Latest News :

பா.இரஞ்சித்துடன் மீண்டும் இணைந்து பணியாற்ற காத்துக்கொண்டிருக்கிறேன் - நடிகர் விக்ரம்
Tuesday August-06 2024

பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக.5) சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் படம் குறித்தும் தனது சினிமா பயணம் குறித்தும் பேசிய நடிகர் விக்ரம், “இந்த படத்தின் பிள்ளையார் சுழி தயாரிப்பாளர் ஞானவேல்  ராஜா தான்.  இது போன்றதொரு படைப்பை உருவாக்குவதற்கு தனித்துவமான துணிச்சல் தேவை. அதனை செய்து சாதித்ததற்காக உங்களுக்கு இந்த தருணத்தில் ஒரு 'ஓ' போட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கலானுக்கு வாழ்வு கொடுத்த உங்களுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். என்னுடைய வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்து அற்புதமாக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாருக்கும் நன்றி.  படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியமானது. இந்த படத்தை நீங்கள் பார்ப்பதை விட ஜீவி இசை மூலம் கேட்பீர்கள். இன்றைய விழாவின் நாயகன் அவர் தான்.  படத்தில் நாங்கள் உணர்ந்து நடித்த விசயத்தை, நீங்கள் திரையில் அற்புதமான இசை மூலம் மேம்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் உருவாக்கிய ஒலிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகவும் தனித்துவமானதாகவும் இருந்தது. இதற்காக உங்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த  விழாவிற்காக ஆர்வத்துடன் காத்திருந்து வருகை தந்த என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய என்னுடைய குழுவினருக்கு இந்த மேடையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததில்லை. ஏனெனில் ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் மேக்கப் போட வேண்டும். அதிலும் குறிப்பாக முப்பையிலிருந்து வருகை தந்த டாம் எனும் கலைஞர். இந்த கதாபாத்திரத்தை இயக்குநர் ரஞ்சித் கற்பனை செய்து உருவாக்கியிருந்தாலும், இதனை திரையில்‌ காணும் தோற்றத்தை உருவாக்கியவர் ஒப்பனை கலைஞர் டாம் தான். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் தோன்றும் தொப்பையை நிஜமாகவே சாப்பிட்டு சாப்பிட்டு ஏற்படுத்திக் கொண்டது தான். என்னுடைய குழுவை சேர்ந்த ஷ்ரவண் டாட்டூவை வரைவார்.  மேலும் என்னுடைய குழுவை சேர்ந்த கலை , பிரின்ஸ் இவர்களெல்லாம் என்னுடைய ஒப்பனையை சீராக்கியவர்கள். செதுக்கியவர்கள்.

 

'தூள்' படத்தில் தொடங்கி இதுவரை ஆறு படங்களில் பசுபதி உடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவரை நான் யாருடனும் இவ்வளவு படங்களில் நடித்ததில்லை.‌ இந்தத் திரைப்படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தில் அவரும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் பேசும் ஸ்லாங்கை அனைவரும் மேடையில் மிமிக்கிரி செய்வார்கள். அந்த அளவிற்கு அவருடைய பேச்சு பிரபலமாகும். அவர் இப்போது துருவ்‌ உடனும் பைசன் படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன் ஆரத்தி  எனும் கதாபாத்திரத்தை மிகவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். படத்தில் அவர்கள் பேசும் டயலாக் கஷ்டமாக இருக்கும். இயக்குநர் ரஞ்சித் அவரிடம் இருந்து நேர்த்தியாக வேலையை வாங்கினார். பார்வதி இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என எப்போதும் விரும்பி இருக்கிறேன்.‌ அவருடைய ஸ்டைல் ஆப் ஆக்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

 

