Latest News :

”சாய் தான் நன்றி மறக்காமல் இருக்கிறான்” - ’இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’ இயக்குநரை பாராட்டிய ஜெய் ஆகாஷ்
Friday January-26 2024

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், பெண் பாதுகப்பை மையப்படுத்தும் விதமாகவும் உருவாகியுள்ள திரைப்படம் ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’. ‘யோக்கியன்’ படத்தை இயக்கிய சாய் பிரபா மீனா இயக்கியிருக்கும் இப்படத்தை சாய் ராம் ஏ.வி.ஆர் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் எஸ்.பி.எம் பிக்சர்ஸ் சாய் சரண் இணைந்து வழங்க, ராம்குண்டலா மற்றும் ஆஷா தயாரித்திருக்கிறார்கள்.

 

பெண்களை மையப்படுத்திய இப்படத்தில் இயக்குநர் சாய் பிரபா மீனா வில்லனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ராஜ் மித்ரன், மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ஆஷா, கவிதா, சங்கீதா, கீர்த்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகை ஷகீலா கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

 

பால்பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் ராம் இசையமைத்திருக்கிறார். நவீன் குமார் படத்தொகுப்பு செய்ய, கிரண்ட் மற்றும் பண்டு கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். சூப்பர் குட் ஜீவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் சாய் பிரபா மீனா, “இந்த இடத்தில் நான் நிற்க காரணம் என் ஆசான் ஜெய் ஆகாஷ் அவர்கள் தான், அவருக்கு என் நன்றி. சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்பு செல்வன் மிகப்பெரும் ஆதரவைத் தந்தார். தயாரிப்பாளர் ராம்குண்டலா ஆஷா அவர்கள் தான் படத்தை நம்பி எனக்கு வாய்ப்பு தந்து தயாரித்தார்கள்.  ஷகிலா மேடம் படபடவென பட்டாசு போல் நடித்து முடித்தார். மீசை ராஜேந்திரன் சார் நன்றாக நடித்து தந்தார். ஜெய் ஆகாஷ் சார் மூலம் தான் எனக்கு இங்குள்ள அனைவரையும் தெரியும். எல்லோருக்கும் என் நன்றிகள். பெண்களை மையப்படுத்தி, அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இந்தப்படத்தை எடுத்துள்ளேன். ஒளிப்பதிவாளர் மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார். இசையமைப்பாளரை நான் நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன். இப்படத்தில் படம் நன்றாக வரவேண்டுமென எல்லோருடனும் சண்டை போட்டுள்ளேன். ஆனால் அவர்கள் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். சின்ன படம் பெரிய படம் என எதுவும் இல்லை அதை வைத்து மனிதர்களின் திறமையை எடை போடாதீர்கள். உலகமே கிறுக்கன் என சொன்ன எலான் மஸ்க் இன்று உலகையே ஆளுகிறார். எனில் என்னைமாறி இளைஞர்களும் ஜெயிக்க முடியும் என நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்.” என்றார்.

 

சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் ஜெய் ஆகாஷ் பேசுகையில், “இயக்குநர் சாய் பிரபா என் தம்பி மாதிரி. எனக்காக என்னவேணாலும் செய்வான். அவனுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்று எடுத்த படம் தான் யோக்கியன். இப்போது அவனே அவன் முயற்சியில் இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் படத்தை இயக்கியுள்ளான். டிரெய்லர் ஷாட்ஸ் எல்லாம் நன்றாக வந்துள்ளது. படத்தில் இருக்கும் அனைவரும் என் நண்பர்கள் தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளனர். நான் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் சாய் தான் நன்றி மறக்காமல் இருக்கிறான். இவனிடம் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது அவன் ஜெயிக்க வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

Enime Naangadha Headlines

 

நடிகர் சம்பத் ராம் பேசுகையில், “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்,  இந்த டைட்டிலுக்காகவே இயக்குநர் சாய் பிரபாவை பாராட்டுகிறேன். எல்லோரும் ஹெட்லைன்ஸில் வர ஆசைப்படுவார்கள். இந்த சின்ன வயசில் ஒரு படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.  பெரிய இயக்குநராக வர அவருக்கு என் வாழ்த்துக்கள். படத்தில் ஸ்டண்ட் சூப்பர் குட் ஜீவா சூப்பராக செய்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிகப்பெரியவெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆர். கே. அன்பு செல்வன் பேசுகையில், “இயக்குநர் முதலில் யோக்கியன் என ஒரு படம் எடுத்தார்.  அது ரிலீஸாகி ஆறு மாதத்திற்குள் அடுத்த படத்தை எடுத்து டிரெய்லர் விழாவிற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் சாய் பிரபா. அவரது திறமைக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வேண்டும். இப்போதெல்லாம் காசு வாங்கிக் கொண்டு மேடைக்கு வந்து அவர்களுக்கு தோன்றுவதையும், படஹீரோக்களையும் திட்டி பேசிவிட்டுபோகிறார்கள். படம் பற்றி பேச மறுக்கிறார்கள். இது மாற வேண்டும். சினிமாவில் யாரையும் ஏமாற்றக்கூடாது. நான் இருக்கும் வரை யாரையும் ஏமாற்ற விடமாட்டேன் எனக்கூறி விடை பெறுகிறேன் நன்றி.” என்றார்.

 

நடிகை ஷகீலா பேசுகையில், “எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நாட்கள் மட்டும் தான் வேலை பார்த்தேன் எனக்கு நல்ல வேடம் தந்தார் இயக்குநர். ஜெய் ஆகாஷ்  படைப்பாளியை உருவாக்கியதற்காக  என் நன்றிகள். நான்கு பெண்கள் மேக்கப் இல்லாமல் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளனர். எல்லோருமே சின்ன இயக்குநராக இருந்து, சின்ன நடிகராக இருந்து தான் பெரியாளாக ஆகிறார்கள். இப்படம் பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார். 

 

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசுகையில், “என்னை சினிமாவிலும் அரசியலிலும் அறிமுகப்படுத்திய தலைவர்  விஜயகாந்த் அவர்களுக்கு என் வணக்கம். கேப்டன் 53 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள். என் வெற்றிக்கு என் வாழ்வுக்கு காரணம் சினிமா தான். சினிமா பலரை வாழவைக்கிறது. சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சினிமா தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன், மிகப்பெரிய உழைப்பாளி.  இந்தப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் பிர்லா போஸ் பேசுகையில், “சினிமாவின் 24 கிராப்டிலும் தேர்ந்த திறமை கொண்டவர் ஜெய் ஆகாஷ். மிகப்பெரிய ஆளுமை. அவர் படத்தில் வேலை பார்த்தாலே எல்லாம் கற்றுக்கொள்ளலாம். சாய் பிரபாவும் மிகத் திறமையானவர், மிக கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம்   மிகப்பெரிய படம்.  நடிகர் சங்கத்திற்கு திரு விஜயகாந்த் அவர்களின் பெயரை வைக்க வேண்டுமென எல்லோரும் சொல்லி வருகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் முதலில் நன்றாக வரவேண்டும் அதற்கு என் சம்பளத்தில் ஒரு பகுதியை இந்த மேடையில் தருகிறேன். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.” என்றார்.

 

தேசிய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஐ ஜே கே,  ஜி பூபதி பேசுகையில், “மிக நல்ல தலைப்பை வைத்துள்ளார் இயக்குநர்.  ஒரு நிகழ்ச்சியில் இயக்குநரின் பேச்சைக் கேட்டு ஆர்வமாகி அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருடன் படம் செய்யலாம் என்று கேட்டேன். அப்போது இந்தப்படம் முடிந்தவுடன் செய்யலாம் என்றார். இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார் இயக்குநர். கண்டிப்பாக அவரது உழைப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் சமூகத்திற்கு தேவையான படைப்பை தந்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார். 


Related News

9479

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery