சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் நகைச்சுவை நடிகராக அடையாளம் காணப்பட்ட அப்புக்குட்டி, ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானதோடு, தனது முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்று தன்னை சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்தார். அப்படத்தை தொடர்ந்து ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நகைச்சுவைத்தனம் கலந்த வில்லத்தனத்தில் நடித்தவர், சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் வில்லனாக விஸ்வரூபம் எடுத்து திரையுலகினரை வியக்க வைத்தார்.
பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தன்னை நிரூபித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் அப்புக்குட்டி, தற்போது பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருவதோடு, காமெடி வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தனது சினிமா பயணம் குறித்தும், தான் நடிக்கும் தற்போதைய படங்கள் பற்றியும் பகிர்ந்துக்கொண்டார்,
அப்புக்குட்டி என்ற அடையாளத்தை எனக்கு கொடுத்த ’வெண்ணிலா கபடிக்குழு’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. அப்படத்தின் வாய்ப்பு மற்றும் அதில் நடித்ததை நினைத்தால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் நடிக்கும் போது அந்த வேடத்தில் நான் தான் நடிக்கப்போகிறேன் என்பது கூட எனக்கு தெரியாமல் தான் சென்றேன். ஆனால், அந்த வேடம் தான் எனக்கு இன்று வரை அடையாளமாக இருக்கிறது. காமெடி தான் எனது பலம், காமெடியனாக நடிக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்த எனக்கு, மீண்டும் சுசீந்திரன் சார் மூலமாகவே நாயகனாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது பேரதிர்ச்சியாக இருந்ததோடு, பயமாகவும் இருந்ததுய். ஆனால், சுசீந்திரன் சார் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த படத்தில் கடுமையாக உழைத்தேன், அதற்கான அங்கீகாரமாக தேசிய விருது கிடைத்தது எனக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது.
இப்போதும் தொடர்ந்து பல படங்களில் காமெடி, வில்லன், குனச்சித்திர வேடம் என்று எப்படி நடித்தாலும் அதற்கான முதல் பாராட்டு இயக்குநர்களுக்கு தான். அவர்கள் தான் என்னை அவர்களுடைய வேடத்தில் பொருத்தி பார்த்து என் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அதேபோல், ரசிகர்களும் நான் எந்த வேடத்தில் நடித்தாலும் என்னை அந்த கதாபாத்திரமாக ஏற்றுக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியளிப்பதோடு, என்னால் எப்படிப்பட்ட வேடத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.
நான் கதையின் நாயகனாக நடித்து அடுத்து வெளியாக இருப்பது ‘வாழ்க விவசாயி’ மற்றும் ‘பிறந்தநால் வாழ்த்துகள்’. இந்த இரண்டு படங்களும் சமூகத்திற்கான படங்கள். வாழ்க விவசாயி படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இயக்குநர் அனுப்பியிருக்கிறார். அதனால் படம் வெளியீடு தள்ளிப் போகிறது. பொன்னி மோகன் இயக்கியிருக்கும் ’வாழ்க விவசாயி’ படம் எனது நடிப்புக்காக மட்டும் இன்றி, திரைப்படமாகவும் மிகப்பெரிய பாராட்டையும், வரவேற்பையும் பெறும்.
ராஜூ சந்திரா இயக்கத்தில் நான் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படமும் சமூகத்திற்கான ஒரு படமாக உருவாகியிருக்கிறது. ஆனால், அது அப்படியே வேறு ஒரு பாணியிலான படம். போதையால் சமூகம் எப்படி சீரழிகிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், அதைப் பற்றி திரைப்படங்களில் பெரிய அளவுக்கு பேசப்படுவதில்லை. அந்த குறையை போக்கும் விதமாக பிறந்தநாள் வாழ்த்துகள் இருக்கும். நல்ல விசயங்களை சொன்னாலே அதை ஏதோ கலைப்படம் என்று நினைத்துவிடுகிறார்கள். ஆனால், நம்ம படம் அப்படி இருக்காது, நீங்க ரசிக்க கூடிய விதத்தில் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்கும்.
இந்த இரண்டு படங்களை தவிர மேலும் சில படங்களில் கதையின் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் தயாரிப்பு தரப்பு அப்படங்கள் பற்றி இன்னும் அறிவிக்காததால் அதைப்பற்றி பேச முடியவில்லை. அடுத்தடுத்த சந்திப்புகளில் பேசலாம்.
நான் தொடர்ந்து கதையின் நாயகனாக நடிப்பதால், காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று எப்போதுமே சொன்னதில்லை, சொல்லவும் மாட்டேன். இப்போதும் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறேன், இனியும் நடிப்பேன். காமெடி வேடங்கள் மட்டும் இன்றி குணச்சித்திரம், வில்லன் என்று அனைத்து கதாபாத்திரத்திற்கும் நான் பொருந்துவதால், தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்க கூடிய வாய்ப்புகள் என்னை தேடி வருகிறது என்று நினைக்கிறேன்.
சினிமாவில் நான் யாரையும் போட்டியாக பார்ப்பதில்லை, என் வேலையை சரியாக செய்ய வேண்டும் அது தான் என் நோக்கம். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டும், ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும், இதை சரியாக செய்தால் போதும் என் இடம் எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்.
என்றவரிடம், அஜித்துடன் நடித்துவிட்டீர்கள், விஜயுடன் எப்போது நடிப்பீர்கள்? என்பதற்கு, “எனக்கும் அந்த ஆசை இருக்கிறது, அதற்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். அஜித் சார், விஜய் சார், ரஜினி சார் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை இந்த வருடம் நிறைவேறினால் அதை விட சந்தோஷம் வேறு இல்லை.” என்றார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...