Latest News :

பட விழாவில் பங்கேற்பதற்கு பணம் கேட்கும் நடிகை! - தயாரிப்பாளர் வேதனை
Wednesday July-31 2024

நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை, அதுபற்றி திரையுலகினர் பலர், பல மேடைகளில் பேசினாலும் அவர்களின் நிலையில் அவர்கள் உறுதியாகவே இருக்கிறார்கள். அஜித், நயன் இப்படி என்றால் வளர்ந்து வரும் சில நடிகர், நடிகைகள் கூட தாங்கள் நடிக்கும் பட விழாக்களை புறக்கணிப்பதோடு, பங்கேற்பதற்கு தனியாக பணமும் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளது. அந்த வரிசையில், நடிகை அபர்ணதியும் இணைந்திருக்கிறார். ஆம், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நாற்கரப்போர்’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அவர் ரூ.3 லட்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

 

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.வேலாயுதம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நாற்கரப்போர்’ படத்தில் அபர்ணதி கதையின் நாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடித்திருக்கிறார்.  முக்கிய வேடத்தில் காலா, கபாலி புகழ் லிங்கேஸ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

 

பிரபல மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஞ்சித் சி கே என்பவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். 

 

குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தமிழகமெங்கும் வெளியிடுகிறார். 

 

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று மாலை இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநரும் அந்த கதையை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். இங்கே வெற்றி தோல்வி என்பது சகஜம்.. நாம் நமது வேலையை சிறப்பாக செய்திருக்கிறோமா என்று தான் பார்க்க வேண்டும். அதன் பிறகு அது ரசிகர்கள் கையில். இங்கே நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் முதல் படத்திலேயே நிறைய கசப்பான அனுபவங்களை பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த அனுபவங்கள் தான் அவர்கள் முதலீடு. அதனால் விட்டதை விட்ட இடத்தில் தான் பிடிக்க வேண்டும். எங்கே தொலைத்தோமோ அங்கே தான் தேட வேண்டும்.

 

இந்த படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடிகை அபர்ணதி மிக சிறந்த நடிகை தான். ஆனால் என்ன வருத்தம் என்றால் அவர் இந்த விழாவிற்கு வரவில்லை. நடிகைகள் பிரமோசனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்து இது ஒரு சாபக்கேடாகவே மாறிவிட்டது. அபர்ணதியை இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்த போது அதற்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார். இது உண்மையிலேயே புதிதாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நானே அந்த பெண்ணிடம் போன் செய்து பேசினேன். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்று அவர் சொன்னதுடன் அவர் அமரும் மேடையில் அவர் அருகில் யார் யார் உட்கார வேண்டும் என்பது போன்று அவர் போட்ட நிபந்தனைகளை எல்லாம் சொன்னால் அது இன்னும் சர்ச்சையாக மாறிவிடும். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவரே போன் செய்து, ஸாரி சார்.. நான் தெரியாமல் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள். நான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று கூறினார். ஆனால் இன்று வரவில்லை. கேட்டதற்கு அவுட் ஆப் ஸ்டேஷன் என்று கூறி விட்டார்கள். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகைகளே தேவையில்லை. அவர் அப்படியே அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். உள்ளே வர வேண்டாம். அதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. இப்படி தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவிற்குள் வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள். இந்த படத்திற்கு தொடர்பே இல்லாத கோமல் சர்மா, நமீதா ஆகியோரே முன்வந்து கலந்து கொண்டிருக்கும்போது படத்தில் நடித்த நடிகைக்கு இதில் கலந்து கொள்வதில் என்ன சிரமம் ?

 

என்னைப் பொருத்தவரை ஒரு படம் பிடித்தது என்றால் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என மனசுக்குள் தோன்றும். கதையுடன் கூடிய கருத்தும் இருக்க வேண்டும். சமீபத்தில் கூட இயக்குநர் மீரா கதிரவானின் ஒரு படம் பார்த்தேன். இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நாற்கரப்போரில் பேசப்பட்டிருக்கக் கூடிய அரசியல் எனக்கு பிடித்திருக்கிறது. என்னுடைய மிக மிக அவசரம் படத்தில் யாரும் தொடாத ஒரு விஷயத்தை சொன்னது போல இதிலும் இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இயக்குனர் தொட்டிருக்கிறார்.

