Latest News :

’தோழர் சேகுவேரா’ திரைப்பட விமர்சனம்

2a954ec97a488910a8ec0bb67ff602cd.jpg

Casting : Sathyaraj, AD Alex, Cool suresh, Motta Rajendran, Nanjil Sambath

Directed By : A.D.Alex

Music By : P. S. Ashwin

Produced By : Anish Edmond Prabhu

 

நவீன தொழில்நுட்ப காலத்திலும் நாட்டின் பல பகுதிகளில் சாதிய வன்முறையால் பலர் பாதிக்கப்படும் சம்பவங்கள் நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில், அத்தகைய வன்முறையால் பாதிக்கப்படும் மக்களின் எழுச்சி மற்றும் புரட்சி பற்றி பேசுகிறது இந்த ‘தோழர் சேகுவேரா’.

 

சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள், எந்த விதத்திலும் மேலே வந்துவிடக் கூடாது என்று நினைக்கும் சாதி வெறியர்கள், தங்களிடம் இருக்கும் அரசியல் அதிகாரம் மூலம் அந்த வேலையை சரியாக செய்து வருவதோடு, வறுமை மூலமாக அம்மக்களை கொத்தடிமைகளாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதையும் கடந்து எப்படியாவது படித்து முன்னேற வேண்டும், என்று நினைக்கும் இளைஞர்களை தங்களது வன்முறையால் சாதி வெறி கும்பல் கொலை செய்து விடுகிறார்கள். அவர்களின் இத்தகைய செயலால், 3ம் வகுப்பு வரை கூட படிக்க முடியாமல் இருக்கும் சமூகத்தில் இருந்து வரும் நாயகன் அலெக்ஸ், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டு மேலே படிக்க முடியாமல் வாகன பழுதுபார்ப்பவராக பணியாற்றி வருகிறார்.

 

இதற்கிடையே, நலிந்த சமூகத்தினர் வாழும் பகுதியின் அருகில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் சத்யராஜ், அங்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களை பொறியியல் கல்லூரியில் சேர்க்க முயற்சிக்கிறார். அதன்படி, நாயகன் அலெக்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் கல்லூரியில் இடம் பெறுகிறார். கல்லூரியில் சேர்ந்ததும், இனி நம் கஷ்ட்டம் அனைத்தும் தீர்ந்துவிட்டது என்று நினைக்கும் அலெக்ஸ், கல்லூரியின் முதல் நாளில் இருந்தே சாதிய வன்முறைக்கு ஆளாகிறார்.

 

உடன் படிக்கும் சக மாணவர்கள் மூலமாக மட்டும் இன்றி சில பேராசியர்கள் மூலமாகவும் சாதிய வன்முறைக்கு ஆளாகும் அலெக்ஸ், மற்றவர்கள் போல் அனைத்தையும் பொறுத்துக்கொள்வார், என்ற அவர்களின் நினைப்புக்கு எதிராக திரும்ப, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சாதிய வன்முறைக்கு எதிரான எழுச்சியாகவும், புரட்சியாகவும் சொல்வதே ‘தோழர் சேகுவேரா’.

 

40-க்கும் மேற்பட்ட சென்சார் கட்டுகளுக்குப் பிறகு இறுதி வடிவம் பெற்று வெளியானாலும் இந்த ‘தோழர் சேகுவேரா’ சாதிய வன்முறைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் வலியை இரத்தமும், சதையுமாக சொல்லியிருக்கிறது.

 

நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஏ.டி.அலெக்ஸ், கதாபாத்திரத்திற்கு ஏற்ற விவேகத்துடனும், வேகத்துடனும் நடித்திருக்கிறார். சாதிய வன்முறையால் பாதிக்கப்படும் போது அமைதி காப்பவர், ஒரு கட்டத்தில் எழுச்சி பெறும் காட்சி திரையரங்கையே அதிர வைக்கிறது.

 

சேகுவேரா கதாபாத்திரத்தில் கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், வரும் காட்சிகள் குறைவு என்றாலும், சேகுவரா என்ற பெயருக்கு பெறுமை சேர்க்கும் விதமாக நடித்திருக்கிறார். அவரது அனுபவம் வாய்ந்த நடிப்பும், வசனங்களும் படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறது.

 

கலியபெருமாள் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த நடிகர் கவனம் ஈர்க்கிறார். நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அளவாக பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் சாம் அலன், இசையமைப்பாளர் பி.எஸ்.அஸ்வின், படத்தொகுப்பாளர் கெளதம் ஆகியோர் தங்களது பணி மூலம் இயக்குநர் சொல்ல நினைத்த கருத்தை மக்களிடம் நேர்த்தியாக கொண்டு சேர்த்திருக்கிறது.

 

பத்திரிகை செய்தியாக படித்துவிட்டு கடந்து போகும் பல கசப்பான சாதிய வன்முறை சம்பவங்களை மையமாக கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கும்  இயக்குநர் ஏ.டி.அலெக்ஸ், அதற்கான காட்சிகளை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக மட்டும் இன்றி அவர்களின் எழுச்சியாகவும் வடிவமைத்திருக்கிறார்.

 

விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய சேகுவேரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், ”எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது, படிப்பு மூலமாகவே வெல்ல முடியும்”, என்று மாணவருக்கு அறிவுரை சொல்வது முரணாக இருந்தாலும், மாணவர் நெப்போலியன் அந்த முரணை கலைந்து, தன் நிலையை மாற்றுவதற்காக எடுக்கும் முடிவு அதிரடியாக இருக்கிறது. அதே சமயம், அவரது அதிரடி அதீத வன்முறை போல் தெரிந்தாலும், இத்தகைய சாதிய வன்முறையால் பாதிக்கப்படும் மாணவர்களின் அழுகுரலுக்கு முன்பு இத்தகைய வன்முறைகள் மிக சாதாரணம் என்பதை மறுக்கவும் முடியாது.

 

”அனைத்தும் இருந்தும், எதுவும் இல்லாத என்னிடம் எதுக்கு மோதுற”, “......அங்கே போய் பார் கலெக்டர், டாக்டர், அரசு உயர் அதிகாரி என்று இருப்பார்கள், இதுவே உன் குப்பத்திற்கு சென்று பார் சாக்கடையை சுத்தம் செய்பவர், வாகனம் ஓட்டுநர், மூட்டை தூக்குபவர் என்று தொழிலாளியாக இருப்பார்கள், இது ஏன்? என்று யோசி” உள்ளிட்ட பல கூர்மையான வசனங்கள் சில வெட்டுகளுடன் படத்தில் இடம் பெற்றிருப்பதால், அதன் முழுமையான வீரியம் திரையில் வெளிப்படமால் போகிறது. 

 

இரண்டாம் பாதியில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் மற்றும்  சில வன்முறை காட்சிகள் கதையின் போக்கை மாற்றும் வேலையை பார்த்தாலும், இறுதியில் இத்தகைய பிரச்சனைக்கு எழுச்சியும், புரட்சியும் தான் தீர்வு என்று சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ.டி.அலெக்ஸ், தான் நினைத்ததை நேர்த்தியாக சொல்லி, பார்வையாளர்கள் மனதில் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘தோழர் சேகுவேரா’ புதிய புரட்சிக்கு வழிகாட்டி.

 

ரேட்டிங் 3.3/5

Recent Gallery