Casting : Sathish, Ajayraj, Pavel Navageethan, Rithika, Mime Gopi, Kpy Sathish, Vidhya Pradeep, Bava Chelladurai, Ramdoss, Ajay Desai
Directed By : Chachhi
Music By : M.S.Jones Rupert
Produced By : Shanmugam Creations - Bharathwaj Muralikrishnan, Anandakrishnan Shanmugam & Sriram Sathyanarayanan
ஏற்காடு சாலையில் இரவு நேரத்தில் பதற்றத்துடன் காரை ஓட்டிச் செல்லும் நாயகன் சதீஷ், திடீரென்று குறுக்கே வரும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விடுகிறார். விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி உயிரிழக்க அவரது உடலை தனது கார் டிக்கியில் வைத்துக்கொண்டு பயணத்தை தொடரும் சதீஷ் சோதனைச் சாவடியில் சிக்கிக்கொள்கிறார். அங்கிருக்கும் காவலர்களிடம் இருந்து தப்பிக்க அவர் மேற்கொள்ளும் செயல், காவலர்களின் கவனத்தை திசை திருப்பினாலும், காருடன் அவரை காவல் நிலையத்தில் உட்கார வைத்துவிடுகிறது.
மறுபக்கம், அதே இரவில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட, அந்த கொலையாளியை கைது செய்வதில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம், அந்த காவல் நிலையத்தில் இருக்கும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இடையே ஈகோ யுத்தம் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று சம்பவங்களின் பின்னணியை ஒரே நோர்கோட்டில் இணைக்கும் திருப்பங்களை விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் ஜானரில் சொல்வதே ‘சட்டம் என் கையில்’.
சதீஷ் காரில் பயணிக்கும் ஆரம்பக் காட்சியிலேயே அவரிடம் இருக்கும் பதற்றம் படம் பார்க்கும் பார்வையாளர்களிடமும் தொற்றிக் கொள்ளும் வகையில், திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சாச்சி, பிணத்துடன் அவரை காவல் நிலையத்தில் உட்கார வைத்து பதற்றத்தை அதிகரிக்கச் செய்வதோடு, தப்பிப்பதற்காக சதீஷ் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை பயணிக்க வைக்கிறது.
காவல் நிலையத்தை மையப்படுத்தி, ஒரு இரவில் நடக்கும் மூன்று சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்பது யூகிக்க முடிந்தாலும், இயக்குநர் சாச்சியின் திரைக்கதை மற்றும் திருப்பம் நிறைந்த காட்சிகள் யூகங்களை உடைத்து படத்தை சுவாரஸ்யமாக பயணிக்க வைக்கிறது.
நகைச்சுவையை தவிர்த்துவிட்டு கதையின் நாயகனாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சதீஷ், தனது அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு உயிரோட்டம் அளித்திருப்பதோடு, தன்னால் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக கையாள முடியும், என்பதை நிரூபித்து நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து விட்டு கவனம் பெறாமல் பயணித்துக் கொண்டிருந்த அஜய்ராஜ், இந்த படத்தில் தனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கவனம் ஈர்க்கிறார். மற்றொரு சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாவல் நவகீதன், வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வென்பா, வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் என படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் நடிப்பிலும் குறையில்லை.
ஒரு இரவில் நடக்கும் கதையின் பெரும்பாலான காட்சிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நடந்தாலும், அதை வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் பணி படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் மார்டின் டைடஸ்.ஏ, இயக்குநரின் பலமான திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடும் இயக்குநர் சாச்சி, அடுத்தடுத்த காட்சிகள் மற்றும் அதில் இருக்கும் திருப்பங்கள் மூலம் ரசிகர்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவதோடு, அனைத்து விசயங்களையும் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி படத்தை வேகமாக நகர்த்தி சென்றிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
இயக்குநர் சாச்சியின் சாமர்த்தியமான கதை சொல்லல் மற்றும் திரைக்கதை படத்தில் இருக்கும் சில தடுமாற்றங்களை ரசிகர்களின் பார்வையில் இருந்து மறைத்து, ஒரு அட்டகாசமான கிரைம் திரில்லர் அனுபவத்தை கொடுக்கிறது.
மொத்தத்தில், ‘சட்டம் என் கையில்’ ரசிகர்களுக்கு சர்பிரைஸ்.
ரேட்டிங் 3.2/5