 

நான் எப்போதுமே பத்திரிக்கையாளர்களுடன் நெருங்கி அண்ணன் தம்பியாக பழகக் கூடியவன். ஆனால் சமீப காலமாக ஒரு வார இதழில் என்னுடைய வணங்கான் படத்தை பற்றி தொடர்ந்து தவறான விஷயங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. எனக்கும் பாலாவிற்கும் பிரச்சனை, அதுவும் பணத்தினால் என்று சொல்கிறார்கள். அவர்களே இப்போது இந்த விழாவிற்கு நான் கிளம்பும் முன் ஒரு பேட்டிக்காக என்னிடம் வந்தார்கள்.. எழுதி வைத்துக்கொண்ட அமெச்சூர்தனமான கேள்விகளை கேட்டார்கள். இறுதியில் பாலாவை வைத்து படம் எடுத்து அனைவருமே தெருவுக்கு வந்து விட்டார்கள்.. நீங்கள் எப்போது தெருவுக்கு வரப் போகிறீர்கள் என நேரடியாக கேட்டார்கள். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் நேரத்தில் கூட அந்த கேள்விதான் என் மனதிலேயே ஓடிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே அது எங்களை காயப்படுத்துகிறது” என்றார்.

 

நடிகர் லிங்கேஷ் பேசுகையில், “இந்த கதையை நம்பிக்கையுடன் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் வேலாயுதம் அவர்களுக்கு நன்றி. படம் முடிவடைந்ததும் இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதில் இணைந்ததுமே திருப்தியும் சந்தோசமும் ஏற்பட்டது. இந்த படத்திற்குள் நான் வந்ததற்கு காரணம் கலை இயக்குனர் ராகவன் தான். நான் கேட்ட சம்பளம் காரணமாக இந்த படத்தில் நடிப்பதற்கு இழுபறி ஏற்பட்ட நிலையில் இது துப்புரவு பணியாளர்கள் பற்றிய கதை என ராகவன் கூறியதும் மறு பேச்சின்றி இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது முக்கியமான படம் பயங்கரமாக அரசியல் பற்றி பேசி இருக்கிறது” என்றார்.

 

இயக்குநர் லெனின் பாரதி பேசுகையில், “விளையாட்டை மட்டும்தான் இரண்டு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டு. இன்னொன்று மூளை சார்ந்தது. உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டில் உலகம் முழுவதும் உள்ள கருப்பின மக்கள் தான் சாதனை செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் உடல் உறுதியாக இருப்பவனுக்கு மூளை இருக்காது என்கிற தப்பான ஒரு எண்ணத்தை இங்கே உள்ள ஒரு கூட்டம்  தொடர்ந்து நம்ப வைத்துக்கொண்டே இருக்கிறது. விளையாட்டு மட்டுமல்ல சமீப காலமாக கவனித்துப் பார்த்தால் கிரிக்கெட், புட்பால் வர்ணனை செய்வதில் கூட ஒரு குறிப்பிட்ட கூட்டம் தான் இருக்கிறது. அதில் கூட சாதி ஆதிக்கத்தை காட்டிக் கொண்டே இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் எங்களுக்கும் மூளை இருக்கிறது என்று ஒரு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சிறுவனை கொண்டு வந்து இந்த படத்தை எடுத்திருப்பது ஜனரஞ்சகமாக இருக்கிறது” என்றார்.

 

