய்துள்ளார்கள். ரமேஷ், அமீர் எப்போதும் ஒன்றாகவே வருவார்கள், என் படங்கள் பற்றி ரமேஷின் கருத்து மிக உதவியாக இருக்கும். இந்தப்படத்தை நன்றாக செய்துள்ளார். எனக்கு திருப்தியான படமாக இப்படம் வந்துள்ளது. இந்தப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

 

‘மாயவலை’ படத்தின் இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் பேசுகையில், “மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு படம் செய்துள்ளேன், வாய்ப்பு தந்த அமீருக்கு நன்றி. வெற்றிமாறன் அமீரை ராஜனாக காட்டினார். இதில் இன்னொரு விதமான ராஜனை காட்டியுள்ளேன். நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள், அவரது நடிப்பு அருமையாக இருக்கும். வெற்றிமாறன் போன்ற தீவிரமான படைப்பாளி இந்தப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் ராம்ஜி பேசுகையில், “தாழ்வு மனப்பான்மை யாரிடமும் இருக்க கூடாது. உங்கள் திறமை பேசட்டும், பேசும். அமீர் நடிப்பிற்கு எப்போதும் எதிரி நான் தான். ஒரு நல்ல இயக்குநர் நடிக்கக்கூடாது என்றேன், ஆனால் வெற்றிமாறன் 'வட சென்னை' மூலம் மாற்றிவிட்டார். இந்தப்படத்திலும் அமீர் அருமையாக நடித்துள்ளார். வெற்றிமாறனுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் நடிக்க போய்விடாதீர்கள்” என்றார்.

 

Maayavalai Press Meet

 

நடிகர் சத்யா பேசுகையில், “இடையில் எனக்கு பெரிய பிரேக். நடுவில் 'சந்தனதேவன்' படத்தின் நடித்தேன், அதுவும் இடையில் நின்றுவிட்டது. என்ன செய்வது என்று தெரியாத போது தினமும் அமீர் சார் ஆபிஸ் போய்விடுவேன். பின் அவர் ரமேஷ் சாரிடம் எனக்கு இந்த வாய்ப்பை வாங்கித்தந்தார். இது என் ஆரம்பமாக இருக்குமென்று நம்புகிறேன். ஆதரவு தாருங்கள்” என்றார்.

 

நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம், பத்திரிக்கையாளர் நண்பர்களின் ஆதரவு 'மாயவலை'க்கு தேவை. சமுத்திரக்கனி சார் தான் 'விநோதய சித்தம்' பார்த்து அமீர் சார் கூப்பிடுகிறார், போய்ப்பார் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படம் கோவிட் காலத்தில் உருவானது. என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார்கள். மிக போல்டாக நடித்திருக்கிறேன், பார்த்துவிட்டு சொல்லுங்கள். ஆர்யாவின் தம்பி சத்யா என்னுடன் இணைந்து நடித்திருக்கிறார், மிக அழகாக நடித்துள்ளார். அமீர் சாருடன் இணைந்து நடிக்கும் போது நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அவரும் மிக அற்புதமாக நடித்துள்ளார். ராம்ஜி எங்கள் எல்லோரையும் நன்றாக காட்டியுள்ளார். வெற்றிமாறன் சாருக்கு நன்றி, அவர் இந்தப்படத்தில் இணைந்தது பெருமை. மொத்தக் குழுவிற்கும் என் நன்றிகள்.” என்றார்.

 

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், “நானும் அமீர் சாரும் இணைந்து பணிபுரிந்து பல நாட்கள் ஆகி விட்டது, நாங்கள் இணைந்த அனைத்து பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன‌, இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், எங்கள் படம் என்பதற்காக சொல்லவில்லை, இப்படம் பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அமீர் சார் இந்தப் படத்தில் அழகாய் நடித்தது மட்டுமில்லாமல் மிக அழகாகவும் இருக்கிறார். பல ஆண்டுகள் அவருடன் பணியாற்றி வருகிறேன், இந்த பந்தம் மென்மேலும் தொடரும் என்று நம்புகிறேன். இயக்குநர் வெற்றிமாறன் இங்கு இணைந்துள்ளது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பலம், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு மிக முக்கியம், அவருக்கு எங்களது நன்றி. இந்தப் படம் மக்களிடையே ஒரு ஆழமான விதையை விதைக்கும் என்று நம்புகிறேன், உங்கள் ஆதரவை இந்தப் படத்திற்கு கொடுங்கள்” என்றார்.

Related News

9330

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery