Latest News :

கைகொடுக்குமா ‘அமீகோ கேரேஜ்’? - கண்கலங்கி நின்ற மாஸ்டர் மகேந்திரன்!
Sunday March-10 2024

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வலம் வரும் மாஸ்டர் மகேந்திரன், தமிழ் சினிமாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பயணித்து வருகிறார். கோலிவுட்டில் தனக்கான அடையாளத்தை உருவாக்குவதற்காக கடுமையாக போராடி வரும் இளம் நாயகர்களில் இவரும் ஒருவர். விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் இளம் வயது பவானியாக நடித்து கவனம் ஈர்த்த மாஸ்டர் மகேந்திரன், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபித்தாலும், அவருக்கான அங்கீகாரம் இன்னம் கிடைக்கவில்லை.

 

இந்த நிலையில், மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கும் ‘அமீகோ கேரேஜ்’ திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கியிருக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவரை ரசிகர்களிடம் படம் பார்க்கும் ஆவலை தூண்டியிருப்பதால், நிச்சயம் மாஸ்டர் மகேந்திரனுக்கு இந்த படம் கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

வரும் மார்ச் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அமீகோ கேரேஜ்’ படத்தை பல சிறிய முதலீட்டு வெற்றி படங்களை வெளியீட்டு வரும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஷ், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதன் காரணமாகவும் இப்படத்திற்கு திரையரங்கம் தரப்பிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களோடு, படம் உருவானது குறித்தும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

Amigo Garage

 

நிகழ்ச்சியில் பேசிய நாயகன் மாஸ்டர் மகேந்திரன், “நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர்.  பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.” என்று கூறி மேடையில் கண்கலங்கி விட்டார்.

 

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசுகையில், “இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது.  இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி. ஜி எம் சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர்.  ஷீட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார். தாசரதி என் முதல் ஷார்ட் ஃபிலிமிலிருந்து இருக்கிறார், நல்ல நண்பர் நல்ல ரோல் செய்துள்ளார். நாயகி ஆதிரா நன்றாக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரிய பலம் பாலமுரளி அண்ணாவின் இசை தான். அவருக்கும் எனக்கும் நல்ல வேவ் லென்த் இருந்தது. பாடல்களுக்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கு கார்த்திக் பாடல் தரும்போதே ஐந்து சரணம் தந்துவிடுவார், அவருக்கு என் நன்றி. விஜய குமார் மிகச் சிறந்த நண்பர். அவருடன் ஆறு வருட பயணம், அட்டகாசமான ஒளிப்பதிவை தந்துள்ளார். அசோக் அண்ணா, நல்ல ஆக்சன் ப்ளாக் தந்துள்ளார். எல்லோருமே எனக்காகக் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். இந்த ட்ரெய்லருக்கு வாய்ஸ் தந்த மைம் கோபி அண்ணாவிற்கு நன்றி. இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம்  கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் பாலமுரளி பாலு பேசுகையில், “மகேந்திரன் என் தம்பி மாதிரி. அவன் தான் எனக்கு போன் செய்து, ஒரு நல்ல கதை நீங்கள் இசையமைக்க வேண்டும் எனக் கேட்டான். அவனுக்குப் பண்ணாமல் எப்படி ? அப்படி தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். அதன் மூலம் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எனும் இன்னொரு தம்பி கிடைத்தார். தயாரிப்பாளர் முரளி மிகப்பெரிய ஆதரவு தந்தார். அவரோடு சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பிட்டிருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. கு கார்த்திக் எல்லாப்பாடல்களையும் அழகாக எழுதித் தந்தார். எப்போதும் ஒரு பாடலுக்கு 5 சரணங்கள் எழுதித் தந்து விடுவார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

 

ஸ்டன்ட் இயக்குநர் டான் அசோக் பேசுகையில், “அனைவருக்கும் என் வணக்கம். அமீகோ கேரேஜ் பற்றிச் சொல்ல நிறையச் சொல்ல இருக்கிறது. விஷுவல், பாடல்கள் எல்லாம் அருமையாக வந்துள்ளது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளது. மகேந்திரன் எந்த ஷாட்டாக இருந்தாலும், ரெடியாக இருப்பார். நிறைய ஒத்துழைப்புத் தந்தார் ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். இயக்குநர் பழகப் பழக ஒரு குடும்பமாகவே ஆகிவிட்டார். இப்போது அவர் வீட்டில் நாங்கள் சமைத்து சாப்பிடும் அளவு நெருக்கமாகிவிட்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவை  தாருங்கள்.” என்றார். 

 

பாடலாசிரியர் கு கார்த்திக் பேசுகையில், “அமீகோ கேரேஜ் மிக ஜாலியாக வேலை பார்த்த படம். இதுவரை இசையமைப்பாளர் பால முரளி உடன் காமெடி கமர்ஷியல் என செம்ம ஜாலியான படமாகத்தான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் இது ஆக்சன் டிராமா படம், பால முரளியிடம் நமக்கு நல்ல வாய்ப்பு என்றேன். இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம், பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தைப் பத்திரிக்கையாளர்கள், மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் என் நன்றி.” என்றார்.

 

கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக,  சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது ’அமீகோ கேரேஜ்’ திரைப்படத்தை பீப்பள் புரொடக்‌ஷன்ஸ் ஹவுஸ் சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் மற்றும் என்.வி கிரியேஷன்ஸ் சார்பில் நாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Related News

9586

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery