பரிச்சயமான நடிகர், நடிகைகள், பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட எந்த ஒரு அடையாளமும் இல்லாமலேயே சில திரைப்படங்கள் மக்கள் கவனத்தை ஈர்த்துவிடும். அதற்கு காரணம், படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர். அப்படி ஒரு தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் மூலம் தமிழ் சினிமாவிலும்,பார்வையாளர்களிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் ‘பராரி’.
இயக்குநர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய எழில் பெரியவேடி எழுதி இயக்கியிருக்கும் இப்படம் தமிழகத்தில் காலம் காலமாக பல திரைப்படங்களில் பேசப்பட்டு வரும் சாதி அரசியலில், இதுவரை யாரும் சொல்லாத விசயங்களை சொல்லியிருப்பதோடு, அம்மக்கள் மூலம் திராவிட நாடு அரசியலை மிக அழுத்தமாக பேசியிருக்கிறது.
படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் போல், இன்று ( ஆக.28 ) மாலை 4 மணிக்கு வெளியாக இருக்கும் ‘பராரி’ படத்தின் டீசரும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையையும், விவாதங்களையும் ஏற்படுத்த போவது உறுதி என்றாலும், படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் மற்றும் மனிதம் சார்ந்த விசயங்கள், இப்படத்தை அனைத்து தரப்பு மக்களையும் கொண்டாட வைக்கும், என்பது இயக்குநர் எழில் பெரியவேடியின் நம்பிக்கை மிகுந்த பேச்சில் தெரிகிறது.
படம் குறித்து இயக்குநர் எழில் பெரியவேடி கூறுகையில், “ராஜு முருகன் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன், ஜிப்ஸி படம் முடியும் போது இந்த கதையை நான் முடித்துவிட்டேன். சில நிறுவனங்களில் கதை சொன்னேன், கதையை கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாக சொல்வார்கள், ஆனால் கிளைமாக்ஸ் காட்சியை கேட்டுவிட்டு பயந்து விடுவார்கள், இந்த காட்சியில் எந்த நடிகர், நடிகையும் நடிக்க மாட்டாங்க, என்று நிராகரித்து விடுவார்கள். இப்படி பலரிடம் கதை சொல்வேன், அவர்களும் கிளைமாக்ஸ் காட்சியை கேட்டு பயந்து விடுவார்கள். இப்படியே போனதால் எனக்கே என் கதை மீது சலிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் சினிமாவை விட்டே போய் விடலாம் என்று முடிவு செய்து என் இயக்குநரிடம் கூறினேன். அவர் பதற்றமடைந்து வேண்டாம் என்று சொன்னதோடு, இந்த படத்தை நானே தயாரிக்கிறே, என்று கூறினார். அப்படி தான் ‘பராரி’ தொடங்கியது.
வட தமிழகத்தில் இருக்கும் இரண்டு விளிம்புநிலை சமூக மக்களிடையே இருக்கும் அரசியலை தான் இந்த கதை முன் வைக்கிறது. வட தமிழகம் பற்றி இதுவரை சொல்லாத அரசியல், இரண்டு சமூகமாக இருப்பவர்கள் ஒரே குலசாமியை வணங்குகிறார்கள், இது தான் அங்கிருக்கும் மிகப்பெரிய அரசியல். இருவரும் தினக்கூலியாக தான் இருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது இவர்களிடம் ஏற்ற தாழ்வு எப்படி வந்தது? என்ற கேள்வியை முன் வைப்பதோடு, திராவிட் நாடு அரசியலையும் இந்த படத்தில் பேசியிருக்கிறேன்.
திராவிட நாடு அரசியல் என்பது திராவிட அரசியல் இல்லை, மொழி வாரியாக பிரிந்து கிடக்கும் திராவிட நாடு அரசியல். மொழி வாரியாக திராவிட நாடுகள் பிரிந்திருந்தாலும், அதன் வேர்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், தமிழர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது அவர்களை வேற்று மொழி பேசுபவர்களாக பார்ப்பதோடு, அவர்களை எப்படி நடத்துகிறார்கள், அங்கே மொழி ரீதியிலான அரசியல் எப்படி இருக்கிறது, என்பதை தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்.
