Latest News :

ஏமாலி விமர்சனம்

d74418932885094d6be38f741be27fa7.jpg

Casting : Samuthirakkani, Sam Jones, Athulya Ravi, Roshini

Directed By : V.Z.Dhorai

Music By : Sam D.Raj

Produced By : Latha Productions

 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவாதி கொலை சம்பவத்தை கருவாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அதன் சாயல் எதுவும் இல்லாத வகையில், வித்தியாசமான திரைக்கதை யுக்தியோடு உருவாகியிருக்கும் இந்த ‘ஏமாலி’ ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறதா, இல்லையா என்பதை பார்ப்போம்.

 

ஐடி துறையில் பணிபுரியும் ஹீரோ ஷம் ஜோன்ஸும், அதுல்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வர, இருவரிடமும் இருக்கும் ஈகோவால் அவர்களது காதல் உடைந்து போகிறது. உடைந்த காதலை ஒட்ட வைக்க ஹீரோ எவ்வளவோ முயற்சித்தும் அது நடக்காமல் போக, தனது அண்ணன் ஸ்தானத்தில் இருக்கும் சமுத்திரக்கனியிடம் தனது காதல் பிரிவைப் பற்றி சொல்லி வருத்தப்படுபவர், தன்னை ஏமாற்றிய அதுல்யாவை கொலை செய்ய வேண்டும், என்று கூறுகிறார்.

 

தனது அட்வைசால் ஹீரோவின் கொலை வெறியை கட்டுப்படுத்த நினைக்கும் சமுத்திரக்கனியால் அது முடியாமல் போக, அவரது வழியில் சென்று அவரை ஆஃப் செய்ய முயற்சிக்கிறார். அதனால், கொலை செய்யலாம், ஆனால் நாம் மாட்டிக்கொள்ளாமல் செய்ய வேண்டும், என்று கூறுவதோடு, அதற்காக ஒரு ஐடியாவையும் சமுத்திரக்கனி கொடுக்கிறார். அது என்ன ஐடியா, அதன்படி நடந்த ஹீரோ தனது கொலை வெறியில் இருந்து வெளியே வந்தாரா இல்லையா, என்பது தான் ‘ஏமாலி’ படத்தின் கதை.

 

ஐடி துறை இளைஞர்களின் வாழ்வியலும், காதல் மற்றும் காதல் தோல்வி, திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன், மனைவி போல வாழ்வது, போன்ற விஷயங்களை அலசியிருக்கும் இயக்குநர் வி.இசட்.துரை, அதனை க்ரைம் ஜானரில் திரைக்கதை அமைத்த யுக்தி ஹாலிவுட் ஸ்டைலில் வித்தியாசமாக இருந்தாலும், அதை அவர் கையாண்ட விதம் படத்தை வீணாக்கிவிட்டது.

 

அறிமுக நாயகன் ஷம் ஜோன்ஸ், காதல் தோல்வியால் கொலை வெறியோடு அலைவதும், காதலிக்கும் போது கஸ்கா முஸ்காவுக்காக அலைவதும் என்று தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். பார்த்தாலே கை எடுத்து வணங்கும் அளவுக்கு ஆரவாரம் இல்லாத அழகியாக இருந்த அதுல்யா, இந்த படத்தில் அதிரடி அழகியாக வலம் வருகிறார். குட்டை டவுசரை போட்டுக் கொண்டு தொடையை காட்டுவதும், இடுப்பில் இருக்கும் டாட்டூவை காட்டுவதும் என்று கவர்ச்சிக்கு தாவியிருப்பவர், எல்லை மீறாமல் நடித்திருக்கிறார். அதே சமயம், அதுல்யா என்னதான் கவர்ச்சியாகவும், சிகரெட் புகைப்பது போல போல்டாக நடித்தாலும், அவரது நடிப்பில் எந்தவித ஈர்ப்பும் இல்லை. 

 

பிறருக்கு அட்வைஸ் செய்யும் வேடம் என்றாலே இயக்குநர்களுக்கு சமுத்திரக்கனியின் ஞாபகம் தான் வரும்போல, பாவம் அவரும் சலிக்காமல் நடித்துவிடுகிறார். இன்னும் எத்தனை படங்களில் இதுபோன்ற வேடங்களில் நடிக்க போகிறாரோ!. அவர் அட்வைஸ் செய்வதை கூட அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம், ஆனால் அவரது கதாபாத்திரமும், அதை கையாண்ட விதமும் தான் ரொம்ப மொக்கையாக இருக்கிறது. 

 

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள், காதல் எப்படி மாறிவிட்டது என்பது பற்றி காட்சிக்கு காட்சி சொல்லும் இயக்குநர் எதையும் உருப்படியாக சொல்லவில்லை. ஒரு பக்கம் காதல் தோல்வியால் பசங்க பார்ட்டி வைத்து கொண்டாட, மறுபக்கம் பெண்களும் காதல் தோல்விக்காக பார்ட்டி வைக்கிறார்கள். மொத்தத்தில், சம உரிமை என்று கூறும் பெண்கள், அனைத்திலும் ஆண்களுக்கு சமமாக இருக்கிறார்கள், என்பதை சுட்டிக்காட்டும் இயக்குநர் லிவிங் டூ கேதர் என்ற முறையை நியாயப்படுத்தி பேசுபவர், நல்ல விஷயத்தை சொல்ல, சில கோமாளித்தனமான காட்சிகளை வைத்தது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

இசையமைப்பாளர் ஷாம் டி.ராஜ் பின்னணி இசையில் ஓரளவு ஒர்க் பண்ணியிருந்தாலும், பாடல்களின் போது தூங்கிவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது. சிம்பு பாட்டை விட மோசமாக இருக்கிறது பாடல்கள். ஒளிப்பதிவும் ஓரளவு தான், குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை.

 

வெறும் காதல், கஸ்கா முஸ்கா என்று இருப்பதோடு, அடிஸ்னலாக க்ரைம் ஜானர் பார்மட் ஒன்றை இயக்குநர் வி.இசட்.துறை கையாண்டிருக்கிறார். ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் அந்த எபிசோட் ஆரம்பித்தில் ரசிகர்களுக்கு சற்று ஆர்வத்தைக் கொடுத்தாலும், அடுத்துத்தடுத்து வரும் காட்சிகள் ரசிகர்களை சலிப்படைய வைக்கிறது.

 

போலீஸ் விசாரணை, அதற்கு பிறகு சிபிஐ விசாரணை என்று எதிர்பாரத ட்விஸ்ட்டுகள் வந்தாலும், அவை அனைத்தும்  ரசிகர்களின்  பொருமையை சோதிக்கும் விஷயங்களாகவே இருக்கிறது.

 

படம் முடிந்த பிறகும், என்னதான் சொல்ல முயற்சித்தார்கள், என்று ரசிகர்கள் யோசிக்கும் போது, ”காதலுக்காக இனி கொலையும் நடக்க கூடாது, தற்கொலையும் நடக்க கூடாது”, என்ற கார்டு போடப்படுகிறது. நல்ல விஷயத்தை தான் இயக்குநர் சொல்ல முயற்சித்திருக்கிறார், ஆனால் இதை சொல்லவா...இந்த சுத்து சுத்துனீங்க...என்ற புலம்பலோடு வெளியே வரும் ரசிகர்கள், இந்த ‘ஏமாலி’ யை ’கோமாலி’ என்று திட்டி தீர்த்துவிடுகிறார்கள்.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery