சென்னை மெரினாவில் சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் நம்ம சென்னை என்ற செல்பி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்துவைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வருவதால் களைகட்டி இருந்தது மெரினா கடற்கரை சாலை.
முதல்வர் வருகை என்பதால் காவல்துறை உயரதிகாரிகள் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்தனர்.கடற்கரை சாலையில் முதல்வர் வருவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த நேரத்தில் தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் வேகமாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்.
முதல்வர் வரும்போது யாரும் குறுக்கே வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அந்த மனிதரை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது. ஆனால் அருகில் சென்ற காவலர்கள் அந்த மனிதர் யார் என்று பார்த்து திகைத்துப் போனார்கள். அந்த நபர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது அப்போது தான் தெரியவந்தது.
ஏற்கனவே கடற்கரை சாலையில் லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவுருவச் சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் அங்கிருந்து அடுத்த நிகழ்ச்சிக்கு நம்ம சென்னை செல்பி மையம் திறப்பதற்கான தூரம் ஒரு கிலோமீட்டர் இருந்தது.
ஏற்கனவே நடந்த நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அமைச்சர் ஜெயக்குமாரின் காரை எடுக்க முடியவில்லை. எனவே வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் தன்னந்தனியாக யாருடைய துணையும் இன்றி நடந்தே வந்தார். இதைப்பார்த்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அனைவரும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஏன் நடந்து வரீங்க என்ன ஆச்சு என்று கேட்டதற்கு, ”நடக்குறது எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிச்ச விஷயம் வேகமா நடக்கும் போது உடலுக்கு நல்லது தெம்பா இருக்கும். அதுமட்டுமில்ல வெயிலில் நடந்தா அது இன்னும் நல்லது. அதனால தான் நடந்து வந்தேன். எங்க போனாலும் எப்ப வாய்ப்பு கிடைச்சாலும் முடிஞ்ச வரைக்கும் காரை பயன்படுத்தாமல் நடந்து வர்றது நல்லதுதானே, முடிஞ்சா நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க” என்று கொளுத்தும் வெயிலிலும் கூலாகச் சிரித்தார் அமைச்சர்.
அங்கிருந்த அனைவரும் அமைச்சரின் இந்த செயலைக் கண்டு வியந்து நின்றார்கள். பந்தா இல்லாமல் எல்லா விஷயங்களிலும், செல்லும் இடமெல்லாம் மக்களை தன்பால் ஈர்க்கும் வகையில் ஒரு வித்தியாசமான மனிதராகவே வலம் வருகிறார் ஜெயக்குமார் என்று பேசிக்கொண்டனர் அங்கிருந்தவர்கள்.