டீசரில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே நடக்கும் பிரச்சனை போல் காட்சிகள் இருக்கலாம், ஆனால் படம் அதை மட்டும் பற்றி பேசவில்லை, அதை தாண்டிய மனிதத்தை பற்றி பேசும். ஒரு சமூகத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு சமூகத்தினரை குறை சொல்வது போல் காட்சிகள் இருக்காது, தவறு செய்பவர்களை குத்திக்காட்டுவதோ அல்லது குறை சொல்வதோ என் நோக்கம் இல்லை, அனைவரையும் நேசிக்க வேண்டும், அனைவரும் சமம், நீ பெரியவன் நான் பெரியவன் என்று பார்க்க கூடாது, தமிழ் மரபுகளில் இருந்து தான் உயிரினம் உருவானது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள், அப்படிப்பட்ட தமிழ் சமூகம், மேலே கீழே என்று பார்க்காமல், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பது தான் இந்த கதை.
இந்த படத்தை பார்த்து ஒரு சமூகம் திருந்திவிட்டது அல்லது சிலர் திருந்திவிட்டார்கள் என்று சொல்லலாம், அப்படி தான் கதை இருக்கும். படத்தில் கிளைமாக்ஸ் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவதோடு, அனைவரையும் யோசிக்க வைக்கும். 20 நிமிட கிளைமாக்ஸ் இதுவரை எந்த படத்திலும் வராத கிளைமாக்ஸாக இருக்கும். படம் முடிந்து வெளியே வரும் போது கண்கலங்கியபடி தான் வருவீர்கள். நான் சொல்வது உங்களுக்கு கொஞ்சம் அதிகமாக தோன்றாலாம். ”ஒரு படைப்போ, கவிதையோ, கட்டுரையோ, சிறுகதையோ, நாவலோ படிக்கும் போது உங்கள் மனதை சலனப்படுத்தவில்லை என்றால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுங்கள்”, என்று அருந்ததி ராய் சொல்லியிருப்பார், அதுபோல் என் படம் உங்களை 10 நிமிடமோ அல்லது ஒரு நாளோ உங்கள் மனசாட்சியை கேள்வி கேட்கவில்லை என்றால், என் படத்தை குப்பையில் போட்டு விடுங்கள்.
நான் ஒரு அமைப்பில் இருக்கிறேன், அதன் மூலம் பல போராட்டங்களில் கலந்துக் கொண்டிருக்கிறேன், அப்போது நான் பார்த்த சம்பவங்கள் தான் இந்த கதை. இந்த படத்தில் இருக்கும் பெருபாலான சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றவை. இந்த படத்தில் யார் மீதும் குற்றம் சொல்லவில்லை, எந்த குரியீடுகளையும் வைக்கவில்லை. விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல், அவர்களிடம் இருக்கும் அரசியல், அவர்கள் வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி பராரிகளாக செல்லும் போது அவர்கள் எதிர்கொள்ளும் அரசியலை தான் இந்த படம் பேசுகிறது.” என்றார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேசுகையில், “’பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு 9 படங்களில் பணியாற்றி விட்டேன், அதன் பிறகு நான் எதிர்பார்த்த கதை எனக்கு அமையவில்லை. கமர்ஷியல் படங்களாக இருந்தாலும், அவை எதாவது நம்மை செய்ய வேண்டும் அல்லவா, அப்படி எந்த கதையும் எனக்கு அமையாததால் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் எழில் என்னை தொடர்பு கொண்டு இந்த கதையை கேளுங்கள், என்றார். அதற்கு முன்பு அவரை எனக்கு தெரியாது, அவரை பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. அவர் அனுப்பிய கதையை படித்த போது, என்னை ஒரு மாதிரி செய்துவிட்டது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் ஏசி அறையில் எனக்கு வியர்க்கும் அளவுக்கு பதற்றத்தை கொடுத்துவிட்டது, அந்த அளவுக்கு இந்த கதை என்னை உலுக்கியது, அதனால் இதில் பணியாற்றினேன்.