நடிகை கோமல் சர்மா பேசுகையில், “தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை பொருத்தவரை அவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட. அவருக்கு மிகப்பெரிய நட்சத்திரங்கள் கூட கால்சீட் கொடுக்க முன் வரும் நிலையில் அவர் இயக்கிய மிக மிக அவசரம் படமாகட்டும் அல்லது இப்போது வெளியிட இருக்கும் இந்த படமாகட்டும் லாப நோக்கத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை எப்படி கொண்டு போய் சேர்க்க முடியும் என்று தான் பார்க்கிறார். நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாகத்தான் எல்லோருக்கும் முதலில் அறிமுகமாகி இருக்கிறேன். எப்போது வெற்றி பெற்றாலும் மற்றவர்களுக்கு உதவியாக இரு என்றுதான் என் அம்மா சொல்லிக் கொண்டிருப்பார். நிறைய மறுவாழ்வு முகாம்களில் சென்று பார்க்கும் போது மனதில் நிறைய வலி ஏற்படும். அவங்களும் நம்மைப் போலவே கடின உழைப்பை கொடுக்கிறார்கள். நம்மைப் போலவே அன்பாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் திரும்பவும் அவர்கள் வீடு திரும்ப முடியுமா ? திரும்பவும் அவர்களால் பழைய வாழ்க்கை வாழ முடியுமா என நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நமக்கும் இருக்கும் வித்தியாசம் என்றால் அது கல்வி மற்றும் விளையாட்டு மட்டும்தான் அவர்களுக்கும் விளையாட்டுக்கான முக்கியத்துவத்தை கொடுக்கும் போது அவர்களும் மேலே வர முடியும். சுரேஷ் மேனன் சாருடன் நான் மலையாள படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் அவர் நடித்திருப்பது மிகப்பெரிய பலம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

 

Naarkarapor

 

நடிகர் கவிதா பாரதி பேசுகையில், “இந்த படத்தின் நோக்கம் மற்றும் கதை குறித்து படத்தின் இயக்குநர் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த விழாவில் மேடை ஏற்றி அழைத்துப் பேச வைத்த பலரும் ‘கருப்பு காய்’களாக இருந்தார்கள் என்பது நான் ரொம்பவே பெருமைப்படும் விஷயம். இந்த படம் எதைப்பற்றி பேசுகிறது என்பது மட்டுமல்ல. இதில் யார் யாரெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பது கூட  எனக்கு பிடித்திருக்கிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எந்த படத்தை வெளியிடுகிறாரோ அது நல்ல ஆழமான கருத்துள்ள படம் என்பது அடையாளமாகி விட்டது. யார் என்ன படிக்க வேண்டும், என்ன பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சமூகத்தில் எப்படி ஒரு நீண்ட நெடிய போராட்டமாக இருந்து வருகிறதோ திரைப்படத்திற்குள்ளும் அப்படி ஒரு போராட்டம் நடந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. ஓடுக்கப்பட்டவர்களைப் பற்றி பேசுவதற்கு அவர்களை பற்றி யார் யாரெல்லாம் பேசலாம் என்பதற்கு இவ்வளவு காலம் ஆகி இருக்கிறது. பேலசோ தியேட்டரில் எந்த படம் போட வேண்டும் காசி தியேட்டரில் எந்த படம் ஓட வேண்டும் என்பதில் கூட ஒரு பாகுபாடு இருக்கிறது. அந்த இடத்தை அடைவதற்கு நம்முடைய கருப்பு காய்கள் நீண்ட நெடிய போராட்டத்தில் நடத்தி வந்திருக்கிறார்கள். நான் விஜய் டிவிக்காக சலனம் என்கிற ஒரு தொடரை இயக்கிய போது அதில் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் லிங்கேஷ். அவர் பெரிய இயக்குனராக வருவார் என்று நினைத்தேன்.. நடிகராக மாறிவிட்டார்” என்றார்.

 

நடிகை நமீதாவின் கணவர் வீரா பேசுகையில், ”மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் சேர்ந்து படம் பண்ணக்கூடிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போன்ற ஒருவர், ஒரு படத்தை பார்த்துவிட்டு எப்போது அதை வெளியிட முன் வருகிறாரோ அப்போதே இந்த படம்  வெற்றி பெற்று விட்டது என்று சொல்லலாம். சுரேஷ் காமாட்சி போன்ற வர்த்தகம் தெரிந்த நிறைய தயாரிப்பாளர்கள் இதுபோன்று படங்களை வெளியிட முன்வர வேண்டும்” என்றார்.

 

நடிகை நமீதா பேசுகையில், “தமிழ் ரசிகர்களுக்கு சினிமா என்றால் பொழுதுபோக்கு, அதன் கூடவே ஒரு சமூகத்திற்கு தேவையான செய்தி இருந்தால் போதுமானது. அதற்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட், மிகப்பெரிய இசையமைப்பாளர் என எதையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. நம் நாட்டில் இப்போது விளையாட்டு துறையில் நல்ல வளர்ச்சி இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு கபில்தேவ், சச்சின், சானியா மிர்சா என்று சில ஆட்கள் தான் பிரபலமாக இருந்தார்கள். இந்த பத்து வருடங்களில் தான் நிறைய வீரர்கள் விளையாட்டுத்துறையில் சாதிக்கிறார்கள். ஒலிம்பிக்கில் ஒரு பெண் தங்க மெடல் பெற்று தந்திருக்கிறார். தமிழ்நாட்டின் பெருமையாக பிரக்யானந்தா செஸ் சாம்பியன் ஆக ஜொலிக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கு இப்போது நிறைய நம்பிக்கை இருக்கிறது. பலன்கள் கிடைக்கிறது. உங்கள் வீட்டில், உங்கள் சுற்று வட்டத்தில் ஒரு குழந்தைக்கு விளையாட்டு ஆர்வம் இருக்கிறது என்றால் நிச்சயமாக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும், விளையாட்டு ஒருவரை மிகவும் ஒழுக்கமானவராக மாற்றுகிறது, அதன் பிறகு வாழ்க்கையில் எல்லாமே எளிதாக வந்துவிடும், தயவுசெய்து அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் உங்களது வலது பக்க பாக்கெட்டில் மொபைல் ஃபோனை வைக்காதீர்கள், அதனால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்” என்றார்.

 

இயக்குநர் அமுதகானம் ஆதவன் பேசுகையில், ”‘நாற்கரப்போர் என இந்த டைட்டிலிலேயே ஒரு போராட்டம் தெரிந்தாலும் இந்த படத்தை தயாரிப்பதிலோ அல்லது இதை வெளியிடுவதிலோ எந்த போராட்டமும் இருக்கவில்லை என்று சொல்லலாம். நானும் ஒரு இயக்குநராக பல படங்களை இயக்கியுள்ளேன். அவை வெற்றி தோல்வி என்பதைவிட அவற்றையெல்லாம் ரிலீஸ் செய்துள்ளேன் என்பது தான் முக்கியம். ரிலீஸ் சமயத்தில் ஒவ்வொரு காலகட்டமும் சினிமாவில் போராட்டம் தான். இந்த படத்திற்கு மிகப்பெரிய யோகம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வடிவில் வந்திருக்கிறது. இந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டவன் என்கிற முறையில் சொல்கிறேன், சமீப காலமாக தமிழ் சினிமாவில் தரமான படம் என்கிற பெயரில் படங்கள் வெளிவரவில்லை. ஆனால் அதை உடைத்து எறியும் விதமாக இந்த நாற்கரப்போர் வருகிறது” என்றார்.

 

இயக்குநர் யுரேகா பேசுகையில், ‘மிக நுட்பமான சிறப்பான அரசியலை பேசும் ஒரு படமாக இந்த நாற்கரப்போர் இருக்கும் என நான் பார்க்கிறேன். நாற்கரப்போர் என்கிற தலைப்பு என்னை சற்று சிந்திக்க வைத்தது. விளையாட்டில் மட்டுமல்ல இசையிலும் கூட இனவெறி இருக்கிறது. பியானோவில் கூட கருப்பு வெள்ளை கட்டை இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் எதையெல்லாம் உருவாக்கினார்களோ தங்களை முன்னிறுத்தி தான் எல்லா சாதனங்களையும் உருவாக்கினார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. துப்புரவு தொழிலாளர்களை முன்னிறுத்தி இந்த விளையாட்டுடன் இணைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது. குப்பை போடும் நாம்தான் குப்பைக்காரர்கள்.. அதை துப்புரவு செய்யும் நபர்கள் சுத்தக்காரர்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அஸ்வின் திரையில் மட்டுமல்ல தரையிலும் இன்னும் எமோஷனலாககவே இருக்கிறான் என்றால் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி உணர்ந்து அவன் நடிப்பதற்கு காரணமான இயக்குநர் தான். இந்த படம் தேசிய விருதுக்கான திரைப்படம். அப்படி இந்த படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்றால் தேர்வுக்குழுவில் ஏதோ குழப்பம் என்று தான் அர்த்தம்” என்றார்.

 

இயக்குநர் மீரா கதிரவன் பேசுகையில், “நாற்கரப்போர் என தமிழில் பெயர் வைத்ததற்கு நன்றி. தமிழில் பெயர் வைக்க மாட்டோம் என பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இங்கே முதல் படம் எடுக்க வருபவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது. ஆனாலும் முதல் படத்திலேயே சமூக அக்கறை கொண்ட படமாக இதை எடுத்து இருக்கிறார்கள். சாராயக்கடை அருகிலேயே இருக்கும் இளநீர் கடைக்கும் ஒரு வியாபாரம் உண்டு என்பது போல, இங்கே எல்லா படைப்புகளுக்கும் ஒரு வியாபாரம் இருக்கிறது. எளிய மனிதர்கள் குறித்து வரக்கூடிய படங்களுக்கு இப்போது நல்ல கமர்சியல் வேல்யூ இருக்கிறது. சுரேஷ் காமாட்சி போன்ற தயாரிப்பாளர்கள் அபூர்வமானவர்கள். இந்த படத்தை அவர் வெளியிடுவதை வெற்றியாக பார்க்கிறேன். மற்ற திரையுலகங்களில் பெரிய படங்கள் வெளியாகும் போது அவற்றுக்கு இணையாக சின்ன படங்களும் வெளியாகும்  ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் தமிழ் திரை உலகில் அப்படி இல்லை.  தேசிய விருது பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம். மக்கள் தரும் விருதுதான் முக்கியம்” என்றார்

 

இயக்குனர் சுப்பிரமணிய சிவா பேசுகையில், “சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் படம் சின்ன படமாக இருந்தாலும் அதுதான் அதிக லாபத்தை கொடுத்த படம் என்று சொல்வார். அப்படி அதிக லாபத்தை கொடுக்கும் படம் பெரிய படம் ஆகிவிடுகிறது. அந்த வகையில் இந்த நாற்கரப்போர் படம் மிகப்பெரிய லாபகரமாக அமைய வேண்டும். சாதாரண மனிதர்கள் எல்லோருக்குமே அசாதாரண வாழ்க்கை தான் கிடைக்கும். இந்த உலகத்தில் ஏழைகள் தான் அதிகம் இருக்கின்றனர். அவர்களை முன்னேற விடமாட்டார்கள். தாங்களாகவே முன்னேறினால் தான் உண்டு. ஏழைகளின் முன்னேற்றத்திற்கு தான் கடவுள்கள் பாடுபட்டார்கள் என்றாலும் இப்போதும் அவர்கள் ஊரிலேயே இன்னும் ஏழைகள் தானே இருக்கிறார்கள். தனி மனிதனாக பார்த்து தான் முன்னேற வேண்டும். இங்கே பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக பணத்தை சேர்த்து வைத்து அவர்களை குட்டிச்சுவர் ஆக்கி விடுகிறார்கள். ஆனால் வெளிநாட்டில் அப்படி அல்ல.. அங்கே பணக்காரர்கள் பிள்ளைகளை விட இந்த சமூகத்திற்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்குகிறார்கள். அப்போதுதான் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். கருப்பு வெள்ளை என இனியும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கள்ளுண்ணாமை என 3000 வருடத்திற்கு முன்பே எழுதியிருப்பதால் அப்போதிருந்தே குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இப்போது பார் சீன் வைத்து விட்டார்கள் என கத்துகிறார்கள். ஒரு படைப்பு என்பது அந்த சமூகத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்” என்றார்.

Related News

9926

‘அகத்தியா’ மூலம் புதுமையான உலகைப் படைத்திருக்கும் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் - பா.விஜய் கூட்டணி!
Tuesday December-24 2024

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்,  அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’அகத்தியா’...

Coke Studio Tamil Season 2 wraps up with pride in Tamil music, culture and diversity
Tuesday December-24 2024

Coke Studio Tamil has wrapped up its remarkable Season 2, leaving a lasting impact by celebrating Tamil music and culture with a stellar lineup of artists...

’பரோஸ்’ ஒரு மேஜிக் உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும் - நடிகர் மோகன்லால் உறுதி
Tuesday December-24 2024

ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...

Recent Gallery