இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் பப்புவா நியூ கினியா நாட்டில் சேவை ஆற்ற அந்நாட்டின் மாகாண ஆளுநர் மற்றும் வர்த்தக ஆணையர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பப்புவா நியூ கினியா நாட்டின் மாகாண ஆளுநர் சுசீந்திரன் முத்துவேல் மற்றும் அந்நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். ஆளுநர் சுசீந்திரன் முத்துவேல் தமிழ்நாட்டின் சிவகாசியில் பிறந்தவர் ஆவார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் சுசீந்திரன் முத்துவேல், பப்புவா நியூ கினியா நாட்டில் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் அரசால் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன என்றும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் பப்புவா நியூ கினியா நாட்டில் தங்களது மையங்களை தொடங்கி சேவை ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர், இந்த முயற்சி வர்த்தக ரீதியாக பலனளிக்கும். ஆஸ்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்ற பப்புவா நியூ கினியா நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இடையே 1980-களில் இருந்தே நல்ல உறவு உள்ளது. கனிம வளம், விவசாயம் நிறைந்த தங்கள் நாட்டிற்கு செயற்கைக் கோள் தொடர்பாக ஆய்வு செய்ய இஸ்ரோ குழுவினர் வரவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80ஆயிரம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்வானாலும் தொழிற்கல்வி, பல்கலைக்கழகங்கள், அயல்நாட்டு கல்வி வாய்ப்புகள் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பதாகவும், 50 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த சுசீந்திரன் முத்துவேல், இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் வந்தால் அவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கொடுக்கலாம், என்றார்.