கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்ட நிலையில், காய்கறி மார்க்கெட் பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசையிலும், பழ மார்க்கெட் மாதவரம் பேருந்து நிலையத்திலும், பூ மார்க்கெட் வானகரத்திலும் மாற்றப்பட்டு தற்போது வரை அங்கேயே செயல்பட்டு வருகிறது.
ஆனால், கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த உணவு தானிய வணிக வளாகத்திற்கு மாற்று இடம் ஒதுக்கப்படாததால், தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. இதனால், சுமார் 6 மாதங்களாக கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் மூடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, அனைத்துவித வியாபாரத் தலங்களும் திறக்கப்பட்ட சூழலில் கோயம்பேட்டில் இருக்கும் உணவு தானிய அங்காடியை திறக்க வேண்டி அங்கே கடை வைத்திருக்கும் வியாபாரிகள் அனைவரும் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். அது பலனளிக்காமல் போக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு இன்றைக்கு அந்த அங்காடி பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டுள்ளது.
இன்று (செப்.18) காலை கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் திறக்கப்பட்டது. உணவு தானிய அங்காடியில் 492 கடைகள் உள்ள நிலையில் 290 கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பேசுகையில், “பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து, இன்று முதல் கடந்த 135 நாட்களாக துயரத்தில் இருந்த கோயம்பேடு வணிகர்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. 135 நாட்களுக்குப் பிறகு, கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் இன்று திறக்கப்படுகிறது. ஒவ்வொரு வளாகமாக அடுத்தடுத்து திறக்கப்படவிருக்கின்றன. இந்த நிலையை அடைய கடுமையான சட்டப் போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். எங்களது தமிழ்நாடு உணவு தானிய வணிக சங்கத்தின் தலைவரான சா.சந்திரேசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்தனர்.
மேலும், தொடர்ந்து 6 மாதங்களாக கடைகள் மூடப்பட்டிருந்ததால், கடைகளில் இருந்த உணவு தானியங்கள் அனைத்தும் வீணாகி விட்டதாகவும், இதனால் ஒரு கடைக்கு குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், கூறிய வியாபாரிகள் அதற்கா உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும், என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.