தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக மலையாலத் திரைப்படங்கள் பற்றிய பேச்சுகள் அடிப்பட்டிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது. அதற்கு காரணம் ‘ஹாட் ஸ்பாட்’ என்ற தமிழ்ப் படத்தின் டிரைலர் தான்.
’திட்டம் இரண்டு’, ‘அடியே’ படங்களின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘ஹாட் ஸ்பாட்’ படத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியர் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக ஆண், பெண் உறவு குறித்து படத்தில் பேசப்பட்ட வசனங்கள் ஆபாசமாக இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்ததோடு, இப்படக்குழுவினரையும் போன் போட்டு திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துக்கொள்ள, டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனங்கள் மற்றும் ஆண், பெண் உறவு குறித்து இடம்பெற்ற வசனங்கள் பற்றி பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்களித்த படக்குழுவினர், ”தப்பான கருத்தை சொல்லிவிடக்கூடாது என்பதில் மிக கவனமுடன் வேலைப் பார்த்துள்ளோம்” என்று தெரிவித்ததோடு, ”டிரைலர் பார்க்கும் போது உங்களுக்கு படத்தின் மீது தவறான எண்ணம் ஏற்படும், ஆனால் படம் அப்படி இருக்கது. முழுப்படமும் பார்த்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும்.” என்று விளக்கமளித்தனர்.
படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கூறுகையில், “ஹாட் ஸ்பாட் படத்தை என் நண்பர்கள் தான் தயாரித்துள்ளனர், என் மீதான நம்பிக்கை மட்டும் தான் காரணம் அவர்களுக்கு நன்றி. நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர், எல்லோரும் கதையை நம்பி மட்டுமே வந்துள்ளனர். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தேன் அது ஏற்படுத்திய எதிர்வினைகளைத் தான் இந்தப்படமும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். தப்பான கருத்தைச் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமுடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்.” என்றார்.
நடிகர் கலையரசன் பேசுகையில், “இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியான போதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள். ஆனால் முழுப்படமும் பார்த்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும். விக்னேஷ் கதை சொல்லும் விதம் மாறுபட்டு இருக்கலாம், ஆனால் அது சென்று சேரும் இடம் சரியாக இருக்கும். என் கதை மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனால் விக்னேஷ் பிரதர் மீது நம்பிக்கை இருக்கிறது. யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தார். அதுவும் இந்த மாதிரி, அலைகளை ஏற்படுத்தியது ஆனால் அது முடியும் போது மிக அழகாக நம்மைச் சிந்திக்கும்படி செய்யும். அதே போல் இந்தப்படமும் இருக்கும், படம் பாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.
நடிகை அம்மு அபிராமி பேசுகையில், “என்னை இந்தப்பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது பயந்தேன், திட்டம் இரண்டு பார்த்த பிறகு தான் அவரின் கதை சொல்லும் முறை புரிந்தது. என்னோட கதாபாத்திரம் மிக நன்றாக வந்துள்ளது. மற்ற கதைகள் எனக்குத் தெரியாது ஆனால் விக்னேஷ் மீது நம்பிக்கை இருக்கிறது. படத்தைப்பார்த்தால் உங்களுக்குப் புரியும், படத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.” என்றார்.
நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசுகையில், “1 1/2 வருஷம் முன்னாடி இந்த ஸ்கிரிப்ட் தந்தார்கள். எப்போது இது நடக்கும் என ஆவலாக இருந்தேன். என்னை இப்படத்தில் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப்படம் மிக போல்டான கதை, இந்தப்படத்தைப் பத்திரிக்கையாளர்கள் புரிந்துகொண்டு ஆதரவு தர வேண்டும், படத்தில் எங்கும் உங்கள் முகம் சுழிக்கும்படி எதுவும் இருக்காது. கலையரசன் ரசிகன் நான் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் பார்த்தபிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி.” என்றார்.
நடிகர் சுபாஷ் பேசுகையில், “இந்தப்படம், எனக்குத் திட்டம் இரண்டு படத்திற்குப் பிறகு மிக முக்கியமான படமாக இருக்கும். விக்னேஷ் பிரதருக்கு நன்றி. டிரெய்லர் பார்த்து நிறையக் கேள்விகள் தோன்றும். ஆனால் படம் வந்த பிறகு அது எல்லாம் புரிந்து விடும். எல்லா நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் கே ஜே பாலமணி மார்பன் பேசுகையில், “ஹாட் ஸ்பாட் எங்களுடைய முதல் தயாரிப்பு. விக்னேஷ் நாலு வருடமாக பழக்கம். லாக்டவுன் டைமில் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம். திட்டம் இரண்டு படம் செய்த போதே இப்படத்தின் கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. டிரெய்லர் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி நிறையக் கருத்துக்கள் வருகிறது. படம் பாருங்கள் பிடிக்கும். அதன் பிறகு கருத்துச் சொல்லுங்கள். இப்படம் முடித்து விட்ட பிறகு சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரிய ஆதரவாக வந்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகள். மார்ச் 29 திரையரங்குகளில் வெளியாகிறது. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் பேசுகையில், “ஹாட் ஸ்பாட், விக்னேஷுடன் திட்டம் இரண்டு படம் நாங்கள் தயாரித்தோம். ஒரு போல்டான கருத்தை பொறுப்புடன் கையாள்வார். படத்தின் டிரெய்லர் பார்த்து எதுவும் நினைக்க வேண்டாம், படம் பாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா நடிகர்களும் மிகத் தைரியமாக நடித்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசுகையில், “படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிகவும் அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். படத்தின் வெற்றி விழாவில் இன்னும் நிறையப் பகிர்ந்து கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
எடிட்டர் முத்தையா பேசுகையில், “இப்படத்தின் டிரெய்லர் உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கும், அந்த கேள்விகளுக்குப் பதில், மார்ச் 29 ல் கிடைக்கும். இப்படத்தில் வாய்ப்பு தந்த விக்னேஷ் அண்ணாவிற்கு நன்றி. இந்தப்படம் மிக போல்டான படம், படம் பாருங்கள் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்.” என்றார்.
இசையமைப்பாளர் வான் பேசுகையில், “இது என் முதல் மேடை. விக்னேஷ் அண்ணாவிற்கு நன்றி. இந்தப்படம் மிக போல்டான கதை, இதை செய்வது மிக கடினம். விக்னேஷ் மிகத் தைரியமாக இயக்கியுள்ளார். படம் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.” என்றார்.
கலை இயக்குனர் சிவ சங்கரன் பேசுகையில், “படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. எல்லோரும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். மிக நல்ல படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள்.” என்றார்.
நடிகை சோபியா பேசுகையில், “என் அப்பா அம்மாவிற்கு நன்றி. விக்னேஷ் சார் தந்த கதாபாத்திரத்தை நன்றாகச் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். படத்தைத் திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.
சதீஷ் ரகுநாதன் - வான் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முத்தையன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
டிரைலர் மூலம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...