Latest News :

’ஹெச்.எம்.எம்’ (HMM) திரைப்பட விமர்சனம்

23d8dc7b173fb69a2a74cba41beb92b1.jpg

Casting : Narasimman Packirisamy, Sumirah

Directed By : Narasimman Packirisamy

Music By : Bruce and Shyamala Devi

Produced By : Bright Entertainment Times - Narasimman Packirisamy

 

நாயகன் நரசிம்மன் பக்கிரிசாமி செயற்கைகோள்களை கட்டுப்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதற்கான திட்டத்தை தனது நண்பருடன் இணைந்து செயல்படுத்திக் கொண்டிருப்பவர், தனது காதலி சுமிராவுடன் மலைப்பிரதேசம் ஒன்றில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். 

 

இதற்கிடையே தனது வேலை விசயமாக நாயகன் நரசிம்மன் பக்கிரிசாமி வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில், அவரது குடியிருப்புக்குள் நுழையும் முகமூடி அணிந்த மர்ம மனிதன், சுமிராவின் தோழியை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார். முகமூடி மனிதரிடம் இருந்து தப்பிக்க போராடும் சுமிராவின் போராட்டம் வெற்றி பெற்றதா?, அந்த முகமூடி கொலைகாரன் யார்?, எதற்காக அவர் சுமிராவை கொலை செய்ய முயற்சிக்கிறார்?, வெளியே சென்ற நரசிம்மன் பக்கிரிசாமி என்ன ஆனார்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் நரசிம்மன் பக்கிரிசாமி, கதை எழுதி இயக்கியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்திருக்கிறார். மிக எளிமையான கதையை, மிக மிக எளிமையான முறையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து ஒரு படமாக கொடுத்திருக்கிறார்.

 

விஞ்ஞானி வேடத்தில் நடித்திருப்பவர் அதற்கு முழுமையான நியாயம் சேர்க்கும் வகையில் தனது தோற்றத்தை வெளிக்காட்ட வில்லை என்றாலும், தனக்கு துரோகம் செய்தவர்களுக்கு கொடுக்கும் பதிலடியில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களையும் மிரட்டியிருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் சுமிரா, புதுமுகம் என்றாலும் அந்த சுவடு தெரியாத வகையில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் முகமூடி கொலையாளியிடம் இருந்து தப்பிக்க போராடுபவர், இறுதியில் அவரை எதிர்த்து நிற்பதும் பிறகு வில்லியாக விஸ்வரூபம் எடுக்கும் காட்சிகளிலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

நாயகியின் தோழியாக நடித்த பெண் மற்றும் அவரது காதலர், நாயகனின் நண்பர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

கிரனின் ஒளிப்பதிவு, புரூஸ் மற்றும் ஷியாமளா தேவியின் இசை, துரைராஜ் கருப்பசாமியின் படத்தொகுப்பு என அனைத்தும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

ஒரு வீடு, நான்கு நடிகர்கள் என சிறு குழுவை வைத்துக்கொண்டு சிறிய முதலீட்டில் ஒரு படம் எடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநரும் தயாரிப்பாளருமான நரசிம்மன் பக்கிரிசாமி, அதற்காக சாமர்த்தியமாக சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை தேர்ந்தெடுத்தாலும், அதை சரியாக சொல்லாமல் சில இடங்களில் தடுமாறியிருக்கிறார்.

 

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகியை சுற்றி நடக்கும் மர்ம விசயங்கள் மூலம் நம்மை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் நரசிம்மன் பக்கிரிசாமி, அடுத்தடுத்த காட்சிகளில் என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை நகர்த்தி சென்றாலும், படத்தின் மிக முக்கியமான சஸ்பென்ஸை படத்தின் முதல் பாதியிலேயே உடைத்தது திரைக்கதையை தொய்வடைய செய்துவிடுகிறது. இருந்தாலும், நாயகியை கொலை செய்ய முயற்சிப்பது ஏன்? என்ற கேள்வி இரண்டாம் பாதியை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, இறுதியில் இருவரில் தப்பிக்கப் போகும் ஒருவர் யார்? என்பதை சொன்ன விதம் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.

 

கதைக்கரு மற்றும் அதற்கான திரைக்கதை, காட்சிகள் ஆகியவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டாலும், அவற்றை ஒரு திரைப்படமாக கொடுத்த விதத்தில் பல குறைகள் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் பொருளாதாரம் என்றாலும், ரசிகர்கள் கொடுக்கும் பணத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் குறைந்தபட்ச தரமாவது படத்தில் இருப்பது தான் நியாயம், ஆனால் அந்த நியாயம் இந்த படத்தில் இல்லை என்பது தான் உண்மை.

 

மொத்தத்தில், இந்த ’ஹெச்.எம்.எம்’ சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வந்த வினை!

 

ரேட்டிங் 1.5/5

Recent Gallery