பா.ரஞ்சித் சொன்னது போல் அந்த காலகட்டத்தில் பெண்களும் வேலைக்குச் செல்வார்கள். போருக்கு செல்வார்கள். சண்டையிடுவார்கள். அவர்களுடைய கைகளும் ஆண்களின் கைகளை போல் கடினமாகத்தான் இருக்கும். அது போன்றதொரு சமத்துவம் இருந்த காலகட்டம் அது.‌ ரஞ்சித்தின் படங்களில் பெண்கள் எப்போதும் உறுதியானவர்களாக இருப்பார்கள்.  இந்தப் படத்தில் நாயகனுக்கு நிகராக நாயகிகள் இருக்கிறார்கள் . இதனால் பார்வதி , மாளவிகாவுடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. டேனி படப்பிடிப்பு தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.  படத்தில் அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரிடம் படத்தின் விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்களா, கலந்து கொள்ள மாட்டீர்களோ அது உங்கள் விருப்பம். ஆனால் இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். அங்கு நாங்கள் இந்த படைப்பை எப்படி கொண்டாடுகிறோம் என்பதனை நேரில் காண வேண்டும், எனக் கேட்டுக் கொண்டேன். அதற்காக இன்று இந்த இசை வெளியீட்டு விழாவில் அவரும் கலந்து கொண்டிருக்கிறார். இதற்காகவும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்தப் படத்தில் அரிகிருஷ்ணன்  சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை நான் 'மெட்ராஸ்' படத்திலிருந்தே கவனித்து வந்திருக்கிறேன்.  அவன் சிறந்த நடிகர். அனைத்து இயக்குநர்களும் அவன் மீது ஒரு கண் வைத்து, வாய்ப்பினை வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.  படப்பிடிப்பு தளத்தில் காட்சியை படமாக்கும் தருணத்தில் அவனது முயற்சிகள் அனைத்தும் 'சேது' படத்திற்கு முன் நான் எதனை முயற்சி செய்தேனோ, அதனை அவரிடத்தில் பார்த்தேன். அதனால் உறுதியாக சொல்கிறேன் எதிர்காலத்தில் அரிகிருஷ்ணன் சிறந்த நடிகராக வலம் வருவார்.

 

படத்தில் நான் மட்டுமல்ல ஒவ்வொரு காட்சியிலும் நடித்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். பா ரஞ்சித் ஒவ்வொரு காட்சியை ஓவியம் போல் செதுக்கியிருக்கிறார். ஒரு காட்சியில் நான் மட்டும் கோவணம் கட்டிக்கொண்டு தோன்றுகிறேன் என நினைத்தேன். அந்தக் காட்சி இரண்டு நாள் நீடிக்கும் என நினைத்தேன். ஆனால் பத்து நிமிடத்தில் அந்த காட்சியை இயக்குநர் ரஞ்சித் படமாக்கினார். அந்தக் காட்சியில் உடன் நடித்த அனைவரும் அர்ப்பணிப்புடன் முழு ஈடுபாட்டுடன் நடித்து அந்த காட்சியை நிறைவு  செய்தனர்.  இது எனக்கு பிரமிப்பை தந்தது. சில காட்சிகளில் நான் நிற்பது கூட தெரியாமல் என்னை தள்ளிவிட்டு நடிகர்கள் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கினார்கள், இதற்காக இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்.

 

'சேது', 'பிதாமகன்', 'அந்நியன்', 'ஐ ' 'ராவணன்' ஆகிய படங்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டு நடித்தேன் என அனைவருக்கும் தெரியும். அனைத்து கதாபாத்திரங்களையும் நான் கஷ்டப்பட்டு, முழு ஈடுபாட்டுடன் தான் நடித்திருக்கிறேன்.  இது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் இந்த படங்கள் எல்லாம் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது.  ஆனால் தங்கலானுடன் ஒப்பிடும்போது இவை மிகக் குறைவு. அனைவரும் இதுபோன்ற படங்களை தேர்வு செய்து நடிப்பது ஏன்? என கேள்வி கேட்கிறார்கள். இதற்கு எப்படி பதில் அளிப்பது? என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால் தங்கலான் எனக்குள் இருக்கிறான். எனக்கும் அவருக்கும் ஒரு ஆன்மீகத் தொடர்பு இருக்கிறது. அது என்னால் உணர முடிந்தது.

 

யார் தங்கலான்..? அவர் ஒரு தலைவர்... அவர் ஒரு வீரர் . அதை எல்லாம் கடந்து.. அவனுக்கு ஒரு இலக்கு. அதை சென்றடைய வேண்டும். அவன் குடும்பத்தை அளவு கடந்து நேசிக்கிறான். அவன் தன் மக்களை அளவு கடந்து நேசிக்கிறான். அவனுடைய மக்களுக்கு தங்கத்தையோ அல்லது விடுதலையோ வழங்க வேண்டும் என விரும்புகிறான். அது என்ன? என்பது நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.‌ அவன் யோசித்து கூட பார்க்க முடியாத விசயம்.. அவனுக்கு கிடைக்க வேண்டும்.‌ பல தலைமுறைகளாக கிடைக்காத ஒரு விசயம் தனக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறான். அவருடன் இருப்பவர்களே 'நீ நினைப்பது நடக்காது. ஏன் நேரத்தை வீணடிக்கிறாய். விட்டு விடு' என தொடர்ந்து ஆலோசனை சொல்கிறார்கள். எத்தனையோ தடைகள் வருகிறது. அத்தனையும் அவன் கடக்கிறான்.

 

இது ஏன்? என்னுடன் சம்பந்தப்பட்டது என்றால் நான்  சிறிய வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் படிக்கவே மாட்டேன். நடிப்பின் மீது தான் விருப்பம் கொண்டிருந்தேன்.  எட்டாவது படிக்கும் வரை மதிப்பெண் விசயத்தில் வகுப்பில் முதல் மூன்று மாணவர்களின் ஒருவராக இருந்தேன். நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்ட பிறகு மதிப்பெண் விசயத்தில் கடைசி மூன்று மாணவர்களில் ஒருவராக இருந்தேன்.‌ நாடகம் பார்க்கும்போது இந்த கதாபாத்திரத்தை இப்படி நடிக்க வேண்டும். இப்படி நடித்திருக்க வேண்டும்.. என நான் முயற்சி செய்து கொண்டே இருப்பேன். மேடை நாடகங்களில் கூட நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கேரக்டர்களில் தான் நடிப்பேன். மேடையில் தனியாக நடித்துக் கொண்டிருப்பேன். இது கல்லூரியிலும் தொடர்ந்தது. கல்லூரியில் படிக்கும் போது நடிப்பின் மீதான ஆசை உச்சத்தை தொட்டது.  அதிர்ஷ்டமோ, துரதிஷ்டமோ எனக்கு தெரியவில்லை. சென்னை ஐஐடியில் 'பிளாக் காமெடி' எனும் நாடகத்தில் நான் நடித்தேன். அந்த நாடகத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்று விருது கிடைத்தது.  அதில் நடித்த பிறகுதான் என் கால் உடைந்தது.  காலை வெட்டி அகற்ற வேண்டும் என சொன்னார்கள். அதன் பிறகு ஆஸ்பத்திரி படுக்கையில் மூன்று வருடங்களை கழித்தேன்.  23 அறுவை சிகிச்சைகள் நடந்தது. அதன் பிறகு ஒரு வருடம் ஊன்றுகோலுடன் தான் நடப்பேன்.  அப்போது என் அம்மா மருத்துவரிடம் பையன் எப்போது எழுந்து நடப்பான்? என கேட்டார்கள். அதற்கு மருத்துவர், 'இனி எழுந்து நடக்கவே மாட்டான் 'என சொன்னார். அதற்கு என் அம்மா அழுது கொண்டே, ஏன் இப்படி சொல்கிறீர்கள்? எனக்கேட்டார். 'வெட்டி அகற்ற வேண்டும் என்று சொன்ன காலை நான் காப்பாற்றி விட்டேன். கால் இருக்கிறது தானே..!' என பதில் அளித்தார்.

 

அப்போது அழுது கொண்டிருந்த என் அம்மாவை பார்த்து, ஏன் அழுகிறாய்? நான் நிச்சயம் எழுந்து நடப்பேன்.‌ ஏனெனில் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் . ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது.‌

அதன் பிறகு மெதுவாக பட வாய்ப்புகள் வந்தது.‌ தொடர்ந்து 10 ஆண்டுகள் போராடினேன்.  அந்தத் தருணத்தில் நான் வேலைக்கு எல்லாம் சென்றிருக்கிறேன்.‌ என்னுடைய இரண்டு ஊன்றுகோல்களில் முதலில் ஒன்றை தொலைத்தேன். அதன் பிறகு மற்றொன்றையும் தொலைத்தேன். ஏனென்றால் நடிக்க வேண்டும் என்று தீரா ஆசை மட்டும் இருந்தது.‌

 

சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊன்றுகோல் உடன் பணியாற்றினேன். அப்போது நான் வாங்கிய சம்பளம் 750 ரூபாய். சினிமா வாய்ப்பு கிடைத்த பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். ஆனால் படம் ஓடவில்லை. பத்தாண்டுகள் கடந்து சென்றது. மீண்டும் உனக்கு நடிப்பு வராது விட்டுவிடு வேறு ஏதாவது கவனம் செலுத்து என்றனர். அந்தத் தருணத்திலும் என்னால் முடியும் நிச்சயம் வெல்வேன் என்று அவர்களிடம் சொன்னேன்.  அன்று என்னுடைய நண்பர்களின் பேச்சை கேட்டிருந்தால் நான் இன்று இந்த மேடையில் நின்று இருக்க மாட்டேன்.‌ உங்களிடத்தில் நான் இப்போது பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.‌