‘பரியேறும் பெருமாள்’ போல் தமிழ்நாட்டில் நிறைய சாதி அரசியலை வைத்து படங்கள் வருகிறது. ஆனால், அதை தாண்டி மொழி, மதம், கார்ப்பரேட் ஆகியவற்றில் இருக்கும் அரசியலை தான் இந்த படம் அழுத்தமாக பேசுகிறது. குறிப்பாக மாநிலம் மற்றும் மத்திய அரசியலை தழுவி இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்குப் பிறகு சினிமாவில் சாதி படம் எடுப்பவர்கள் காளாவதியாகி விடுவார்கள். ஒரு சமூகத்தினரை தாழ்த்தி பேசுவதோ அல்லது ஒரு சமூகத்தை பெருமையாக பேசுவதாக தான் சாதி படங்கள் இருக்கிறது. ஆனால், இந்த படம் முதலில் மக்கள் மன ரீதியாக திருந்த வேண்டும், பிறகு பொருளாதார ரீதியான மாற்றங்கள், முன்னேற்றங்கள் தானாக வரும் என்பதை வலியுறுத்துகிறது.
நான் இதுவரை 9 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன், பல பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இதுவரை எந்த படத்திற்காகவும் இவ்வளவு பேசியதில்லை. ஆனால், இப்போது இவ்வளவு பேசுகிறேன் என்றால் இந்த கதை தான் காரணம். இந்த படத்தில் இருக்கும் புதுமுகங்களை எடுத்துவிட்டு பிரபலமான சில நடிகர்களை நடிக்க வைத்திருந்தால் இந்த படம் தமிழ் சினிமாவின் சிறந்த படமாக மட்டும் இன்றி, திரையரங்கில் ரசிகர்களை கொண்டாட வைக்கும் நல்ல படமாகவும் இருக்கும். 120 ரூபாய் கொடுத்து இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள், படம் முடிந்த பிறகு கூடுதலாக 120 ரூபாய் கொடுக்க தயாராக இருப்பார்கள், அந்த அளவுக்கு தியேட்டருக்கான படமாகவும் ‘பராரி’ இருக்கும். இதை நான் இப்போது சொல்லவில்லை, 2021 ஆம் ஆண்டே என் சமூக வலைதளப் பக்கத்தில் சொல்லியிருக்கிறேன். படம் பார்த்த பிறகு நான் சொன்னது தவறு என்று நீங்கள் நினைத்தால், என் பதிவை நீக்க சொல்லுங்கள், தாராளமாக நீக்கி விடுகிறேன்.” என்றார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தோழர் வெங்கடேஷ்’ பட புகழ் ஹரி சங்கர் படம் பற்றி கூறுகையில், “’பராரி’ படத்தின் கதை மிக சிறப்பானதாக மட்டும் இன்றி எனக்கு பொருத்தமானதாகவும் இருந்தது. படத்தில் இடம்பெறும் சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன், அதனால் தான் இந்த கதையில் என்னை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. இந்த கதைக்காக நான் என் உடல் எடையை குறைத்திருக்கிறேன். 100 கிலோவாக இருந்த நான் 44 கிலோவாக உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறேன். உடல் எடையை குறைத்து கூலி வேலை செய்யும் ஒரு இளைஞர் போல இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே படப்பிடிப்பை தொடங்குவேன், என்று இயக்குநர் சொல்லிவிட்டார். அதன்படி நான் உடல் எடையை குறைக்க முயற்சித்தேன். ஆனால், சென்னையில் இருந்துக் கொண்டு உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டால், அதை எளிதில் செய்ய முடியாது, என்பதால் படப்பிடிப்பு நடக்கும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கே சென்று அங்கு மூன்று மாதங்கள் தங்கியிருந்து, கரும்பு வெட்டுவது, செங்கல் சூளையில் வேலை செய்வது என்று ஒரு கூலி தொழிலாளியாகவே இருந்து உடல் எடையை குறைத்து, என் தோற்றத்தில் மாற்றத்தை கொண்டு வந்தேன்.” என்றார்.
ஹரி சங்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், அறிமுக நடிகை சங்கீதா கல்யாண் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவரை தவிர 40 புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் அனைவரும் நடிப்பில் பி.எச்.டி படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கியிருந்து, படத்தின் காட்சிகளை ஒத்திகைப்பார்த்து மண்ணைச் சேர்ந்த மக்களாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ராஜு முருகன் வழங்கும் இப்படத்தை எஸ்.பி சினிமாஸ் சார்பில் ஹரி சங்கர் தயாரிக்க, ஷான் ரோல்டன் மற்றும் ஜி.முத்துக்கணி இசையமைத்துள்ளனர். சான்.ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பு செய்ய, ஏ.ஆர்.சுகுமாரன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளார்.
இன்று மாலை (ஆக.28) ‘பராரி படத்தின் டீசரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட உள்ள நிலையில், படத்தை இந்த மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...