Latest News :

”புகழிடம் நிறையத் திறமை இருக்கிறது” - புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி
Thursday February-08 2024

கதாநாயகர்களான காமெடி நடிகர்கள் பட்டியலில் தற்போது புகழும் இணைந்துள்ளார். சினத்திரை மூலம் பிரபலமான புகழ், வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதிலும், கதையின் நாயகனாக நடிக்க கூடிய வாய்ப்பும் அவருக்கு விரைவாக கிடைக்க, தற்போது காமெடி நடிகர் புகழ் கதாநாயகன் புகழாக உருவெடுத்துள்ளார்.

 

புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படத்தை ஜெ4 ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ராஜரத்தினம் மற்றும் டி.ஜெபா ஜோன்ஸ் இணைந்து தயாரிக்க, ஜெ.சுரேஷ் இயக்குகிறார். ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, “நடிகர் சூரி பேசுகையில், “இந்தப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றி. முழுக்க காட்டுக்குள் படம் எடுத்துள்ளார்கள். காட்டுக்குள் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். மூன்று வருடம் காட்டுக்குள் நானும் படத்தில் நடித்திருக்கிறேன். புலி ஊருக்குள் வந்துவிட்டது என்கிறார்கள், ஆனால் நாம் தான் காட்டை ஆக்கிரமித்துள்ளோம். நாம் தான் அதனுடைய இடத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் நல்ல கருத்துடன் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள், வாழ்த்துகள். தம்பி புகழ் இன்னும் பல உச்சங்கள் செல்வான், அவனுக்கு வாழ்த்துகள்.  யுவன் இருக்கிறார் என்றார்கள் அவர் இருந்தாலே வெற்றி தான். என் 'கருடன்' படத்திற்கும் இசையமைக்கிறார். எப்போதும் திரையுலகில் அவர் ராஜ்ஜியம் தான். அவருக்கு என் நன்றி. புகழிடம் நிறையத் திறமை இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் அவன் பெயர் நுழைந்துள்ளது.  அவனிடம் நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. அவன் ஜெயிக்க வேண்டும், அதை விட அவன் நிலைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷ் மிகத் திறமையானவர், அவருக்கு வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள்.” என்று வாழ்த்தியதோடு, நடிகர் புகழை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

 

இயக்குநர் சுரேஷ் பேசுகையில், “இப்படத்தைச் சிறப்பாகக் கொண்டுவரக் காரணமாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என் முதல் நன்றி. சூரி என் நண்பர், மிக மிக அடக்கமானவர், அவர் காட்டும் பணிவு வியக்க வைக்கும். இந்த பணிவு உங்களைப் பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும். இந்தப்படத்தின் மிகப்பெரிய தூண் யுவன். எனது 25 ஆண்டு கால நண்பர் அவர். சிறு வயது முதல் அவரைத் தெரியும். இந்தக் கதையை முதலில் சொன்னதே யுவனிடம் தான். பின்னர் தொலைக்காட்சியில் புகழின் ஒரு ஷோ பார்த்தேன். அவரை வரவைத்துக் கதை சொன்னேன், அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் படத்திற்குத் தயாரிப்பாளர் யாரும் சரியாகக் கிடைக்காமலிருந்தது. அப்போது தான் ஜோன்ஸ் அறிமுகமானார் அவரிடம் சொன்ன போது,  உடனே ஆரம்பிக்கலாம் என்றார். படம் அப்படித்தான் உருவானது. புகழ் இப்படத்திற்காகத் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். கதை விவாதத்திற்கே எங்களுடன் வந்துவிடுவார். படம் முழுக்க புலியுடன் நடித்துள்ளார். புகழுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. புலியை வைத்து ஷூட் செய்தது மிகப்பெரிய பாடமாக அமைந்தது. கதாநாயகியாக நடித்துப் ஏற்கனவே பிரபலமான ஷிரினுக்கு நன்றிகள். தன்வீர் மிக அட்டகாசமாக ஒளிப்பதிவு  செய்துள்ளார். இந்தப்படம் எந்த ஆபாசமும் இல்லாத ஒரு ஃபீல் குட் மூவி. உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.” என்றார். 

 

நடிகர் புகழ் பேசுகையில், “தம்பிக்காக வருவேன் என வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி.  என்னை அறிமுகப்படுத்திய தாம்சன் சாருக்கு நன்றி. இதே பிரசாத் லேபுக்கு வெளியே கார் வாஷ் கடையில் வேலை செய்துள்ளேன், இலை எடுத்திருக்கிறேன், இன்று இங்கு என் படம் இசை விழா நடப்பது மகிழ்ச்சி.   இயக்குநர் என்னை அழைத்து நீ ஹீரோ, புலியுடன் நடிக்க வேண்டும் என்றார். ஓகே சார் பண்ணிடலாம் என்றேன். யுவன் சார் மியூசிக் என்றார் ஆனால் ஷூட் ஒரு வருடம் ஆகும் என்றார். அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜத்திலேயே புலியைக் கூட்டி வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள்.  ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன். இப்படத்தை நம்பி முழு ஆதரவு தந்த  தயாரிப்பாளர்களுக்கு  நன்றி. பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த ஷிரின் அவர்களுக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். ராதிகா மாஸ்டர், ஃபைட் மாஸ்டர் எல்லோருக்கும் என் நன்றிகள். பெரிய பெரிய ஹீரோ படங்களுக்கு மியூசிக் போடும் யுவன் சார் எனக்காக இசை அமைத்ததற்கு நன்றி.  எல்லோருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

