ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் மதுரையை சேர்ந்த தமிழக சிறுவன் லோகசங்கர் லக்ஷ்மணன் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி 5 வது சர்வதேச யு.ஏ.இ ரோலர் ரிலே ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் (5th International UAE Roller Relay Skating Championship) போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. 10 வயது முதல் 12 வயதுடையவர்கள் பங்குக்கொண்ட இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள். இந்தியா சார்பில், பல சிறுவர்கள் கலந்துக் கொண்ட இப்போட்டியில் மதுரையை சேர்ந்த 10 வயதுடைய லோகசங்கர் லக்ஷ்மணன் என்ற 5ம் வகுப்பு பயிலும் மாணவரும் கலந்துக் கொண்டார்.
பல்வேறு பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் லோகசங்கர் லக்ஷ்மணன், இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார்.
மதுரை டால்பின் பள்ளியில் பயிலும் சிறுவன் லோகசங்கர் லக்ஷ்மணன், கடந்த 3 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சியை மேற்கொண்ட நிலையில், சர்வதேச போட்டியில் தங்கம் வென்றிருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. மேலும், தொடர்ந்து இத்துறையில் அவர் சிறந்த பயிற்சி மேற்கொண்டால் எதிர்காலத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த இளம் வயதில் இத்தகைய சாதனை புரிந்திருக்கும் லோகசங்கர் லக்ஷ்மணனின் தந்தை கனி, சாதாரண ஊழியராக இருந்தாலும், தனது மகன் ஸ்கேட்டிங் விளையாட்டில் காட்டும் ஆர்வத்தை பார்த்து வியந்ததோடு, அவரது வளர்ச்சிக்கு தனது சக்தியை மீறி செலவு செய்து வருகிறார். எதிர்காலத்தில் தன் மகனுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால், அவர் இதுபோன்ற பல பதக்கங்களை வெல்வதோடு, இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார், என்று கூறும் கனி, லோகசங்கர் லக்ஷ்மணன் பயிலும் பள்ளியின் சார்பிலும் உதவிகளை எதிர்ப்பார்க்கிறார்.
ஏற்கனவே கேரளா மற்றும் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்று, தற்போது சர்வதேச போட்டிகளிலும் பதக்கம் வென்றிருக்கும் லோகசங்கர் லக்ஷ்மணனன், எதிர்காலத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டில் சர்வதேச அளவில் பல வெற்றிகளை குவிப்பார், என்று அவரது தற்போதைய பயிற்சியாளரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.