Latest News :

பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அறிவித்த ‘சாமானியன்’ படக்குழு!
Wednesday June-12 2024

80-களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என செல்வாக்குடன் வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெற்றி படங்களாகவே கொடுத்ததால் வெள்ளி விழா நாயகன் என்றும் அழைக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சமீபத்தில் வெளியான ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க வந்துள்ளார்.

 

‘சாமானியன்’ மூலமாக இவரை மீண்டும் அழைத்து வந்த பெருமையை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்தப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் V.மதியழகனும் படத்தின் இயக்குநர் R. ராகேஷும் பெற்றுள்ளனர். அது மட்டுமல்ல ராமராஜனின் படங்களில் வெற்றிக்கு தூணாக இருந்த இசைஞானி இளையராஜாவையே இந்த படத்திற்கு இசையமைக்கவும் வைத்துள்ளனர்.

 

இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கருத்தை சொல்லும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போதெல்லாம் வெளியான இரண்டு வாரங்களுக்குள்ளேயே படங்கள் தியேட்டரை விட்டு வெளியேறும் நிலையில் மூன்றாவது வாரத்திலும் ரசிகர்களின் உற்சாகத்துடன் பல திரையரங்குகளில் ‘சாமானியன்’ படம் 25வது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.

 

இதனால் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கும் தயாரிப்பாளர் V.மதியழகன் கூறும்போது, “ தற்போது 25வது நாளை நோக்கி கிட்டத்தட்ட 10 திரையரங்குகளில் ‘சாமானியன்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

ராமராஜனுக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்பதால் அவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் பல திரையரங்குகளில் 'எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்' 50 சதவீத கட்டண சலுகை அறிமுகப்படுத்தியுள்ளது.

படம் பார்த்த 2கே கிட்ஸ்களுக்கும் பிடித்திருக்கிறது. மற்றபடி புறநகரங்களில் எப்போதுமே ராமராஜனுக்கு இருக்கும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்திருக்கிறது. ராமராஜனும் பல திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்துள்ளார். படம் வெளியாகி 21 வது நாளிலும் ரசிகர்கள் அதே பழைய ஆர்வத்துடன் தனது படத்தைப் பார்த்தது கண்டு வியந்து போய்விட்டார் ராமராஜன். படம் நிஜமான வெற்றி என்பதால் தான் இரண்டு மூன்று நாட்களிலேயே இதன் சக்சஸ் மீட்டை கொண்டாடாமல் 25வது நாளில் இதன் வெற்றி விழாவைக் கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

 

இயக்குநர் R.ராகேஷ் கூறும்போது, “ராமராஜன் படங்களுக்கு முன்பு என்ன வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பு தற்போது அவரது ரசிகர்களிடம் சிறிதும் குறையவில்லை. குறிப்பாக சென்னைக்கு தெற்கே உள்ள நகரங்களில் பெண்கள் ஆர்வமாக தியேட்டர்களுக்கு வருவதை பார்க்க முடிகிறது. மேலும் பல கிராமங்களில் இருந்து ட்ராக்டர், மாட்டு வண்டி கட்டிக்கொண்டு கூட ‘சாமானியன்’ படம் பார்க்க ரசிகர்கள் வந்ததையும் பார்க்க முடிந்தது. பல ஊர்களில் இருந்தும் ராமராஜன் ரசிகர்கள் தினசரி என்னை தொடர்புகொண்டு எங்கள் அண்ணனை மீண்டும் எங்களிடம் அழைத்து வந்துவிட்டீர்கள் என கண்ணீர் மல்க கூறுவதை கேட்டபோது ஒரு நிறைவான படம் செய்த திருப்தி கிடைத்துள்ளது.

 

மதுரை, தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ராமராஜன் திரையரங்குகளுக்கு நேரிலேயே சென்று படம் பார்த்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விரைவில் 25வது நாள் விழா கொண்டாட இருக்கிறோம். அது மட்டுமல்ல கட்டண சலுகையை அறிமுகப்படுத்தி இருப்பதால் 50வது நாள் விழா கொண்டாடும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார்.

 

கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடித்திருக்கின்றனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே.எஸ்.ரவிக்குமார், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.. ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, ராம்கோபி படத்தொகுப்பு செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைத்திருக்கிறார்.

 

D.பாலசுப்பிரமணி மற்று C.சதீஷ் குமார் இணை தயரிப்பாளர்களாக பங்கேற்று இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

Related News

9818

சன்னி தியோல் மற்றும் கோபிசந்த் மிலினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 ஆம் தேதி தொடங்குகிறது!
Thursday June-20 2024

இந்தியாவையே தன் ’கதர் 2’  படம்  மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார்...

’குட் நைட்’ பட தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்த ஆர்ஜே பாலாஜி!
Thursday June-20 2024

‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ என்று ரசிகர்களை கொண்டாட வைத்த வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்...

பிரபு தேவாவின் புதிய படத்தின் தலைப்பு ‘மூன் வாக்’!
Wednesday June-19 2024

பிரபல டிஜிட்டல் ஊகமான பிகைண்ட்உட்ஸ் (Behindwoods) தயாரிக்கும் திரைப்படத்தை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ்...