Latest News :

”கலைப்படைப்புகளில் தெருக்கூத்து பற்றி சொல்வது அனைத்தும் தவறானது!” - வருத்தப்படும் ‘ஜமா’ பட இயக்குநர்!
Friday July-19 2024

இந்தியாவில் இந்து ஆஸ்கர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்ற ‘கூழாங்கல்’ திரைப்படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜமா’. தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக மட்டும் இன்றி, அந்த கலைஞர்களின் வாழ்வில் இதுவரை சொல்லப்படாத விசயத்தை சொல்லும் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம்  ‘கூழாங்கல்’  போலவே மக்களுக்கான படைப்பாக உருவாகியுள்ளது.

 

அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

சமீபத்தில் வெளியான ‘ஜமா’ படத்தின் டீசர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாளை (ஜூலை 19) படத்தின் டிரைலர் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் மற்றும் நடிகர் பாரி இளவழகன், நடிகர் சேத்தன் உள்ளிட்ட படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.

 

படம் பற்றி பாரி இளவழகன் கூறுகையில், “டீசர் மற்றும் டிரைலர் பார்க்கும் போதே இது தெருக்கூத்து கலைஞர்களின் படம் என்பது தெரிந்துவிடும். திரைப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட கலைப்படைப்புகளில் தெருக்கூத்து கலைஞர்கள் பற்றி தவறான தகவல்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக அவர்கள் மிகவும் கஷ்ட்டப்படுவதாகவும், அந்த கலை அழிந்து வருவதாகவும் காட்டுகிறார்கள். அது உண்மை அல்ல, அவர்கள் நன்றாகவும், வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால், கலைப்படைப்புகளில் அந்த கலை பற்றி தவறான உதாரணங்களை சொல்கிறார்கள். அதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும். காரணம், தெருக்கூத்து கலை பின்னணியில் வாழ்ந்தவன் நான். எனது ஊரில், எனது உறவினர்கள் பலர் இன்னமும் தெருக்குத்கூத்து கலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் படம் இயக்கும் நேரத்தில் நாம் பார்த்து பழக்கப்பட்ட நமது கதையை சொல்லலாம் என்று தோன்றியது. அதனால் தான் இப்படிப்பட்ட கதையை தேர்வு செய்தேன். தெருக்கூத்து கலைஞர்கள் பற்றி சொல்லப்பட வேண்டிய விசயத்தை தான் இதில் சொல்லியிருக்கிறேன். ஆண் கலைஞர்கள் பெண் வேடம் போடும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகம். அவர்களுடைய சொந்த ஊரிலேயே அவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள். கலை நிகழ்ச்சிகாக வெளியூர் சென்றாலும் அங்கேயும் அவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். இதனால், பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய இத்தகைய பிரச்சனையை தான் ‘ஜமா’ எதார்த்தமாகவும், சினிமாவுக்கான மொழியிலும் பேசுகிறது. ’ஜமா’ என்பது தெருக்கூத்து  கலைஞர்களின் குழுவைக் குறிக்கும் சொல். கதை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தெருக்கூத்து ஜமாவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து நகர்வது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

 

நான் நடிகனாக வேண்டும் என்று தான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். பல வருடங்களாக சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தேன், அதே சமயம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வந்தேன். இந்த கதையை எழுதி முடித்த பிறகு என் நண்பர்களை கூட இயக்குநராக்கி இந்த படத்தை எடுத்திருக்கலாம். ஆனால், நான் பார்த்த ஒரு வாழ்க்கையை, நானே இயக்கினால் தான் சரியாக வரும் என்று தோன்றியது. அதனால் தான் இயக்கவும் செய்தேன். நான் தயாரிப்பாளர்களிடம் கதையை சொன்ன போது அவர்கள் புரிந்துக்கொண்டார்கள். அவர்களுக்கு சினிமா ஞானம் என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது. ‘கூழாங்கல்’ போன்ற ஒரு படத்தை புரிந்து தயாரித்திருப்பவர்கள், என் படத்தை நிச்சயம் புரிந்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அதனால் தான் அவர்களை நான் அனுகினேன், அவர்களும் இந்த கதையை நிச்சயம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் எனக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து, ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.

 

சேத்தன் சார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று என் தந்தை தான் சொன்னார். அதன்படி அவர் பற்றி விசாரித்த போது ’விடாது கருப்பு’ தொடரில் அவர் வேடம் பற்றி நண்பர்கள் சொன்னார்கள். அவரிடம் நான் இயக்கிய பைலட் வீடியோ ஒன்றை காட்டினேன். அதை பார்த்துவிட்டு அவர் சம்மதம் தெரிவித்ததோடு, கூத்து வாத்தியாரிடம் சுமார் 5 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டார். ஜமாவின் வாத்தியாராக அவர் நடித்திருக்கிறார். இப்போது படத்தை பார்க்கும் போது, இந்த வேடத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் அது சரியாக இருந்திருக்காது, என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவரது நடிப்பு கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

 

இப்போதைக்கு தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்களின் வாழ்வியல் படத்தை புரிந்துக்கொண்டு அதற்கான இசையை கொடுக்க கூடியவர் இளையராஜா சார் மட்டும் தான், அதனால் தான் அவர் இசையமைக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை அணுகும் போது நான் எடுத்த பைலட் வீடியோவை தான் காண்பித்தேன். அவர் அதை பார்த்துவிட்டு உடனே சம்மதம் சொல்லிவிட்டார். அதன் பிறகு நான் யார்?, யாரிடம் பணியாற்றினேன்? என்று எதையும் கேட்கவில்லை. அவர் இந்த படத்திற்கான இசை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து பணியாற்ற தொடங்கிவிட்டார். படத்தில் இறுதியில் இடம்பெற கூடிய ஒரு பாடலை உருவாக்க அவரிடம் சில ஐடியாக்களை சொன்னேன், அப்போது அவர் “இந்த பாடலை சினிமா பாணியில் எடுக்காமல், தெருக்கூத்து பாணியில் எடுக்கலாம் என்று சொன்னதோடு, இதில், வழக்கமான இசைக்கலைஞர்கள் அல்லாமல், தெருக்கூத்து கலைஞர்களையே பயன்படுத்தினால் தான் நன்றாக இருக்கும், என்று கூறி அவர்கள் மூலமாகவே பாடலை ஒலிப்பதிவு செய்தார். தெருக்கூத்து கலைஞர்கள் ஆயிரம் பேர் முன்னாடி வாசித்து பாடுவதை எளிதாக பார்ப்பார்கள். ஆனால், அவர்களை ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வைத்து வாசிக்க சொன்னாலோ அல்லது பாட சொன்னாலோ பயந்துவிடுகிறார்கள். பைலட் வீடியோ எடுக்கும் போது இது எனக்கு சவாலாக இருந்தது. அதனால் தான் படம் எடுக்கும் போது தெருக்கூத்து காட்சிகளை நேரடியாக ஒலிப்பதிவு செய்தோம். 

 

தெருக்கூத்து கலைஞர்கள் பற்றி சொல்லப்பட வேண்டிய பிரச்சனைகள் பற்றி படம் பேசினாலும், இது வெறும் கலைப்படைப்பாக மட்டுமே இருக்காது. அந்த விசயங்களை ஒரு ஜனரஞ்சகமான கதையோடு சொல்லும் படமாகவும், அந்த கதையில் மக்கள் எதிர்பார்க்கும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாகவும் இருக்கும். பெண் வேடம் போடும் ஆண்களுக்கு ஜமாவின் எந்தவித அங்கீகாரமும் இருக்காது. அவர்களை யாரும் நம்ப மாட்டார்கள். சொல்ல போனால் அவர்களால் இறுதிவரை வாத்தியார் ஆக முடியாது, என்ற நிலை தான் இருக்கிறது. அப்படி ஒரு நிலையை மாற்றுவதற்கான முயற்சி தான் இந்த படம்.” என்றார்.

 

Jama

 

நடிகர் சேத்தன் தனது கதாபாத்திரம் பற்றி கூறுகையில், “’விடுதலை’ படத்தை பார்த்துவிட்டு தான் என்னை இந்த படத்தில் நடிக்க வைக்க அணுகினார்கள். அவர் என்னிடம் கதை சொல்வதற்கு முன்பு, இந்த கதை பற்றி பைலட் வீடியோ ஒன்றை எனக்கு அனுப்பினார். அந்த வீடியோ பார்த்ததும் இது சாதாரண வேடம் இல்லை என்பதை புரிந்துக்கொண்டேன். அதற்காக தான் கூத்து வாத்தியாரிடம் முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டதோடு, படப்பிடிப்பு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பாக படப்பிடிப்பு நடக்கும் கிராமத்திற்கு சென்று, தெருக்கூத்து கலைஞர்களுடன் பழகி, சில நுணுக்களை கற்றுக்கொண்டேன். நிச்சயமாக இந்த படம் என் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், ‘கூழாங்கல்’ போன்று ‘ஜமா’ படமும் சிறப்பான, மக்களுக்கான படமாக அமைந்திருக்கிறது. நயன்தாரா மூலம் முந்தைய படத்திற்கு  ஒரு அடையாளம் கிடைத்தது. அதுபோல் இந்த படத்தையும் மற்றவர்களிடம் கொடுக்க நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்களே நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். ‘கூழாங்கல்’ படத்தை திரையரங்குகளில் வெளியிட தான் முயற்சித்தோம், ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஆனால், இந்த படத்தை நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். காரணம், இந்த படத்தை மக்கள் பார்க்க வேண்டும், இந்த படம் மக்களை சென்றடைந்து, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். படமும் அதற்கு ஏற்றவாறு தான் இருக்கிறது.” என்றார்.

 

Jama

 

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலில் இதுவரை பேசப்படா பிரச்சனைகள் பற்றி பேசியிருக்கும் படைப்பாக உருவாகியிருக்கும் ‘ஜமா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

9896

கமல்ஹாசனின் ‘குணா’ திரைப்படத்தின் மறு வெளியீட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
Saturday September-07 2024

கமல்ஹாசன் நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘குணா’ திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையரங்குகளில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...

நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியானது!
Friday September-06 2024

தெலுங்கு திரையுலகின் முன்னணி மாஸ் நாயகனான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்‌ஷக்ன்யா  தேஜா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது...

நானியின் ‘ஹிட் : கேஸ் 3’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
Friday September-06 2024

’சூர்யாஸ் சாட்டர்டே’ திரைப்படத்தை தொடர்ந்து நானி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹிட் : கேஸ் 3’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery