உலக ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் 60 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23ஆம் தேதி உலக ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒலிம்பிக் தினத்தை கோலாகலமாக கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் இந்த வேளையில், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில், உலக ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு 60 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.லதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பயனாளர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். மேலும், இந்த நிகழ்வில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகர், துணைத் தலைவர் கிருபாகர ராஜா, பொருளாளர் விஜயசாரதி மற்றும் பயிற்சியாளர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த விழாவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை ஆதரிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், நடிகை உபாசனா கலந்து கொண்டு, விழாவைச் சிறப்பித்தார். தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முயற்சியானது கொரோனா தொற்று நோயின் 2ஆவது அலையில் இருந்து விளையாட்டு வீரர்களை மீட்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.