Latest News :

தொழில்நுட்பத்தை மையப்படுத்திய விறுவிறுப்பான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜிகிரி தோஸ்த்’!
Thursday November-09 2023

இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அரன்.வி, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜிகிரி தோஸ்த்’. ஷாரிக் ஹாசன், அரன்.வி, அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், அனுபமா குமார், கெளதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா,  ஆர்.என்.ஆர்.மனோகர், சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

தொழில்நுட்பத்தை மையப்படுத்திய விறுவிறுப்பான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து, தற்போது வெளியீட்டுக்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், இயக்குநர் அரன்.வி, ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்கள்.

 

இயக்குநரும், நடிகருமான அரன்.வி படம் குறித்து கூறுகையில், “நான் ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். சில குறும்படங்களையும் இயக்கி இருக்கிறேன். அந்த படங்கள் சைமா உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. என்னுடைய குறும்படத்தை பார்த்துவிட்டு தான் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரதீப் சார் படம் பண்ணலாம் என்றார். அதன்படி, பிரதீப் சார், என்னுடைய நண்பர் அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை நான் தயாரிக்கவும் செய்திருக்கிறேன். இந்த படத்தின் இசையமைப்பாளர் அஷ்வினும் என்னுடைய நண்பர் தான். அதனால், ஜிகிரி தோஸ்த்தான நாங்கள் சேர்ந்து தான் இந்த ‘ஜிகிரி தோஸ்த்’ படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

 

கதைப்படி, பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவரான நான் ஒரு டிவைஸ் கண்டுபிடிக்கிறேன். அதன் மூலம் 500 மீட்டரில் உள்ள செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்க முடியும். அப்படி ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பை சுற்றி தான் கதை நகரும். கல்லூரி நண்பர்களின் ஜாலியான வாழ்க்கை, அதில் ஒரு கண்டுபிடிப்பு அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாகவும், பரப்பாகவும் சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

 

நாயகன் ஷாரிக் ஹாசன் பேசுகையில், “பிக் பாஸ் முடித்துவிட்டு வந்தவுடன் இந்த கதையை அரன் என்னிடம் கூறினார். கதை சொன்ன போதே, ஜாலியாக இருக்கும், மூன்று நண்பர்கள் அவர்களுடைய ஜாலியான வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தான் கதை என்றார், எனக்கும் அது பிடித்திருந்ததால் நடித்தேன். முதலில் என்னிடம் தலைப்பு ஜேடி என்று கூறினார். ஜேடி என்றதும் நான் நிறைய யோசித்தேன், சரக்கு பெயரா என்றெல்லாம் கூட யோசித்தேன். ஆனால், அதுவெல்லாம் இல்லை ‘ஜிகிரி தோஷ்த்’ என்றதோடு, சரக்கடிப்பது போன்ற காட்சிகள் படத்தில் எதுவும் இல்லை என்றார். அப்ப ரொம்ப நல்லதா போச்சு, வாங்க உடனே ஆரம்பிக்கலாம் என்று நடித்தேன். படத்தின் பலமே திரைக்கதை தான், அரன் என்னிடம் சொன்னதை விட படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். நிச்சயம் இந்த படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுக்கும்.” என்றார்.

 

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் விஜே ஆஷிக் படம் குறித்து கூறுகையில், “நான் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன், ஆனால் இந்த படம் எனக்கு மிக முக்கியமான படம், காரணம் படம் முழுவதும் நான் வருகிறேன். நம்ம வேலை உண்டு நாம் உண்டு, தேவையில்லாத பிரச்சினையில் தலையிடக் கூடாது என்று நினைக்கும் ஒரு கதாபாத்திரம், அதே சமயம், பிரச்சினையில் இருக்கும் நண்பர்களை விட்டுவிட்டு போக மனம் இல்லாமல் அங்கே இருக்கும் ஒரு கதாபாத்திரம். ஹீரோவின் நண்பர் வேடம் என்றாலும் திரைக்கதையில் எனக்கும் முக்கியத்துவம் இருக்கும். முழு படமும் விறுவிறுப்பாக பயணிக்கும். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் போல தொழில்நுட்பத்தை மையப்படுத்திய விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகர் கெளதம் சுந்தரராஜன் பேசுகையில், “இயக்குநர் அரன் இயக்கிய குறும்படத்தில் நான் நடித்திருக்கிறேன். அந்த குறும்படம் என்னை வெகுவாக கவர்ந்தது. காரணம், அதில் உள்ள விசயங்கள் அனைத்தும் பாசிட்டிவாக இருக்கும். சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் அனைத்துமே நல்ல விசயங்களை கொண்ட படமாக இருக்கும். அதை தொடர்ந்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன், இந்த படமும் பாசிட்டிவான படம் தான். நல்ல விறுவிறுபான படமாக மட்டும் இன்றி அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. புதுமுக மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்கள், இவர்களுக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும்.” என்றார்.

 

நாயகி அம்மு அபிராமி படம் குறித்து கூறுகையில், “முன்னணி வேடங்களில் நடிக்க தொடங்கிய நேரத்தில், நல்ல நல்ல கதைகள் வராத என்று எதிர்பார்த்த நேரத்தில் தான் இந்த பட வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் என்பதை தாண்டி, நண்பர்களாக நடித்தது தான் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது. தீவிரவாதம், தொழில்நுட்பம், கடத்தல் என்று பல விசயங்கள் படத்தில் இருக்கிறது, அவை அனைத்தும் திரைக்கதையில் அழகாக ஒன்று சேர்ந்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது. நான் ஷாரிக்கின் காதலியாக நடித்திருந்தாலும், என்னுடைய வேடத்திற்கு என்று தனித்துவமான விசயம் இருக்கும், அதில் ஒரு சிறிய திருப்புமுனையும் இருக்கும். அதை இப்போது சொல்ல முடியாது, படத்தை பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். வளர துடிக்கும் இளைஞர்களின் குழு நாங்கள், உங்களுடைய ஆதரவு இருந்தால் படம் நிச்சயம் மக்களிடம் சென்றடையும்.” என்றார்.

 

படத்தில் வில்லனாக நடித்திருக்கும் சிவம், இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தி, ஒளிப்பதிவாளர்  ஆர்.வி.சரன் ஆகியோர் படம் குறித்து பேசுகையில், படத்தின் பலமே திரைக்கதை தான், ரசிகர்களுக்கு போராடிக்காத வகையில் திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்கும். நிச்சயம் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்கள்.

 

பிரதீப் ஜோஸ்.கே மற்றும் அரன்.வி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை எஸ்.பி.அர்ஜுன் மற்றும் ஹக்கா.கே கவனித்துள்ளனர். 

 

வெளியீட்டு தேதி அறிவிப்பதற்கு முன்பாக படத்தை பார்த்த முன்னணி சேனல் ஒன்று ’ஜிகிரி தோஸ்த்’ படத்தின் தொலைக்காட்சி உரிமைத்த பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9334

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery