சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
யுமாஜின் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு புத்தொழில் குறு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
காட்சி தளங்களில் அமைக்கப்பட்டிருந்த புத்தொழில் முனைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் நிகழ்ச்சியில் பேசுகையில், “மார்ச் 23 முதல் 25ம் தேதி வரை யுமாஜின் சென்னை தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுவதாகவும் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
இந்தியாவில் சென்னையில் தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 10 வருடங்களாக தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கி உள்ளதாகவும் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்தாண்டு ஐடி துறையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளதாகவும், விவசாயத்தில் ஐடி துறையை நுழைத்து விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழகம் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறுவதற்காக UK, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகம் கல்வி வசதி, சாலை வசதி, மின்சார வசதி, தொழில்நுட்ப வசதி போன்று மற்ற மாநிலங்களில் இல்லை என பெருமிதம் கொண்டார். கல்வி துறைகளிலும் இங்குள்ளது போன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
இந்தியாவில் அதிகம் தொழில் வளர்ச்சி தேவைப்படுகிறது என்றும் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைய வெளிநாடுகளில் உள்ள ஐடி நிறுவன பங்குதாரர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கருத்தரங்க கூட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் மரியா ஜீன ஜான்சன், துணை தலைவர் மரியா கேத்ரின் ஜெயபிரியா, தமிழ்நாடு புத்தக்க மைய திட்ட இயக்குநர் மற்றும் சி. இ.ஒ(CEO) சிவராஜா ராமநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.