 

ஒரு கனவை இலக்காக வைத்து நம்பிக்கையுடன் பயணித்தால் அதனை ஒரு நாள் வெல்ல முடியும். நான் சில சமயங்களில் இப்படி கூட நினைத்ததுண்டு. ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றால்... என்ன செய்வது என்று. தற்போதும் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பேன். இதுதான் எனக்கு பதிலாக கிடைத்தது. இது தான் எனக்கு சினிமா மீதான காதல். எனவே சினிமாவை நான் இப்போதும் அளவு கடந்து நேசித்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவை நேசித்ததால் கிடைத்த அன்பளிப்பு தான் ரசிகர்களாகிய  நீங்கள். ராவணன் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது.‌ 'எய்யா சாமி இந்தப் பிசாசு அப்பன் ஆத்தா ஆச காசு காதல் கத்திரிக்கா இது எல்லாத்தையும் விட பெருசு..' என்ன பேசி இருப்பேன் இதுதான் ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு. நீங்கள் கொடுத்த அங்கீகாரம்.

 

நாளை ஆந்திராவிற்கு செல்கிறோம் . அதன் பிறகு பெங்களூருக்கு செல்கிறோம்.  அனைவரும் எதை நம்பி இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள் என கேட்கிறார்கள்? இப்படி அனைவரையும் இயக்குநர் பா . ரஞ்சித் கேள்வி கேட்க வைத்து விட்டார்.‌ அதுதான் முக்கியமானது. இது போன்றதொரு படத்திற்கு வாய்ப்பளித்ததற்காக ரஞ்சித்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ மெட்ராஸ் படம் வெளியானதில் இருந்து அவர் மீது எனக்கு ஒரு மரியாதை. அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தொடர்ந்து விருப்பமாக இருக்கிறேன். அவருடைய அடுத்த படத்தில் தினேஷ் ஹீரோ. அதற்கு அடுத்த படத்தின் ஆர்யா ஹீரோ, அதற்கடுத்து  நாம் இருவரும் மீண்டும் சேரலாமா? எனக் கேட்டிருக்கிறேன்.

 

இந்தப் படத்தில் அவர் எனக்கு ஒரு சவாலை கொடுத்தார். இந்த கதாபாத்திரத்தில் தனித்துவமாக நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  அந்த சவாலை கொடுத்ததற்காக அவரை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்.  நான் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தால் அதற்கான அங்கீகாரம் அனைத்தும் இயக்குநர் பா ரஞ்சித் -விஜய் -மணிரத்னம் -ஷங்கர் -ஹரி போன்ற இயக்குநர்களுக்கு தான் சேரும்.  ஏனெனில் இவர்கள் கொடுத்த ஊக்கம். வடிவமைத்த கதாபாத்திரம். கொடுத்த உத்வேகம் தான் காரணம்.‌ இவர்களைப் போன்ற இயக்குநர்கள் இருப்பதால் தான் என்னைப் போன்ற நடிகர்கள் உருவாக முடிகிறது.

 

ரஞ்சித்திற்கு என தனித்துவமான ஆற்றல் வாய்ந்த குரல் இருக்கிறது. அதனை பின்பற்றுவதற்கு ஒரு கூட்டமும் இருக்கிறது. அதனை பொறுப்புணர்வுடன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார்.  இதில் என்னுடைய ஆரோக்கியமான ஆதரவு உண்டு. அவருக்குள் ஒரு மென்மையான இதயம் இருக்கிறது. அதனையும் நான் கண்டிருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன்.” என்றார்.

Related News

9934

‘அகத்தியா’ மூலம் புதுமையான உலகைப் படைத்திருக்கும் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் - பா.விஜய் கூட்டணி!
Tuesday December-24 2024

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்,  அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’அகத்தியா’...

Coke Studio Tamil Season 2 wraps up with pride in Tamil music, culture and diversity
Tuesday December-24 2024

Coke Studio Tamil has wrapped up its remarkable Season 2, leaving a lasting impact by celebrating Tamil music and culture with a stellar lineup of artists...

’பரோஸ்’ ஒரு மேஜிக் உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும் - நடிகர் மோகன்லால் உறுதி
Tuesday December-24 2024

ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...

Recent Gallery