Latest News :

’ஹை நான்னா’ எனக்கு பெருமை தரும் படமாக இருக்கும் - நடிகர் நானி நெகிழ்ச்சி
Sunday November-26 2023

நானி மற்றும் மிர்ணாள் தாக்கூர் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹை நான்னா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 7 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் விளம்பர பணிகளில் தீவிரம் காட்டி வரும் நடிகர் நானி, நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.

 

படம் குறித்து பேசிய நடிகர் நானி, “'நான்னா' என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை 'நான்னா' என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம். இது ஒரு மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும். ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என‌ கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும். டிசம்பர் 7 உங்களை திரையரங்குகளில் சந்திக்கிறேன், நன்றி.” என்றார்.

 

தொடர்ந்து பேசியவ, “அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் என பிரிக்க முடியாது. அன்பு ஒன்று தான். அம்மா படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன‌, இப்போது அப்பா படங்கள் வர ஆரம்பித்துள்ளன‌. அது நல்லது எனறே நினைக்கிறேன். 

 

எனக்கு தமிழ்ப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன். ஆரம்பத்தில் தமிழ் இயக்குநர்களோடு வேலை பார்த்தேன். ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் 'பாகுபலி', 'காந்தாரா' போன்ற‌ படங்கள் வந்த பிறகு தமிழ் நடிக‌ர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது, எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும். 

 

நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார். ஒரு மிகச்சிறந்த தமிழ் இயக்குநர், எனக்குப் பிடித்தவர், அவர் எனக்காக ஒரு கதை சொன்னார், விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும். 

 

காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னால் அதை விட பெரிய ஆக்சன் திரில்லர் எல்லாம் கிடையாது. அது பயங்கரமாக இருக்கும். அதை இந்தப்படம் பார்க்கும் போது உணர்வீர்கள். எனக்கு இந்தப்படத்தில் சவாலாக இருந்தது என்னவெனில், நான் ஏற்கனவே 'ஜெர்ஸி'யில் அப்பாவாக நடித்துவிட்டேன் அது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர், மீண்டும் அதே போல் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நடிப்பது தான் சவாலாக இருந்தது. 

 

முன்னர் எல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகிவிடும், 2023ல் கிஸ் பெரிய விசயம் இல்லை. இங்கு கல்யாணம் ஆனவர் இருப்பீர்கள், மனைவியை முத்தம் கொடுக்காமல் யாராவது இருப்பார்களா? முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது, முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை.  

 

நம் வாழ்க்கையில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள், படத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? என் படத்தில் அவர்கள் பெரிய இடம் வகிப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தப்படம் ஆண் பெண் உறவை மிகச்சிறப்பாக பேசும் படமாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் சிறப்பான படைப்பாக இருக்கும்.” என்றார்.

 

வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஷெளர்யுவ் இயக்கியுள்ளார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். பிரவீன் அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார்.

Related News

9370

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...