சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஆக்ஷன் படம் தான் ‘முந்தல்’ - இயக்குநர் ஜெயந்த் பேட்டி!
சுமார் 250 க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியுள்ள ஜெயந்த், ‘முந்தல்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ரிலீஸ் பணிகளில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜெயந்திடம் படம் குறித்து கேட்ட போது,
ஸ்டண்ட் கலைஞராக எனது சினிமா வாழ்க்கையாக தொடங்கினாலும் படம் இயக்குவது தான் எனது நீண்ட நாள் லட்சியம். அது ‘முந்தல்’ மூலம் நிறைவேறியிருக்கிறது. புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்தக் கூடிய மருந்து தயாரிப்பது பற்றிய பார்முலாவை சித்தர்கள் ஓலைச்சுவடியில் எழுதி அதை மிக பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்துவிடுகிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த பார்முலா பற்றி அறியும் ஹீரோ, அதனை கைப்பற்றி அரசிடம் கொடுத்து, மக்களுக்கு இலவசமாக மருந்து கிடைக்கபெற செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதே விஷயத்தை தெரிந்துக் கொள்ளும் மற்றொரு ஒரு பிரிவினர், அதனை வியாபார நோக்கத்திற்காக கைப்பற்ற நினைக்கிறார்கள். அந்த ஓலைச்சுவடி எங்கு இருக்கிறது, அதை யார் கைப்பற்றியது, என்பது தான் ’முந்தல்’ படத்தின் கதை.
கமர்ஷியல் படமாக மட்டும் அல்லாமல், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சில விஷயங்களையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். ஆனால், அவை அனைத்துக்கும் ஆதாரங்களும் வைத்திருக்கிறேன்.
இந்த கதை எழுதுவதற்கு தூண்டுதலாக இருந்தது எது?
மருத்துவமனை தான். நண்பரை பார்ப்பதற்காக அரசு மருத்துவமனை ஒரு முறை சென்றேன். அப்போது தீயில் எரிந்த பலர், ரொம்ப பயங்கர காயங்களுடன் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ரொம்பவே வேதனை அடைந்தேன். அந்த சம்பவம் தான், என்னை இந்த கதையை எழுத வைத்தது.
படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் பற்றி..
படத்தில் மொத்தம் 9 சண்டைக்காட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருக்கும். இதுவரை பார்க்காத பல வித்தியாசமான யுக்திகளை பயன்படுத்தி ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறேன். படத்தில் கடல் பயணம் முக்கிய பங்கு பெறுவதால், ஹீரோவுக்கு கடல் மற்றும் அருவியில் நீந்த பிரத்யேக பயிற்சி அளித்தோம். அதேபோல், குங்பூ, சிலம்பம் உள்ளிட்டவற்றிலும் முறையான பயிற்சிக்குப் பிறகே ஹீரோ அப்பு கிருஷ்ணா நடிக்க ஆரம்பித்தார். நான் கடவுள் ராஜேந்திரன் அதிரடி வில்லனாக நடித்திருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க விட்டிருக்கிறார்.
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்..
நிறைய நடந்திருக்கிறது. இந்த படத்திற்காக 7 நாடுகள், 49 லொக்கேஷன்கள் பயணப்பட்டு இருக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் ஒரு அனுபவம் கிடைத்தது. அந்தமானில் கடலுக்கு அடியில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த போது, முதலை இருப்பதை கூட பார்க்காமல் படப்பிடிப்பு நடத்தினோம். திடீரென்று பார்த்த போது தான், அருகே பெரிய முதலை இருந்தது. உடனடியாக தண்ணீரை விட்டு படகில் ஏரிவிட்டோம். அதேபோல், தாய்லாந்தில் கடலில் இருக்கும் குகை ஒன்றில் படமாக்கப்பட்ட போது அனகோண்டா பாம்பு இருந்த பகுதிக்கு சென்றுவிட்டோம். பிறகு பாம்பை பார்த்த பிறகு அங்கிருந்து கிளம்பிவிட்டோம். இருந்தாலும், எங்களுக்கு தேவையான காட்சிகளை அங்கு படமாக்கி விட்டோம். இப்படி படப்பிடிப்பு பல சுவாரஸ்ய சம்பவங்களை நாங்கள் எதிர்கொண்டது போல படத்தையும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறோம்.
ஹீரோ பற்றி..
ஹீரோ அப்பு கிருஷ்ணா புதியவர் தான் என்றாலும் படத்திற்காக கடுமையான பல பயிற்சிகளை மேற்கொண்டார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடுக்கடலில் படமாக்கப்படுவதால் அவருக்கு பலவிதமான நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. அனைத்திலும் சிறப்பாக தயாரான அப்பு கிருஷ்ணா, படத்தில் அறிமுக ஹீரோ போல இருக்க மாட்டார்.
’முந்தல்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?
படமே ஸ்பெஷல் தான். மற்ற படங்கள் போல கற்பனையான விஷயத்தை சொல்லாமல். வரலாற்றில் உள்ள பல உண்மை சம்பவங்களை ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறேன். அதை பாடமாக சொல்லாமல், பொழுதுபோக்கு படமாக அதே சமயம், விறுவிறுப்பு குறையாத ஆக்ஷன் கலந்த பிரம்மாண்ட அட்வெஞ்சர் காட்சிகளாகவும் கொடுத்திருக்கிறேன். சித்தர்கள் பற்றி இதுவரை சொல்லப்படாத விஷயங்களை சொல்லியிருக்கிறோம். அதற்காக கொல்லிமலையில் சித்தர்கள் வாழ்ந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தியதோடு, நேரடியாக சில சித்தர்களை சந்தித்து அவர்கள் சொன்ன விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறோம். இது ரசிகர்களுக்கு ரொம்ப புதுஷா இருக்கும். அதேபோல், இதுவரை எந்த மொழி திரைப்படங்களிலும் காட்டாத வகையில் கம்போடியாவில் உள்ள அங்கூர் வாட் கோயிலை படமாக்கியிருக்கிறோம். சில திரைப்படங்களில் பாடல் காட்சிக்காக பயன்படுத்திருப்பார்கள். ஆனால், நாங்கள் முழு கோவிலை சுற்றியும், கோவிலில் மக்களுக்கு தெரியாத சில இடங்களில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.
உங்களைப் பற்றி..
சிறு வயதிலேயே சிலம்பம், குங்பு, யோகா உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் சிறுவயது முதலே கற்று வந்ததல், ஸ்டண்ட் கலைஞர் ஆனேன். பிறகு ஸ்டண்ட் இயக்குநராகி பல படங்களில் பணிபுரிந்தேன். இருந்தாலும் படம் இயக்குவது தான் எனது நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவேறியுள்ளது. ஜனவரி மாதம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த படத்திற்குப் பிறகு அடுத்து நான் இயக்கும் படமும் சமூக அக்கறை கொண்டதாக தான் இருக்கும்.