வணிகர்கள் தொழிலதிபர்கள் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில உள்ள சாதக பாதகங்கள் குறித்து சென்னையில் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், சாலையோர வியாபாரிகள் கந்து வட்டி கொடுமையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் வங்கி மூலம் 10,000 ரூபாய் கடன் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
நாட்டின் வளர்ச்சியை, பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க பிரதமர் மோடி கடும் முயற்சி எடுத்து வருவதாக குறிப்பிட்டார். கூட்டுறவு பால் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இன்று முதலிடம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்தவரையில் பொய்ப்பிரச்சார அரசியலை அதிகளவில் மற்றவர்கள் செய்து வருவதாக குறிப்பிட்டார். வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் எடுத்துக் கொள்வார்கள் என்று பொத்தாம் பொதுவாக விவசாயிகள் மத்தியில் தவறான தகவலை அரசியல் லாபத்திற்காக இவர்கள் எடுத்துச் செல்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார்.
விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லக்கூடிய அரசியல் கட்சி இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு சென்று கொள்முதல் பொது விநியோகத்திற்கு ஆபத்து தரக்கூடிய உலக வர்த்தக சட்டத்தில் 2013ஆம் ஆண்டு கையெழுத்துப் போட்டுவிட்டு இன்றைக்கு முதலைக்கண்ணீர் வடிப்பதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமானால் இங்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சருக்கு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.