Latest News :

’ரஸாக்கர்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா? - படக்குழு விளக்கம்
Thursday February-22 2024

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’ போன்ற படங்கள் இஸ்லாமியர்களை விமர்சிக்கும் வகையிலும், அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தும் படங்களாகவும் இருந்தது. அப்படங்களுக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தற்போதைய இந்திய அரசு மற்றும் சில மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி, படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கியது. 

 

இந்த நிலையில், நடிகர் பாபி சிம்ஹா, வேதிகா ஆகியோரது நடிப்பில் ஐதராபாத்தின் வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘ரஸாக்கர்’ என்ற திரைப்படமும் இஸ்லாமியர்களுக்கு எதிரான படமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. காரணம், நிஜாம் மன்னர்களால் ஆளப்பட்ட ஐதராபாத்தில் இருந்த இந்து மக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்ததாகவும், கட்டாய மதமாற்றத்திற்கு ஆளானதோடு, பெண்கள் சீரழிக்கப்பட்டதாகவும், சொல்லும் இப்படக்குழுவினர், இவை அனைத்தும் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள், என்றும் தெரிவித்துள்ளனர்.

 

ஐதராபாத்தின் பின்னணி வரலாற்றை இதுவரை எந்த படமும் சொல்லாத நிலையில், இஸ்லாமிய மன்னர்களால் இந்துக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதை பேசும் திரைப்படம் என்பதாலும், இப்படத்தின் டிரைலரினாலும், இதுவும் இஸ்லாமியர்களுக்கு எதிரான படமாக இருக்கும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை மறுத்திருக்கும் ‘ரஸாக்கர்’ படக்குழு, இது முழுக்க முழுக்க வரலாற்று உண்மை. நிஜாம் மன்னர்கள் ஆட்சியில் ஐதராபாத்தில் நடந்த சம்பவம் மற்றும் இந்திய சுதந்திரம் பெற்ற பிறகும் இந்துஸ்தானுடன் இணையாமல் தனி ராணுவம் மூலம் ஆட்சி நடத்திய ஐதராபாத்தை இணைக்க எப்படிப்பட்ட போர் நடத்தப்பட்டது, என்ற உண்மைகளை மட்டுமே படத்தில் சொல்லியிருக்கிறோம். மற்றபடி இது எந்த மதத்திற்கும், அந்த மதத்தின் மக்களுக்கும் எதிரான படம் அல்ல. முழுக்க முழுக்க இந்திய வரலாற்று உண்மை தான் இந்த படம், என்று தெரிவித்துள்ளார்.

 

சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா, ஜான் விஜய், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துக்கொண்டு படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

நடிகர் பாபி சிம்ஹா படம் குறித்து பேசுகையில், “வாழ்த்த வந்த அனைவருக்கும் முதலில் நன்றி. முதலில் இந்தக் கதை கேட்ட போது,  எனக்கே சரியாக புரியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாறு, எனக்கே தெரியாமல் இருந்தது. இந்த உண்மை பற்றி தேடித் தெரிந்துகொண்டேன். உடனே கண்டிப்பாக இந்தப் படம் செய்கிறேன் என்றேன். உலகத்திற்கு இந்த கதை தெரிய வேண்டும். குடூர் நாராயண ரெட்டி சாருக்கு என் நன்றி. அவர் தாத்தா இந்தப் போராட்டத்தில் போராடி இறந்துள்ளார். அவர் நினைத்தால் ஒரு கமர்சியல் படம் எடுத்திருக்கலாம் ஆனால் 40 கோடியில் இந்த வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டுமென, இப்படத்தை எடுத்துள்ளார். இப்படி ஒரு படத்தை உருவாக்க முனைந்த இயக்குனருக்கு நன்றி. நடிகை வேதிகா, இப்படத்தில் முதலில் அவரை மேக்கப்போடு பார்த்த போது எனக்கு அடையாளமே தெரியவில்லை. அத்தனை மாறியிருந்தார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அனுஷா புது நடிகை மாதிரியே தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளார். ஜான் விஜய், தலைவாசல் விஜய் சார், ராம்ஜி சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படத்தில் அத்தனை கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படம் வரலாற்றில் மிக முக்கியமான படமாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி பேசுகையில், “வணக்கம், இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான,  ரஸாக்கர் படத்தின் டிரெய்லரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு உண்மையை இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை என நினைக்கிறேன். இப்போதைய  ஹைதராபாத் 1948ல் இந்தியாவில் சேர்க்கப்படுவதற்கு முன், முஸ்லீம் நிஜாம் மன்னரால் துர்க்கிஸ்தானாக மாற்றப்படுவதாக இருந்தது. இந்திய அரசால் அது தடுக்கப்பட்டது. எங்கள் வம்சத்தில் என் தாத்தா போராடி மக்களை மீட்ட கதையைக் கேட்டிருக்கிறேன். அவர் அந்தப்போராட்டத்தில் தான் உயிர் நீத்தார். இந்தக்கதை ஹைதராபாத் மக்கள் மீது கட்டவிழ்த்து நடத்தப்பட்ட வெறியாட்டத்தை, அதிலிருந்து ஹைதராபாத் மீண்டு வந்த கதையை பதிவு செய்யும். இதை எப்படியாவது திரையில் பதிவு செய்ய வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது.  இக்கதையை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் யதா சத்யநாராயணா பேசுகையில், “தமிழ் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். மணிரத்னம் சார் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். சுஹாசினி மேடத்திடம் இந்தக் கதையை போனில் சொன்னேன், அவர் என்னைப் பாராட்டினார். இப்படத்திற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகச் சொன்னார், அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முழுப் பாத்திரமாக மாறிய பாபிக்கு என் நன்றி. கோலிவுட் தென்னிந்தியாவுக்கு தாய் மாதிரி. ரஸாக்கர் மூலம் அறிமுகமாகும் என்னை இங்கு ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் மக்களுக்கு, ஒரு படம் பிடித்தால் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இப்படம் அவர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தியாவிற்கே சுதந்திரம் கிடைத்த போது, ஹைதராபாத்தில் மக்கள் நிஜாமுக்கு எதிராகப் போராடி கொண்டிருந்தார்கள். வல்லபாய் படேல் எடுத்த நடவடிக்கைகள் மூலம், போர் செய்து தான் ஹைதராபாத் விடுதலை செய்யப்பட்டது. பல மாகாணங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை வல்லபாய் படேல் தான் ஒருங்கிணைத்தார். ஆனால் ஹைதராபாத் மாநிலத்தை அத்தனை எளிதாக ஒருங்கிணைக்க முடியவில்லை. அது துர்கிஸ்தானாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள இந்து மக்கள் நிஜாம் மன்னரால் துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் சீரழிக்கப்பட்டார்கள். ரஸாக்கர் ஹைதராபாத் மக்கள் மீது நடத்திய வன்முறை அளவில்லாதது. அதைத்தான் இப்படத்தில் சொல்ல முயன்றுள்ளோம். தமிழ் ரசிகர்கள் எங்களின் வரலாற்றைச் சொல்லும் இப்படத்தை ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.” என்றார்.

