Latest News :

”நாடு மிக மோசமான காலகட்ட்த்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது” - வருத்தப்பட்ட பா.இரஞ்சித்
Monday January-22 2024

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெயக்குமார் ‘ப்ளூ ஸ்டார்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.கனேஷ் மூர்த்தி, ஜி.சவுந்தர்யா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி, பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பா.இரஞ்சித், “இயக்குநர் ஜெய் இந்த இடத்தில்  இந்த மேடையில்  இருப்பது, பேசியது  எனக்கு  மிகவும்  மகிழ்ச்சி  அளிக்கிறது.  ஜெயக்குமார்  எந்தளவிற்கு எமோஷ்னலாக  இருக்கிறானோ  அதே  அளவிற்கு  நானும்  எமோஷ்னலாக இருக்கிறேன்.  இப்படத்தின்  தயாரிப்பாளர்  கணேஷமூர்த்தி  சாருக்கு மகிழ்ச்சி.  எங்கள்  தயாரிப்பில்  உருவாகும்  படங்களில்  எப்பொழுதும் ஏதாவது  பிரச்சனைகள்  இருக்கும்.  ஆனால்  சென்சாருக்கு சென்ற படம் ரிவைசிங்  கமிட்டிக்கு  போய்  திரும்பி வருவது  இது  ஒன்று  தான்.  யுஏ தந்திருக்கிறார்கள்.  எடிட்டர்  செல்வா  ஒரு  கமர்ஸியல்  எடிட்டர்.  அவன் இப்படம்  கமர்ஸியலாக  வெற்றி  பெறும்  என்று  கூறினான்.  பார்க்கலாம். இப்படத்தில்  நடிகர்  நடிகைகள்  மற்றும்  தொழில்நுட்பக்  கலைஞர்கள் அனைவருமே  சிறப்பாக  உழைத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு  அந்த உழைப்புக்கு  ஏற்ற  வெகுமதி  வாழ்த்துக்கள்  கண்டிப்பாக  கிடைக்கும்  என்று நம்புகிறேன்.  இப்படம்  மிகச்சிறப்பான  படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஜெயக்குமார் எப்படி  மியூசிக்  வாங்கப்  போகிறான்  என்று  நினைத்தேன். நான் தான் இசை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்ரு கூறிவிடு, அவர் வேறு ஒன்று தருவார் என்று சொல்லி அனுப்பினேன். ஆனால்  ஜெய்  மற்றும்  கோவிந்த் வசந்தாவிற்குமான அன்பும்  பிணைப்பும்  புரிதலும் மகிழ்ச்சியளிக்கிறது.  மிகச்சிறப்பான  இசையைக்  கொடுத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா.  இன்று  அவரின்  பாடல்கள்  ப்ளூ ஸ்டார்  படத்தின் முகவரியாக  மாறி  இருக்கிறது.  அந்த  உழைப்பிற்கு  நன்றி.   

 

நான்,  இயக்குநர்  ஜெயக்குமார் மற்றும்  தினகர் மூவரும்  நெருங்கிய நண்பர்கள்.  ஒரு  எண்ட்ரன்ஸ் தேர்வுக்கான  மையத்தில்  படிக்கப்  போகும்  போது தான்  பழக்கம்  ஏற்பட்டது.  கல்லூரியில்  படிக்கும்  காலத்தில்  முதலாண்டில் நான் இயக்குநராக  வேண்டும்  என்று  முடிவு  செய்தேன்.  ஆனால் ஜெயக்குமாரும்  தினகரும்  அனிமேட்டராக  வேண்டும்  என்று  முடிவு செய்தார்கள். பின்னர்  நான்  உதவி  இயக்குநராக  பணியாற்றும்  பொழுது,  அவர்கள் இருவரும்  சம்பாதிக்கத்  துவங்கிவிட்டார்கள்.  பின்னர்  நான்  கபாலி  படம் செய்யும் போது,  தினகர்  என்னிடம்  உதவி  இயக்குநராக  பணியாற்ற வந்தான்.  நான்  மிகவும்  கோபப்பட்டேன்.  நீ  அனிமேட்டராக  வேண்டும் என்றுதானே  நினைத்தாய்  என்று  கேட்டேன்.  இல்லை  நான்  இயக்குநராக வேண்டும்  என்று  பிடிவாதமாக  இருந்தான்.  அதனால்  அவனை  உதவி இயக்குநராக  சேர்த்துக்  கொண்டேன்.  பின்னர்  ஜெயக்குமார்  என்னிடம் காலா  திரைப்படத்தில்  வந்து  சேர்ந்து  கொண்டான்.  என்  நண்பர்கள் என்னிடம்  உதவி  இயக்குநராக  பணியாற்ற  வந்த பொழுது  நான் அசெளகர்யமாக  உணர்ந்தேன்.  ஏனென்றால்  மற்ற  உதவி  இயக்குநர்களிடம் வேலை  வாங்குவது போல்  அவர்களிடம்  வேலை  வாங்க  தயக்கமாக இருந்தது.  ஆனால்  அவர்களுக்கு  எந்த  முன்னுரிமையும்  கொடுக்காமல்  பிற உதவி இயக்குநர்களை  எப்படி  நடத்துவேனோ  அது  போலவே  அவர்களையும் நடத்தினேன்.  அவர்களும்  அதை  புரிந்து  கொண்டனர்.  

