Casting : Soori, Anna Ben
Directed By : PS VinothRaj
Music By : Sound Designer - Suren G, S. Alagia koothan
Produced By : Sivakarthikeyan Production - Sivakarthikeyan
தமிழகத்தின் தென் மாவட்ட கிராமத்தை சேர்ந்த நாயகி அன்னா பென், கல்லூரியில் காதல் வயப்படுகிறார். அவரது காதலை சூனியம் வைத்துவிட்டதாக நினைக்கும் அவரது குடும்பத்தார், அதில் இருந்து அவரை மீட்பதற்காக சாமியார் ஒருவரிடம் அழைத்து செல்கிறார்கள். அவர்களுடைய அந்த பயணத்தின் வழியே, பெண்ணியம் மற்றும் ஆண் வர்க்கம் பெண்கள் மீது நடத்தும் அடக்குறை மற்றும் மக்களின் அறியாமையை எதார்த்தமாக விவரிப்பது தான் ‘கொட்டுக்காளி’.
கதையின் நாயகியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்னா பென் சவால் மிகுந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். கருவிழியை அசைக்காமல், இமையை சிமிட்டாமல் பித்து பிடித்தது போல் படம் முழுவதும் பயணித்திருக்கும் அன்னா பென், தனது அலட்சியமான பார்வையின் மூலம் ஆணதிக்கத்திற்கு சாட்டையடி கொடுத்து நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அன்னா பென்னின் மாமன் மகனாக நடித்திருக்கும் சூரி, ஆரம்பத்தில் அமைதியாக பயணித்தாலும் திடீரென்று எடுக்கும் அதிரடி அவதாரத்தின் மூலம் திரையரங்கே ஆடிப்போய் விடுகிறது. அமைதியாக இருக்கும் பெண்கள் மீது தன் கோபத்தை வெளிக்காட்டுபவர், வழியை மறித்துக்கொண்டு நிற்கும் காளை முன் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கும் காட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ‘விடுதலை’, ‘கருடன்’ போல் ஜனரஞ்சக ரசிகர்களை இந்த படம் கவரவில்லை என்றாலும் சூரியின் நடிப்பை மெருகேற்றுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.
சூரி மற்றும் அன்னா பென் தவிர மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களில் சிலர் ஏற்கனவே திரையில் தோன்றியவர்களாக இருந்தாலும், பெரும்பாலானவர்கள் மண் சார்ந்தவர்களாக இருப்பதால், இயல்பாக பயணித்திருக்கிறார்கள்.
படத்தில் பின்னணி இசை இல்லை என்றாலும், காட்சிகள் நடக்கும் பகுதிகளை சுற்றி ஒலிக்கும் ஓசைகளை பின்னணி இசையாக கொடுத்த விதம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக சுரன்.ஜி மற்றும் எஸ்.அழகிய கூத்தன் ஆகியோரது லைவ் ரெக்கார்டிங் பின்னணி இசை இல்லை, என்ற உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை ரசிக்க வைக்கிறது.
கதை மாந்தர்களை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சக்தி, அவர்களது நடிப்பு மற்றும் கதைக்களத்தை தனது கேமரா கண்கள் மூலம் பார்வையாளர்களை உற்று நோக்க வைத்திருப்பதோடு, சேவல்களின் செயல்கலை கூட நடிப்பாக காண்பித்து வியக்க வைத்திருக்கிறார். இருந்தாலும், பல காட்சிகளை நீளமாக எடுத்தது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
இயக்குநரின் விருப்பப்படி காட்சிகளை வெட்டாமல் அப்படியே தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா, சொன்னதை செய்திருக்கிறார்.
’கூழாங்கல்’ படத்தில் தந்தை - மகன் நடை பயணத்தை வைத்துக் கொண்டு பல்வேறு அரசியல் பேசிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், இம்முறை வாகன பயணத்தின் மூலம் ஈரானிய திரைப்படங்கள் பாணியில் பெண்ணியம் பேச முயற்சித்திருக்கிறார்.
மிக எதார்த்தமான முறையில் காட்சிகளை நகர்த்தி செல்லும் இயக்குநர் வினோத்ராஜ், பல காட்சிகளை மிக நீளமாக படமாக்கி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார். அவரது முயற்சி வித்தியாசமாகவும், உலக சினிமா விரும்பிகளுக்கானதாக இருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் எந்த ஒரு முடிவும் சொல்லாமல் மக்களிடமே விட்டுவிடுவது எளிய மக்களை குழப்பமடைய செய்கிறது.
ஒரு விசயத்தை அனைத்து தரப்பினருக்கும் புரியும்படி சொல்லும் படைப்பே மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இயக்குநர் வினோத்ராஜ் எளிமையானவர்களின் அறியாமையை எதார்த்தமான முறையில் சொன்னாலும், அதை பெரும்பாலானவர்களுக்கு புரியாதபடி சொல்லி, தனது படைப்பை வெகுஜன மக்களிடம் இருந்து தள்ளி வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த ‘கொட்டுக்காளி’ மக்களுக்கான படைப்பாக இருந்தாலும், சிலருக்கு மட்டுமே புரியும்.
ரேட்டிங் 3/5