தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்தனர்!
கோவாவில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை 37 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 530 விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் டாக்டர். ஐசரி கே.கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் 37 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். இவர்களுடன் 116 அதிகாரிகள் கொண்ட குழுவும் கோவா செல்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் டாக்டர்.ஐசரி கே.கணேஷ், “கடந்த தேசிய விளையாட்டு போட்டியில் ஐந்தாம் இடம் கிடைத்தது, இந்த முறை இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்திற்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அளிக்க உள்ளோம். இது மட்டுமல்லாது சென்னையில் மினி ஒலிம்பிக் நடத்த உள்ளோம். விளையாட்டில் அரசியலையும் சிபாரிசையும் அனுமதிக்க மாட்டோம். விரைவில் தமிழகத்தில் தேசிய அளவில் போட்டிகள் அதிகம் நடைபெறும். அதேபோல் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு தேவையான உதவிகளை எந்த நேரத்திலும் செய்து கொடுக்க தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் தயாராக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழ்நாட்டு வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற கனவு விரைவில் நனவாகும், அதற்கான முன்னோட்டமாக ஆசிய விளையாட்டு போட்டி பதக்கங்கள் வென்றுள்ளோம். அவர்களை கௌரவிக்கும் விதமாக விரைவில் பிரமாண்ட விழா நடத்தப்படும். அதில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.” என்றார்.