 

Razakar Trailer Launch

 

நடிகை வேதிகா பேசுகையில், “வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக என்னை அழைத்தபோது எனக்கே உண்மையான வரலாறு தெரியாது. ஹைதராபாத் மாநிலத்திற்கு 1948 ல் தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் அது பலருக்கு தெரியாது. அந்த வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படத்தில் நானும் இருப்பது பெருமை. வரலாற்றுப் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நம் சுதந்திர வாழ்க்கைக்காக எத்தனை மனிதர்கள் தியாகம் செய்துள்ளார்கள், போராடியிருக்கிறார்கள் அவர்களின் கதையை இந்தப் படம் சொல்லும். தயாரிப்பாளர் குடூர் சார் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார், நன்றி. பாபி நேஷனல் அவார்ட் வின்னிங் ஆக்டர். அவரை இந்தப் பாத்திரத்தில் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என்னை, மேக்கப்போடு பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. அப்புறம் தான் கண்டுபிடித்தார். மிகச் சிறந்த நடிகர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இயக்குநருக்கு என் சிறப்பு நன்றி. என்னுடன் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எப்போதும் போல் எனக்கும் படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார். 

 

இசையமைப்பாளர் பீம்ஸ் பேசுகையில், “என் தாத்தா குடூர் நாராயண ரெட்டி வரலாற்றைக் கூறியிருக்கிறார். இந்தப்படத்தில் மூலம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒரு சிறப்பான படைப்பில் நானும் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் குசேந்தர் ரமேஷ் ரெட்டி பேசுகையில், “எங்கள் படத்திற்கு ஆதரவு தர வந்துள்ள அனைவருக்கும் நன்றி. ரஸாக்கர் எனக்கு மிக முக்கியமான படம்.  நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவன், ஆனால் எனக்கே இந்தக்கதை அவ்வளவாகத் தெரியாது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1 வருடம் கழித்தே ஹைதராபாத்திற்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த வரலாறு தெரியாததற்கு நான் வருத்தப்படுகிறேன். இதில் பணியாற்றியது பெருமை. இந்தக் கதை உங்கள் அனைவரையும் உருக வைக்கும் நன்றி.” என்றார். 

 

நடிகர் தலைவாசல் விஜய் பேசுகையில், “தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். இந்த தலைமுறைக்குத் தெரியாத, ஒரு வரலாற்றைச் சொல்லும், இப்படத்தில் நானும் இருப்பது பெருமை. மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார். 

Related News

9540

திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் யாருக்கு சொந்தம்? - விளக்கம் அளிக்கும் KRIA Law-வின் குழு விவாதம்!
Saturday March-01 2025

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...

வாழ்வின் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் ’செகண்ட் சான்ஸ்’ வீடியோ பாடல்!
Friday February-28 2025

கவிப்பேரரசு வைரமுத்து  வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...

தனுஷின் ‘குபேரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday February-28 2025

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...

Recent Gallery