Latest News :

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், நேற்று மாலை ‘இந்தியன் 2’ படத்தின் புதிய டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக, நேற்று காலை தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  ’இந்தியன் 2’ டிரைலர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், ஜி.கே.எம்.தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் எம்.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

 

நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “உயிரே உறவே வணக்கம்.  உலகளவில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் அதே இயக்குநர் எடுப்பது, அரிதாகத்தான் நிகழ்ந்துள்ளது. அதைச் சாத்தியமாக்கிய இயக்குநர் ஷங்கருக்கும், அதை நான் இருந்து, எனக்கும் வாய்ப்பளித்ததற்கும் நன்றி. முக்கியமாக இந்தியன் 2 எடுப்பதற்குக் கருவைத் தந்துகொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனெனில் கரப்சன் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தா வருகைக்கு, உங்களிடம் அர்த்தம் இருக்கிறது. இந்த மேடையில் மிகச் சந்தோஷமாக, இன்னொரு தலைமுறையுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் மதிக்கும் மிகப்பெரிய நடிகர்கள் சிலர் இப்போது இல்லை. மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக். நடிகர் விவேக் உடன் இப்போது தான் நடித்த மாதிரி இருக்கிறது. காலம் எப்படி உருண்டோடுகிறது என்பதற்கு இந்தியன் படம் சான்றாக இருக்கிறது. ஷங்கர் இன்னும் இளைஞராக இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. முரண் கருத்து எப்போதும் மேடையில் இருக்க வேண்டும். ஷங்கரும் நானும் நினைத்தால் கூட இந்தியன் 2  மாதிரி படமெடுக்க முடியாது என்றார் ரவிவர்மன், ஆனால் எடுத்துள்ளோம் அதான் இந்தியன் 3. இந்தப்படம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல, இயற்கையும் கொரோனா நோயும் தான் காரணம். அதையெல்லாம் தாண்டி இப்படத்தை எடுக்கத் துணையாக நின்ற லைகாவிற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் நன்றி. தம்பி உதயநிதி அவர் எங்கள் ரசிகனாக இருந்ததால், இதை எடுக்கத் துணிந்தார். அவருக்கும் நன்றி. சித்தார்த் இங்கு மேடையில் மட்டுமல்ல, என்னிடமும் அப்படித்தான் பேசுவார். அன்பா, நடிப்பா எனத்தோன்றும், அவ்வளவு பணிவாக இருப்பார்.  நல்ல மனசுக்காரார். இந்தப் படம் பல சாதனைகள் படைக்கும். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்.” என்றார்.

 

இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “பொதுவாக எப்போதும் என்னுடைய படங்கள் இது இப்படி நடந்தால், எப்படி இருக்கும் என்கிற கான்செப்டில் தான் இருக்கும். இந்தப்படமும் அந்த மாதிரி தான். இப்போதிருக்கும் நாட்டின் சூழ்நிலையில், இந்தியன் தாத்தா வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இப்படம். இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. அனைவரும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இந்தியன் படத்தைப் பொறுத்தவரை அதன் கதை தமிழ்நாட்டில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தியன் 2 கதை, கொஞ்சம் வெளியே சென்று, இந்தியா முழுக்க, எல்லா மாநிலங்களிலும் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையைப் பொறுத்த வரைக்கும், இதில் நிறைய கேரக்டர்கள் இருக்கிறது. இந்தியன் தாத்தா தவிர, நிறைய குடும்பங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இந்தியா முழுக்க இருக்கும் குடும்பங்கள் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அவர்களை இந்தப்படம் கொஞ்சம் யோசிக்க வைக்கும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் மிகச் சிறப்பாக வர மிக முக்கியக் காரணம் கமல் சார் தான். பார்ட் 1 இல் கூட நாங்கள் அவருக்கு 40 நாள் தான் மேக்கப் போட்டு தான், ஷூட் செய்தோம். ஆனால் இந்தப் படத்தில் 70 நாட்கள் அவர் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கு வந்து, மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு ரெடியாக வேண்டும், சாப்பிட முடியாது தண்ணீர் மட்டும் தான் குடிக்க முடியும். மிகக் கஷ்டப்பட்டு, மிக அர்ப்பணிப்போடு இருப்பார். அவர் உழைப்பைப் பார்த்து எனக்குப் பிரமிப்பாக இருக்கும். ஷூட்டிங்கே முடிந்தாலும் அவர்தான் கடைசியாகப் போவார். அந்த மேக்கப் கலைப்பதற்கு 1 மணி நேரமாகும். முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது ஒரு சிலிர்ப்பு வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அவரை ஷீட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாக தான் வாழ்ந்திருக்கிறார். இந்தியன் பார்ட் 1 வந்த போது, பிராஸ்தடிக் மேக்கப் அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். ஒரு சீன் 4 நாள் எடுத்தோம். கயிற்றில் தொங்கி கொண்டு, வேறு மொழி பேசி, கையில் வரைந்து கொண்டு நடிக்க வேண்டும். உலகில் யாராலும் முடியாது ஆனால் கமல் சார் அதைச் செய்துள்ளார். இன்னும் பல காட்சிகள் சொல்லிக்கொண்டே போகலாம். கமல் சார் உங்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. அனிருத் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக மியூசிக் போட்டுள்ளார். ஒரு டியூன் அனுப்புவார் 80 % ஓகே என்பேன். ஆனால் நீங்கள் 100 % சொல்லும் வரை போட்டுக் கொண்டே  இருப்பேன் என்பார். என்னவிதமான சிச்சுவேசன் தந்தாலும் மிரட்ட கூடியவர், அனிருத்துக்கு வாழ்த்துக்கள்.  விவேக் சார் அவரை திரையில் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. மனோ பாலாவும் அழகாக நடித்துள்ளார். சித்தார்த், பாபி சிம்ஹா நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவில் வர்மம் செய்து ரவிவர்மம் காட்டியுள்ளார் ரவிவர்மன். குணால் சின்ன சின்ன சவுண்டில் கூட அவ்வளவு உழைத்திருக்கிறார். இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும்.  சுபாஸ்கரன் சார் ரெட் ஜெயன்ட் மூவிஸ், நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் நன்றி. இந்தியன் படத்தை சப்போர்ட் செய்து பெரிய வெற்றி பெறச்செய்தீர்கள். அதேபோல் இந்தப் படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டும்.” என்றார்.

 

Indian 2

 

நடிகர் சித்தார்த் பேசுகையில், “21 வருடங்களுக்கு முன்பு, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் சார் எனக்குத் தந்தார். இப்போது 21 வருடங்களுக்குப் பிறகு, என் ஆசான் கமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் நன்றி சார். ஒரு புதுமுகமாக என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை விட, இந்த படத்தில் நீங்கள் கொடுத்த பொறுப்பை மிக எளிதாக விட்டு விடமாட்டேன். அதற்கான உழைப்பை தந்துள்ளேன் என நம்புகிறேன். கடந்த 20 வருடங்களில் நான் நடித்த பாத்திரங்களில் என்னுடைய பர்சனல் முகம், இந்த படத்தில் நிறைய இருக்கிறது. எனக்குமே இது பர்சனல் ஜர்னியாக இருந்தது. அற்புதமான அனுபவம். இந்த கதாபாத்திரத்தை தந்ததற்கு நன்றி சார். உங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் நான் கமல் சாரின் தீவிரமான ரசிகன். அவர் எனக்கு எப்போதும் ஆசானாகவே இருந்திருக்கிறார். ஆனால் எப்போதெல்லாம் கேமரா முன்பு நிற்கிறேனோ, அப்போது மேலே இருந்து, அவருடைய உழைப்பும், நடிப்பும் தான் என்னை வழிநடத்தியது. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் எப்படி இருக்குமோ? அதுதான் இந்தியன் 2.  இந்தியன் தாத்தா வறார் கதற விடப் போகிறார்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசுகையில், “உலக நாயகன் கமல் சார், பிரம்மாண்டத்தின் உச்சம் இயக்குநர் ஷங்கர் சார், ராக்ஸ்டார் அனிருத் மூன்று பேரும் சேர்ந்து, இந்தப்படத்தில் ரணகளப்படுத்தியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கமல் சார், ஷங்கர் சார் இணைந்து, இதற்கு மேல் இப்படி ஒரு பிரமாண்ட படைப்பைத் தர முடியுமா எனத் தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

இப்படத்தின் தமிழ் பதிப்பு ‘இந்தியன் 2’ என்ற தலைப்பிலும், தெலுங்கில் ‘பாரதியுடு 2’ மற்றும் இந்தியில் ‘இந்துஸ்தானி 2’ என்ற தலைப்புகளில் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

9851

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் ‘பாராசூட்’ டீசர் வெளியானது!
Wednesday November-13 2024

முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...

70 வருட தமிழ் சினிமா கண்டிராத புதிய கதைக்களத்துடன் உருவாகும் ‘மறைமுகம்’!
Wednesday November-13 2024

அபிகா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ’துள்ளும் காலம்’, ‘சோக்காலி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ...

எழுத்தாளர் ராஜ் கௌதமனுக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி! - இயக்குநர் பா.இரஞ்சித் கோரிக்கை
Wednesday November-13 2024

மறைந்த எழுத்தாளர் ராஜ் கெளதமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள இயக்குநர் பா...

Recent Gallery