Latest News :

”கதாநாயகியை தொடவே விடவில்லை” - முதல் படத்திலேயே ஏங்கும் பிக் பாஸ் ராஜு
Tuesday July-09 2024

’நட்புனா என்னானு தெரியுமா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிய ராஜு, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று மக்களிடம் பிரபலமானவர், தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் நாயகனாக நடித்திருக்கும் படத்திற்கு ‘பன் பட்டர் ஜாம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இதில், ராஜுக்கு ஜோடியாக ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா ட்ரிக்கா என இரண்டு நாயகிகள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன்சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு பாபு ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் ஆப்ரகான் படத்தொகுப்பு செய்கிறார். 

 

இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதல் சோசியல் மீடியா மற்றும் இணையதளங்களில் பிக் பாஸ் ராஜு வைரலாக, தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிட்ட விதமும், டிரெண்டாகி வருகிறது. வழக்கமாக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் படங்களின் முதல் பார்வை போஸ்டரை வெளியிடுவார்கள். ஆனால், இந்த படக்குழுவினர் வித்தியாசமான முறையில், 30 அடி உயரம் கொண்ட முதல் பார்வை போஸ்டரை பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள உயர்ந்த சுவரில் மேலிருந்து கீழாக இறக்கி, மீடியா முன்பாக வெளியிட்டார்கள். 

 

இதை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நாயகன் ராஜு, “நான் கதாநாயகனாக நடித்து முதல் முறையாக பங்கேற்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இது. இந்த இடத்தில் நான் இன்று நின்று பேசுவதற்கு காரணமான இந்த விஜய் டிவி, ஹாட்ஸ்டார், பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் அதில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்த ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி. இன்று நம் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தியேட்டருக்கு படம் பார்க்க செல்வதற்கே நம்மால் திட்டமிட்டபடி சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. அந்த வகையில் ஒரு திரைப்படம் தியேட்டருக்கு செல்வதற்கு எவ்வளவு தாமதமாகும் என்று யோசித்துப் பார்த்தால் எங்களது பட வேலைகள் கொஞ்சம் விரைவாகவே நடக்கிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது. வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்களிடமும் பொய் சொல்ல கூடாது என்று நினைக்கிறேன்.

 

வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் இந்தப்பகுதியில் இருந்த அட்ரஸ் கார்த்திக் என்பவர் மூலமாக பல கம்பெனிகளில் வாய்ப்பு தேடிய எனக்கு பிக்பாஸில் ஒரு வெற்றி வந்த பிறகு, கதை சொல்கிறேன் கேட்கிறீர்களா என வாய்ப்பு தேடி வந்தது. என்னை பொறுத்தவரை நான் ஒரு கதையை கேட்டு அதில் குறை நிறைகளை சொல்ல வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. என்னைத் தேடி வரும் ஒவ்வொரு வாய்ப்பும் எனக்கு தேவதை மாறித்தான். அதனால் எந்த தேவதை கை கொடுத்தாலும் அந்த தேவதையின் கையை இறுகப்பிடித்துக் கொண்டு மேலே வந்து விட வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது. பிக்பாஸ் முடிந்து சினிமாவுக்கான முயற்சி மேற்கொண்ட போது பலரும் பலவிதமாக நடிப்பு ஆலோசனைகள் கூறி அதிலேயே ஒரு வருடத்திற்கு மேல் போய்விட்டது. 

 

ஒரு கட்டத்தில் நானே எனக்காக படம் பண்ணலாம் என்று நினைத்து என்னுடைய கெட்டப்பை மாற்றி என் வீட்டிலேயே என்னை அடையாளம் புரியாத அளவுக்கு ஆளே மாறிப்போனேன். அதன் பிறகு நம்மிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், நம்மை எப்படி பார்க்க விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு நடித்த படம் தான் இந்த ‘பன் பட்டர் ஜாம்’. இந்த படம் தாய்க் குலங்களுக்கு ரொம்ப பிடித்த படமாக இருக்கும். புராண கதைகளில் எல்லாம் மனிதர்களின் தலை எழுத்தை நான்கு தலை கொண்ட பிரம்மன் எழுதுகிறார் என சொல்வார்கள். அதுபோல எனக்காக கதையை எழுதிய இயக்குனர், இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் என நான்கு தலைகள் தான் என்னுடைய தலையெழுத்தை தீர்மானிக்க போகிறீர்கள்” என்றார்.

 

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ராஜு பதிலளித்து பேசுகையில், “’பன் பட்டர் ஜாம்’ என்றால் நான் ஒரு நினைப்பில் இருந்தேன், ஆனால் இந்த படத்தில் என்னை கதாநாயகியை தொடவே விடவில்லை. அவர் ஒரு பக்கம் தனியாக நடித்துக் கொண்டிருந்தார். நான் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் பன் என்றால் அது இயக்குநர் தான். மீதி நாங்கள் எல்லோரும் பட்டர் ஜாம் என்று சொல்லலாம். பிக்பாஸ் முடிந்து வெளியே வந்ததுமே ஹீரோ ஆகிவிடலாம் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. ஏனென்றால் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்ததால் ரியாலிட்டி  என்னவென்று எனக்கு தெரியும். எப்போதுமே கதை தான் ஹீரோ. கதை சரியாக இருந்தால் மட்டும் தான் ஒரு நல்ல நடிகன் உருவாக முடியும் என்பதை நான் திடமாக நம்புகிறேன். ஐந்து வருடத்திற்கு முன்பாக எஸ்.ஜே சூர்யாவிற்காக ஒரு கதை எழுதி வைத்திருந்தேன். அதில் நீயே நடி என்று கூறி எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதை எழுதுவதற்காக மற்ற விஷயங்களில் இருந்து ஒதுங்கி சென்றதால் நாட்கள் போனதே தெரியவில்லை. அதிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. அதன் கடைசி பகுதியை எழுதும் போது, நமக்கு யாராவது கேக் போல ஒரு கதையுடன் வந்தால் அழகாக நடித்துவிட்டு போகலாமே என்று நினைத்த சமயத்தில் தான் இந்த படம் என்னை தேடி வந்தது.

 

ஒரு நடிகனாக வேண்டுமென்று தான் சென்னைக்கு வந்தேன். வாய்ப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கவே, நமக்கான கதையை நாமே எழுதி படத்தை இயக்கிக் கொள்ளலாம் என்று தான் பாக்யராஜ் சாரிடமும் நெல்சனிடமும் உதவி இயக்குநராக பணியாற்றினேன். ஆனால் நடித்து விடலாமே என்று நினைக்கும் அளவிற்கு டைரக்‌ஷன்ன் பணி கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. அதே சமயம் பிக்பாஸ் முடிந்தவுடன் நானே எழுதி, இயக்கி, நடிக்கும் விதமாகத்தான் வாய்ப்பு உருவானது. அதில் நீண்ட காலம் எடுத்துக்கொண்டதும், மக்கள் நம்மை மறந்து விடுவார்கள் என்று தான் இந்த பட வாய்ப்பு வந்ததும் நடிகராக மாறிவிட்டேன். எது எப்போது நடக்குமோ அப்போது நடக்கும் என்று நம்புகிறேன். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த போது அதன் இயக்குநர் ஜோஷ்வா மூலமாகத்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீங்கள் நடிகர் கவினுக்கு போட்டியா என்றால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை. கவின் எப்படிப்பட்ட கடின உழைப்பாளி, அவருக்குள் என்ன இருக்கிறது என்பதை நான் அருகில் இருந்து பார்த்தவன். இயக்குநருக்கு என்னை பிடித்திருந்தால் இந்த படத்தில் நடித்துள்ளேன். படம் வெளியானதும் உங்களுக்கு பிடித்திருந்தால் அடுத்த கட்டத்திற்கு செல்வேன்” என்றார்.

 

இயக்குநர் ராகவ் மிர்தாத் பேசுகையில்,  “பொதுவாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நட்சத்திரங்கள் தான் வெளியிடுவார்கள். ஆனால் எனது முதல் படத்திற்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக அவர்கள் முன்னிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தேன். இப்படி ஒரு தயாரிப்பாளர் இருந்தால், நாம் நினைத்ததை நினைத்தபடி எடுக்கலாம் என்று சொல்லும் விதமாக சினிமாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர் என்பதால் படத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சரியாக செய்து கொடுத்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை எனக்கு அறிமுகப்படுத்தியதும் இதில் கதாநாயகனாக ராஜுவை உள்ளே கொண்டு வந்ததும் நண்பர் சதீஷ் தான். அவர் இந்த திரைப்படத்தின் வடிவமைப்பாளர்.

 

இந்த படத்தின் கதையை இரண்டு மணி நேரம் கேட்டதும் ராஜு உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தின் கருவை சொல்லும் விதமாக இதன் போஸ்டர் இருக்க வேண்டும் என நினைத்து கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுத்துக்கொண்டு கைகளாலேயே வரையப்பட்ட போஸ்டர் தான் இது. வாழ்க்கையில் நிறைய போராட்டம் நடக்கும். எல்லோருடைய மனதிலும் ஒரு போர்க்களம் இருக்கிறது. பல பிரச்சனைகளால் நாம் அன்றாட வாழ்க்கையை அனுபவிக்காமலேயே நாளை பார்த்துக் கொள்வோம் என கடந்து செல்வோம். ஆனால் திடீரென ஒருநாள், நாளை என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் அந்த கணத்தின் சந்தோஷத்தை அப்போதே அனுபவிக்க வேண்டும் என்பதைத்தான் இந்த போஸ்டர் மூலமாக சொல்ல நினைத்தேன்” என்றார்.

 

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ராகவ் பதிலளித்து பேசுகையில், “வாழ்க்கையில் பல பேர் கடந்த காலத்தை சுமந்து கொண்டே நிகழ்காலத்தை வாழ தவறி விடுகின்றனர். அப்படி எல்லாம் இல்லாமல் அந்த கணத்தை அப்போதே வாழ்ந்து விடுவது நல்லது என்பதைத்தான் இந்த ’பன் பட்டர் ஜாம்’ சொல்கிறது. அதைத்தான் இந்த போஸ்டர் மூலம் வெளிப்படுத்த முயற்சித்துள்ளோம். இந்த படத்தின் திரைக்கதையில் ஒரு உணவுப்பொருள் தேவைப்பட்டது. எல்லோருக்குமே தங்களது குழந்தை பருவத்தில் ஒரு உணவு நினைவில் இருக்கும். நீண்ட நாள் கழித்து அதை பார்க்கும் போது உங்களது பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து விடும். இந்த படத்தில் அப்படி படத்தில் கருத்தை உருவகமாக சொல்வதற்கு எளிமையான வழியில் தேவைப்பட்ட உணவுப் பொருளாக பன் பட்டர் ஜாமை தேர்வு செய்தோம். படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கதைக்கான ஒரு வரி கருவுடன் என்னிடம் வந்தார். அவர் சொன்ன அந்த கருவில் ஒரு ஸ்பார்க் இருந்தது. அதை ஒரு முழு ஸ்கிரிப்ட் ஆக மாற்றும் அளவிற்கு அதில் விஷயம் இருந்தது. அப்படித்தான் இந்த கதை உருவானது” என்றார்.

 

Bun Butter Jam First Look Release

 

தயாரிப்பு வடிவமைப்பாளர் சதீஷ் பேசுகையில், “இந்தப் படத்தின் ஒரு வரி கதை தயாரிப்பாளர் சுரேஷுக்கு பிடித்து இருந்தது. அதை சொன்னதும் அதற்கேற்றபடி முழுக்கதையையும் இயக்குநர் ராகவ் தயார் செய்துகொண்டு  வந்தார். கதையை கேட்டதும் தயாரிப்பாளர் சுரேஷ் அனைத்தையும் எங்கள் பொறுப்பில் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என நினைத்த போது தான் ராஜு நினைவுக்கு வந்தார். ஏற்கனவே அவர் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக அவருக்கு இதுதான் முதல் படம். இது பெரிய பட்ஜெட் படம் தான். நான் படம் பார்த்து விட்டேன். ராஜு சிறப்பாக நடித்துள்ளார். தனக்கு  இது சரியாக வருமா என என்னிடம் அவர் அவ்வப்போது சந்தேகம் கேட்பார். எல்லாம் சரியாக வரும் என அவரை சமாதானப்படுத்துவேன். கதாநாயகியும் புதுமுகமாக இருக்க வேண்டுமென கேரளாவில் இருந்து ஆத்யாவை வரவழைத்து ஆடிசன் செய்து ஓகே செய்தோம்” என்றார்.

 

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா பேசுகையில், “இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஒரு யூத்ஃபுல்லான படம் இது. அப்படி ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அந்த வகையில் இரண்டரை மணி நேரம் பார்க்கும் ஒரு ஃபீல்குட் படமாக இது இருக்கும். பாடல் கம்போசிங்கின் போது கூட ரொம்பவே சீரியஸாக இல்லாமல் ஜாலியும்  கலாட்டாவுமாக தான் பாடல்களை உருவாக்கியுள்ளோம். ராஜுவை பொறுத்தவரை அவருக்குள் ஒரு இயக்குநர் இருக்கிறார் என்பதால் அனைவரும் ரசிக்கும் விதமான நடிப்பை இதில் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாபு, பத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் ஆகியோருடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றியுள்ளேன்” என்றார்.

 

நாயகி ஆத்யா பிரசாத் பேசுகையில், “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ராகவ் சொன்னபோது நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையுடன் பொருந்தி போனது. அதனாலேயே இந்த படத்தில் நடிக்க விரும்பினேன். அதற்கு ஏற்ற மாதிரி ஆடிசனிலும் தேர்வானேன். ராஜுவுடன் இணைந்து நடித்தது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. படத்தில் அவர் கதாபாத்திரம் என்னவோ அதேபோலத்தான் எப்போதுமே வாழ்ந்து கொண்டே இருந்தார். அவரது நிஜ கேரக்டரே அதுதானா என்று கூட தோன்றியது” என்றார்.

Related News

9876

தயாரிப்பாளர் தாணு கன்னட சினிமாவில் தனது முத்திரையை பதிக்க வேண்டும் - நடிகர் சுதீப் விருப்பம்
Thursday December-26 2024

தமிழ் திரைப்படம் MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் இன்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது...

‘அகத்தியா’ மூலம் புதுமையான உலகைப் படைத்திருக்கும் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் - பா.விஜய் கூட்டணி!
Tuesday December-24 2024

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்,  அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’அகத்தியா’...

Coke Studio Tamil Season 2 wraps up with pride in Tamil music, culture and diversity
Tuesday December-24 2024

Coke Studio Tamil has wrapped up its remarkable Season 2, leaving a lasting impact by celebrating Tamil music and culture with a stellar lineup of artists...

Recent Gallery