Casting : Vemal, Karunas, Mery Rickets, Aadukalam Naren, Deepa Shankar, Charles Vinoth, Manoj Kumar, Pawan Aruldoss
Directed By : Michael K Raja
Music By : NR.Raghunandan
Produced By : Siva Killari
பிண ஊர்த்தி ஓட்டுநரான நாயகன் விமல், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஊரின் பெரிய மனிதர் பிணத்தை எடுத்துச் செல்கிறார். ஊருக்குச் செல்ல பணம் இல்லாமல், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கும் கருணாஸ், விமல் வாகனத்தில் பயணிக்கிறார். அப்பாவியாக இருக்கும் கருணாஸின் இரக்க குணத்தால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விமல், ஒரு கட்டத்தில் தனது உயிருக்கே ஆபத்தான சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதை விறுவிறுப்பான பயணம் மூலம் சொல்வது தான் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’.
நாயகனாக நடித்திருக்கும் விமல், சாதாரணமாக நடித்தாலும் சில இடங்களில் தனது பாவப்பட்ட நடிப்பால் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார். இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் பிறந்து, மூன்றாவது குழந்தை தாயின் உயிருக்கே ஆபத்து என்ற நிலையிலும், கர்ப்பமடையும் அவரது மனைவியின் பிரசவத்தின் போது உடன் இல்லாமல், பண தேவைக்காக அவர் மேற்கொண்ட பயணம், அவருக்கு பெரும் பிரச்சனையாக அமைந்ததை எண்ணி வருந்தும் காட்சியில், தனது இயலாமையை இயல்பாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
அப்பாவியான முகம், வெகுளித்தனமான நடிப்பு என விமலுடன் பயணிக்கும் கருணாஸ், படத்தையும் அவருடன் சேர்ந்து சுமந்திருக்கிறார். தெருக்கூத்து கலைஞராக பயணித்திருக்கும் கருணாஸின் இரக்க குணமும், அதன் மூலம் ஏற்படும் பிரச்சனையும், அதில் இருந்து மீள்வதற்கு அவர் எடுக்கும் முடிவும் இதயத்தை கணக்க செய்கிறது.
விமலின் மனைவியாக நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸுக்கு குறைவான காட்சிகள் என்றாலும், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்வதன் மூலம் தங்களது உரிமையை நிலை நாட்ட போட்டி போடும் முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி பிள்ளைகளான ஆடுகளம் நரேன் மற்றும் பவன் இருவரும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் திருநெல்வேலி சம்பவங்களை சுவாரஸ்யமாக கடத்துகிறார்கள். அவர்களுடன் தீபாவும் அவ்வபோது தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி, தந்தை இறப்பை விட அவரது இறுதி சடங்கு எவ்வளவு முக்கியம் என்பதை தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிக்காட்டுகிறார்.
ஒரு காட்சியில் நடித்தாலும் சாதி வெறியனாக மிரட்டும் அருள்தாஸ், அதே காட்சியில் மகளின் செயலை நினைத்து கதறும் சாதாரண தந்தையாக நெகிழ்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பிற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பாதிப்பில்லாமல் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வினின் கேமரா, பயணத்தின் மூலம் கதை சொல்லியிருப்பதோடு, சேசிங் காட்சிகளில் பார்வையாளர்களிடம் பதற்றத்தையும் கடத்தியிருக்கிறது.
சில மணி நேர பயணத்தில் மக்களின் மனங்களைப் பற்றி சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் மைக்கேல் கே.ராஜா, உயிரற்ற உடல் மூலம் உயிர் உள்ள மனிதர்கள் மற்றவர்களுக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும் என்ற மெசஜை அழகாக சொல்லியிருக்கிறார். அதிலும், பிறருக்கு உதவி செய்பவர்கள் தான் தேவதைகளாகுகிறார்கள் என்ற விசயத்தை காட்சிப்படுத்திய விதத்திற்காகவே தனியாக கைதட்டலாம்.
பயணம் தான் படம் என்றாலும், அவ்வபோது சகோதர்களுக்கு இடையே நடக்கும் உரிமை போராட்டம் மற்றும் வழியில் வரும் காதல் பிரச்சனை ஆகியவற்றால் படத்தை வேகமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் இடைவேளையில் வைத்த திருப்பம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் குழப்பம் ஆகியவற்றால் பார்வையாளர்களை பதற்றமடைய செய்துவிடுகிறார்.
சில இடங்களில் திரைக்கதை விமல் வாகனம் போல் பழுதடைந்தாலும், இரண்டாம் பாதியில் பரபரப்பும், விறுவிறுப்பும் ரசிகர்களை தொற்றிக் கொள்ளும் வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று படத்தை ரசிகர்களுக்கு பிடித்தது போல் முடித்திருக்கிறார் இயக்குநர் மைக்கேல் கே.ராஜா.
மொத்தத்தில், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ வாகனம் பழசாக இருந்தாலும், பயணம் இனிமையாகவே இருக்கிறது.
ரேட்டிங் 3.5/5