Mr Zoo Keeper

 

தயாரிப்பாளர் டி. ஜெபா ஜோன்ஸ் பேசுகையில், “என்னுடைய தயாரிப்பில் இது ஏழாவது திரைப்படம்.  சின்ன பட்ஜெட்டாக ஆரம்பித்த படம், இப்போது பெரிய படமாக வந்துள்ளது. இதுவரை திரையுலகில் இல்லாத வகையில் நிஜமான புலியை வைத்துப் படத்தை எடுத்துள்ளோம். இந்த மாதம் படம் திரைக்கு வரவுள்ளது. என் தோழர் ராஜரத்தினம் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் எஸ். ராஜரத்தினம் பேசுகையில், ”ஜோன்ஸ் கதை சொன்ன போதே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நிஜப் புலியை வைத்து எடுக்கிறோமே என்ற பயம் இருந்தது. புலியை வைத்துப் படமெடுக்கும் போது பல  பிரச்சனைகள் வருமே எனத் தயக்கம் இருந்தது. நாங்கள் நினைத்ததை விட இரு மடங்கு பட்ஜெட் ஆகிவிட்டது. ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார் இயக்குநர் சுரேஷ். உண்மையில் அவர் தான் புரடியூசர் போல் படத்தைப் பார்த்துக்கொண்டார். புகழ் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். படம் நன்றாக வந்துள்ளது. நாயகி ஷ்ரீன், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து எங்களை வாழ்த்தும் நடிகர் சூரி அவர்களுக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

நடிகர் முத்துக்காளை பேசுகையில், “படத்தில் டிரெய்லரில் என்னைக் காட்டியதற்குத் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் என் நன்றிகள்.  இந்தப்படத்தில் பூனையுடன் தான் எனக்குப் பந்தம், புலி கூட இல்லை, அதுவே சந்தோஷம். இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துகள், நன்றி.” என்றார். 

 

நடிகர் விஜய் சீயோன் பேசுகையில், “இந்தப் படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி. ஆடிசனில் என்னைப்பார்த்த இயக்குநர் புலியுடன் சண்டை போடுவீங்களா என்றார். பயமாக இருந்தாலும் கண்டிப்பாகச் செய்கிறேன் சார் என்றேன். இந்தப்படத்தில் மெயின் வில்லன் என்று சொன்னபோது ஷாக்காக இருந்தது. அன்று எனக்குத் தூக்கம் வரவில்லை, அவ்வளவு சந்தோஷம். என் சினிமா கனவு நிறைவேறியுள்ளது. புகழ் மிக எளிமையாக என்னுடன் பழகி, படப்பிடிப்பில் எனக்கு ஆதரவாக இருந்தார். எல்லோருக்கும் என் நன்றிகள்.” என்றார்.

 

நடன இயக்குநர் ராதிகா பேசுகையில், “இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த கார்த்திக் சாருக்கு நன்றி.  இயக்குநர் சுரேஷ் நிறையக் கஷ்டப்பட்டுள்ளார். புலியுடன் ஷூட்டிங் எடுத்தது வித்தியாசமான அனுபவம். படிப்படியாக வளர்ந்து நாயகனாக மாறியிருக்கும் புகழ் தம்பியின்  வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. புகழை வாழ்த்த வந்த நடிகர் சூரி அவர்களுக்கு நன்றி. நான் உங்களின் தீவிர ரசிகை. இப்படம் நன்றாக வந்துள்ளது. தயாரிப்பாளர்கள் இருவருக்கும் என் நன்றிகள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார். 

 

தாம்சன் பேசுகையில், “புகழுக்காக இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் புகழை அறிமுகப்படுத்தியுள்ளேன் அதனால் வந்தேன் ஆனால் சூரி சார் அன்பால் வந்துள்ளார் அவருக்கு நன்றிகள். புகழ் இதே  பிரசாத் ஸ்டூடியோவில் நடிப்பிற்காகப் பல காலம் காத்திருந்துள்ளான். அதே ஸ்டூடியோவில் இன்று அவன் படம் இசை வெளியீடு என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த 5 வருடத்தில் அவன் நிறையப் போராடியிருக்கிறான். அவனிடம் நிறையப் பொறுமை இருந்தது, அது தான் அவன் வெற்றிக்குக் காரணம். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார். 

 

நாயகி ஷிரின் காஞ்ச்வாலா பேசுகையில், “இந்தப் படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என்னை நம்பி வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு என் நன்றிகள். புகழுக்கு வாழ்த்துகள். எனக்கு இந்தப்படத்தில் மிகவும் நல்ல கதாபாத்திரம், படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.” என்றார். 

Related News

9510

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery