20 வருடங்களை கடந்து தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்து பல வெற்றிகளை கொடுத்து வரும் நிலையில், அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் மற்றொரு படமாக உருவாகியிருக்கிறது ‘அன்னபூரணி’. இதுவரை நயன்தாரா நடித்திருக்கும் கதாநாயகியை மையப்படுத்திய கதைகள் திகில் மற்றும் த்ரில்லர் வகையானவையாக இருந்த நிலையில், ‘அன்னபூரணி’ முழுக்க முழுக்க அப்பா - மகள் உறவைப்பற்றிய உணர்வுப்பூர்வமான படமாக உருவாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் நிகிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அன்னபூரணி’ படம் பற்றி படத்தின் இயக்குநர் நிகிலேஷ் கிருஷ்ணா கூறுகையில், “என்னுடைய சொந்த ஊர் நாமக்கல், நான் ‘டார்லிங்’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பிறகு இயக்குநர் ஷங்கர் சாரிடம் ‘எந்திரன் 2.0’ படத்திலும், ‘இந்தியன் 2’ படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளிலும் பணியாற்றியிருக்கிறேன். இது என் முதல் படம். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒரு பிராமண குடும்பத்து பெண் இந்தியாவின் சிறந்த சமையல் கலை நிபுணராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது லட்சியத்தில் வெற்றி பெறுவதற்காக அவர் எப்படிப்பட்ட தடைகளை கடந்து வருகிறார், என்பது தான் ‘அன்னபூரணி’ படத்தின் கதை.
இந்த படத்தின் கதையை நான் 2019 ஆம் ஆண்டே எழுத ஆரம்பித்து விட்டேன். ஒரு நாள் என் நண்பருடன் உணவகத்தில் சாப்பிட்ட போது உணவு தொடர்பாக அவருக்கும் அங்கிருந்த சமையல் கலை நிபுணருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது நாங்கள் கதை விவாதத்தில் இருந்தபோது, சமையல் கலை நிபுணர் என்பதை யாரும் பெரிதாக பார்ப்பதில்லை, ஏன் இதை வைத்தே ஒரு கதை எழுதக்கூடாது என்று தோன்றியது. நான் கதை எழுதும்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகள் பிரபலமடையவில்லை. அதுமட்டும் அல்ல, இந்த சமையல் கலை பற்றிய பல விசயங்கள் மற்றும் புரிதல் பலருக்கு சரியாக தெரியவில்லை. அதேபோல், இந்த துறையில் ஆண்கள் ஆதிக்கம் தான் அதிகம், அதில் ஒரு பெண் சாதிக்க நினைத்தால் எப்படி இருக்கும், என்று யோசித்து தான் இந்த கதையை எழுதினேன்.
இப்படி ஒரு கதை எழுத வேண்டும் என்று தோன்றியபோது அதில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அவருக்காகவே இந்த கதையை நான் எழுதினேன். கொரோனா காலக்கட்டத்தின் போது தான் தொலைபேசியில் அவருக்கு இந்த கதையை கூறினேன். முதல் முறையாக 45 நிமிடங்கள் தொலைபேசியில் கதை கேட்டதுமே அவருக்கு பிடித்து விட்டது. குறிப்பாக, அவர் நடித்திருக்கும் கதாநாயகியை மையப்படுத்திய படங்கள் அனைத்துமே திகில், த்ரில்லர், ஆக்ஷன் ஜானர் படங்களாகவே இருந்தது. அந்த தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால், இந்த கதையை கேட்டதும் அவருக்கு பிடித்து விட்டது. கதை கேட்ட முதல் நாளில் இருந்து அவர் கதையோடு ஒன்றிவிட்டார். மேலும், நாம் என்ன சொல்லப்போகிறோம், அதை எப்படி சொல்லப் போகிறோம் என்ற விசயமும் அவருக்கு பிடித்திருந்தது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளின் தாக்கம் எந்த இடத்திலும் வந்துவிட கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்தேன். அதே சமயம், சமையல் கலை நிபுணர்கள் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோரை சந்தித்து நான் சில ஆலோசனைகள் கேட்கவும் செய்தேன். அதே சமயம், மக்களுக்கு தெரிந்தது ஒரு சில சமையல் கலைஞர்கள் தான், ஆனால் தெரியாவர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களை பற்றி படத்தில் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி புட் ஸ்டைலிஷ்ட் என்று சொல்லக்கூடிய உணவு ஒப்பனையாளர் என்ற ஒரு துறை இருக்கிறது. நாம் டிவியில் பார்க்கும் உணவு பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பர படங்களின் பின்னணியிலும் புட் ஸ்டைலிஷ்ட் என்பவர் இருக்கிறார், அவர்கள் மூலம் தான் அந்த விளம்பரங்கள் ரசிகர்களை கவரக்கூடியதாக உருவாகிறது. அப்படி ஒருவர் பற்றி பலருக்கு தெரியாது, அதுபோன்ற கதாபாத்திரங்களை படத்தில் சொல்லியிருகிறோம்.
இந்த படம் உணவு பற்றிய படம் அல்ல, அப்பா - மகள் இடையே இருக்கும் உறவை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் கதை. அதில் ஒரு பெண் சமையல் கலை நிபுணராக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிப்பதை சொல்லியிருக்கிறேன். இதில் நயன்தாராவின் கதாபாத்திரம் லைவாக இருக்கும். யாரடி நீ மோகினி படத்தில் பார்த்த நயன்தாராவை மீண்டும் பார்க்கலாம்.
இதில் ஜெய் நயன்தாராவின் சிறுவயது நண்பராக நடித்திருக்கிறார். நயன்தாராவுக்கு சமையல் கலை நிபுணராக வேண்டும் என்பது லட்சியம் என்றால், ஜெய்க்கு அவரை எப்படியாவது சமையல் கலை நிபுணராக பார்க்க வேண்டும் என்பது தான் லட்சியம். இந்த படத்திற்கு அவரை சிபாரிசு செய்தது நயன்தாரா தான். இந்த கதையை ஜெயிடம் சொன்ன போது, அவர் முழுவதுமாக கேட்டுவிட்டு, ஒரு சிறந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம், அதனால் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார். ஜெய் மற்றும் நயன்தாரா இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது, ‘ராஜா ராணி’ படத்தில் அவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரியை நினைவுப்படுத்துவது போல் இருக்கும்.” என்றார்.
நயன்தாரா மற்றும் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அருள் சக்தி முருகன் வசனம் எழுத, பிரசாந்த்.எஸ் கூடுதல் திரைக்கதை அமைத்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...