 

ஜெயக்குமார்  இயக்கிய டாக்குமெண்ட்ரியை  பார்த்ததும்  மிரண்டு  விட்டேன்.  அவனை  நீ  சீக்கிரமே படம் செய்  என்று  உற்சாகப்படுத்தினேன்.  ஆனால்  அவனிடம்  இருந்து  நான் வேறு மாதிரியான படைப்பைத் தான் எதிர்பார்த்தேன்.  அவன் தன் வாழ்க்கையில்  நடந்த  சில  நிகழ்வுகளை  எடுத்துக்  கொண்டு  கமர்ஸியல் லைனில்  ஒரு  படம்  செய்வான்  என்று  எதிர்பார்க்கவில்லை.  அவன் வாழ்க்கையில்  இப்படி  ஒரு  காதல்  இருந்தது,  ப்ருத்வி  செய்த  கதாபாத்திரம் தான் ஜெயக்குமார் என்பதெல்லாம்  அப்போது  தெரியாது.  தெரிந்திருந்தால் அவனுக்கு  திருமணம்  செய்து வைக்க  இவ்வளவு  கஷ்டப்பட்டு இருக்கமாட்டோம்.  கல்லூரியில்  அவனைப்  பார்க்கவே  பயமாக  இருக்கும்.  என்ன சொன்னாலும் கோபித்துக் கொள்வான். அவனை சமாதானப்படுத்தவே மூன்று நாட்கள் ஆகும். எப்பொழுதும்  சுவற்றில்  கைகளால்  குத்திக்  கொண்டு  குங்ஃபூ  பயிற்சி எடுத்துக்  கொண்டிருப்பான்.  தினகரும்  விரைவில்  அவன்  எடுத்து  வரும் படத்தின்  வெளியீட்டு  விழாவில்  உங்களை  சந்திப்பான். கீர்த்தி பாண்டியன் மிக  தைரியமாக  மேடையில்  பேசி  இருக்கிறார்.  அவருக்கு  வாழ்த்துக்கள். இன்று  நம் நாடு மிக மோசமான காலகட்ட்த்தை  நோக்கிப்  போய்  கொண்டு இருக்கிறது.  அதைத்  தடுப்பதற்கு  எவ்வளவு தூரம்  திரைப்படக் கலையைக் கொண்டு  போராட  முடியுமோ,  நாமெல்லாம்  இணைந்து  அதற்காக போராடுவோம்.  படத்தில்  நடித்த  பிற கலைஞர்கள்,  தொழில்நுட்பக் கலைஞர்கள்  அனைவருக்கும்  வாழ்த்துக்களும்  நன்றியும். மகிழ்ச்சி.”  என்றார்.

 

Blue Star Audio Launch

 

நாயகன்  அசோக்செல்வன் பேசுகையில், “இப்படம் எனக்கு  மிகவும்  ஸ்பெசல்,  ரொம்பவே  பெர்ஷனலும் கூட..  ஏன் என்று கேட்டால்  இந்தக் கதையா..??  இல்லை இக்கதையில் இருக்கும் அரக்கோணம் மக்களா.. ??  அவர்களின் வாழ்க்கை என் வாழ்க்கையோடு ஒத்துப் போனதா..? என்று  சொல்லத்  தெரியவில்லை.  வாய்ப்பு  தேடி  அலையும்  காலத்தில் யாரும்  அரவணைத்து  ஆறுதல்  கூறி,  நம்பிக்கை  கொடுக்கமாட்டாரக்ளா.. என்று  ஏக்கம்  இருக்கும்.  அப்படி  ஏங்கிக்  கொண்டிருக்கும்  அத்தனை இளைஞர்களுக்கும்  ப்ளு  ஸ்டார்  நம்பிக்கையை  கொடுத்து,  ஜெயிக்கிறோம் என்கின்ற  உத்வேகத்தைக்  கொடுக்கும்  படமாக  அமைந்திருக்கிறது.  ப்ளூ ஸ்டார்  திரைப்படம்  எனக்கு  அத்தனையையும்  கொடுத்திருக்கிறது.  நான் வாழ்ந்த  வாழ்க்கையை  திரையில் நடிக்கும்  வாய்ப்பைக்  கொடுத்திருக்கிறது.   மனைவியை  கொடுத்திருக்கிறது.  சிலர்  பேசுவதற்கும் செய்கின்ற  செயலுக்கும்  சம்பந்தமே  இருக்காது.  பா.ரஞ்சித்  அவர்கள்  என்ன பேசுகிறாரோ..  அது  போலவே  நடப்பவர்.  அந்த  மாதிரியான  மனிதர்களை நான்  பார்த்ததில்லை.  

 

அவரை  சூது கவ்வும்  சக்சஸ்  பார்ட்டியில்  முதன் முறையாக  பார்த்தேன்.  சிறப்பாக  ஆடிக்  கொண்டிருந்தார்.  அன்று  எப்படி இருந்தாரோ  இன்றும்  அதே   போல்  தான்  இருக்கிறார்.  கோவிந்த்  வசந்தா எங்கள்  வாழ்க்கைகான  மிகச் சிறந்த  ஆல்பத்தைக்  கொடுத்திருக்கிறார். அவருக்கு  ஸ்பெஷல்  தேங்க்ஸ்.  எந்தப்  பட்த்தின்  ஆடியோ  வெளியீட்டிலும் நான் இவ்வளவு பேசியதில்லை. இப்படத்தில் நான் பேசுகிறேன் என்றால், இப்படத்தை  நான் மிகவும்  ஸ்பெஷலாக  உணர்வதால் தான். எனக்கே சந்தேகமாக  இருக்கிறது.  ஒருவேளை  நான்  போன  ஜென்மத்தில் அரக்கோணத்தில்  பிறந்திருப்பேனோ  என்று.  என்னுடன்  நடித்த  சாந்தனு மற்றும்  ப்ருத்வி  இருவருமே  எனக்கு  சகோதரகள்  போன்றவர்கள். சக்திவேலன்  கூறியது  போல்  நாங்கள்  இருவரும்  மூன்றாவது  வெற்றிக்காக காத்துக்  கொண்டு  இருக்கிறோம்.  அந்த  வெற்றியை  ப்ளூ ஸ்டார் கண்டிப்பாக  கொடுக்கும்  என்கின்ற  நம்பிக்கை  எனக்கும்  எங்கள் படக்குழுவிற்கும்,  சக்திவேலன்  அவர்களுக்கும்  இருக்கிறது.  எப்போதும் போல்  பத்திரிக்கை  நண்பர்களான  உங்களின்  ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

 

படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன்  பேசுகையில், “இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது.  அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும் இயக்குநர் ஜெயக்குமாரும் பைக்கில் 15 நிமிடத்திற்கும் மேல் அலைந்து திரிந்தோம். பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்து கதையை என்னிடம் இயக்குநர் விளக்கினார்.  கதை பிடித்திருந்த்தால் நான் நடிக்க சம்மதித்தேன். படத்தின் துவக்கத்தில் இருந்தே  இயக்குநர் என்னிடம் இந்தக்  கதாபாத்திரம்  உங்களுக்கு  பிடித்திருக்கிறதா.. ??  என்று  கேட்டுக் கொண்டே  இருந்தார்.  ஆனால்  எனக்கு  இப்படத்தின்  கதாபாத்திரங்கள்  எல்லாமே   பிடித்திருந்த்து.  இப்படத்தில்  இயக்குநர்  ரஞ்சித்  இருக்கிறார் என்று  தெரிந்ததுமே  எல்லோருமே  என்ன  அரசியல்  பேசத் துவங்கிவிட்டீர்களா..??  என்று கேட்கிறார்கள்.  நான் அவர்களைப் பார்த்து பேசினால்  என்ன  தவறு  என்று  கேட்கிறேன்..?  நாம்  உண்ணும்  உணவு  உடை என்று  ஒவ்வொன்றிலும்  இன்று  அரசியல்  இருக்கிறது.  நம்  வாழ்க்கையிலும் அரசியல்  இருக்கிறது.  நாம்  அரசியல்  பேசாமல்  தவிர்ப்பதால்  நம் வாழ்க்கையில்  அரசியல்  இல்லை  என்று  ஆகிவிடாது.  இன்று மிகமிக முக்கியமான நாள்.  இன்று  நாடு  இருக்கின்ற  சூழலைப்  பார்க்கும் போது பாடலாசிரியர்  அறிவு  அவர்கள்  பாடிய  வரிகளின்  படி, “ காலு மேல காலு போடு ராவணகுலமே ” என்று பாடத்  தோன்றுகிறது. ” என்றார்.

 

Ashok Selvan and Keerthy Pandian in Blue Star

 

’ப்ளூ ஸ்டார்’ படத்தின் இயக்குநர்  ஜெயக்குமார்  பேசுகையில், “எனக்கு  மேடையில்  பேச வராது. எடிட்டர்  செல்வாவிடம்  நேற்று கூட  கண்டிப்பாக  நான் வரணுமா..  இல்லை அப்படியே ஓடிவிடவா..??  என்று  கேட்டேன்..  பதட்டத்தில்  இப்பொழுது தயாரிப்பாளரின்  பெயரைக்  கூட  மறந்துவிட்டேன்.  இது  இசை வெளியீடு என்பதால்  கோவிந்த்  வசந்தாவிடம்  இருந்து  துவங்குகிறேன்.  அவரோடு பணியாற்றியது  மிகச்சிறப்பான  அனுபவம்.  எனக்கு  இசை  குறித்தெல்லாம் பெரிதாக  தெரியாது.  சொல்லப்  போனால்  எதுவுமே  தெரியாது.  எல்லாம் நான்  கற்றுக்  கொண்டது  ரஞ்சித்திடம்  இருந்து  தான்.  ரஞ்சித்  என் பக்கத்தில்  இருப்பதால்  சற்று  தைரியமாக  இருக்கிறது.  இக்கதை என் பெர்ஷ்னல்  லவ்  ஸ்டோரி  என்கிறார்கள்.  ஆனால்  அது  உண்மை  இல்லை. என்னைப்  பார்த்தெல்லாம்  யாரும்  “ஒரு  விஷயம்  உன்னை  அழ  வைக்கிறது என்றால்,  அந்த  விஷயத்திற்கு  நீ  உண்மையாக  இருக்கிறாய் ” என்று சொன்னதில்லை.  இப்படத்தை  பொறுத்தவரை  அறிவு  மற்றும்  கோவிந்த் வசந்தா  இருவரும்  பக்க பலமாக  இருந்தார்கள்  அவர்களுக்கு  நன்றி.  எனக்கு எப்போதும்  உறுதுணையாக  இருக்கும்  நண்பனும்  எங்கள்  படத்தின் தயாரிப்பாளருமான  பா.ரஞ்சித்துக்கு  அன்பும்  நன்றியும் ” என்றார்.

 

Blue Star Audio Launch

 

படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த்  வசந்தா பேசுகையில், “அனைவருக்கும்  நன்றி,  ஸ்பெஷல் தேங்க்ஸ்  டூ  அறிவு.  எனக்கு  கம்போசிங்கில்  நிறைய  உதவிகள்  செய்தார். ரஞ்சித் சார்  படங்களில்  நானும்  இருப்பது  எனக்கு  மிகவும்  பெருமை. இப்படத்தின்  கம்போசிங்  எனக்கு  மிகவும்  ஜாலியாக  இருந்தது. ஜெயக்குமார்  மிகச்சிறந்த  மனிதர்.  இப்பட்த்தின்  பின்னணி  இசையை  மிக ஜாலியாக  உருவாக்கினோம்.  இப்படக் குழுவினர்  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

Related News

9465

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...