வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஏகாதசி திதியை முன்னிட்டு வருகிற 15.02.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பிணி தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சகல விதமான பிணி தீர்க்கும் அமிர்த சஞ்சீவினி யாகத்திகழும் நெல்லிக்காய் பொடியை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
நெல்லிப்பொடியின் மருத்துவ பயன் : நெல்லிக்காய் பொடி உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தருபவையாகும். கோடை காலங்களில் நமக்குப் பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும். தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும். நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு. மேலும் நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நல்ல மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும்.
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை வைட்டமின் ‘சி’ தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நெல்லிக்காய் தருகிறது. இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும்.