Latest News :

’டோபோமைன் @ 2.22’ திரைப்பட விமர்சனம்

7fb0de4eb036403aa803141d26b746db.jpg

Casting : Dhirav, Nikhila, Vijay, Vibitha, Raghav, Samson, Sathya, Shakthivelan

Directed By : Dhirav

Music By : Alan shoji

Produced By : Dhirav

 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதன் மூலம் பிரபலமடைந்த சமூக வலைதளப் பக்கங்களின் மோகத்தில் மூழ்கியிருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், குற்றச் செயல்களுக்கு அவை எப்படி வித்திடுகிறது, என்பதை திரை மொழியில் பேசுவது தான் ‘டோபோமைன் @ 2.22’.

 

டோபோமைன் என்பது மனிதர்களின் மூளையில் சுரக்கும் ஹார்மோன். நம் வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சிகரமான விசயங்களை திரும்ப திரும்ப செய்ய தூண்டுவது இந்த டோபோமைன் ஹார்மோன் தான். அந்த வகையில், ஸ்மார்ட்போன்கள் மூலம் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருந்துக்கொண்டு அனைத்து வயதினரையும் அடிமையாக்கும் டிஜிட்டல் உள்ளடக்கங்கள், மக்களின் வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறது, என்பதை கிரைம் திரில்லர் ஜானரில் சொல்லியிருக்கும் இயக்குநர் திரவ், படத்தின் துவக்கத்திலேயே ஒரு அடிக்குமாடி குடியிருப்பை காட்டி, அதில் வசிக்கும் சில கதாபாத்திரங்களின் அறிமுகத்தோடு, அந்த இடத்தில் பிற்பகல் 2:22 மணிக்கு ஒரு கொலை நடக்கப் போகிறது, அது யார் ? என்று பார்ப்போம், என்ற கோணத்தில் கதையை நகர்த்துகிறார். 

 

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை இருக்க, அதன் மூலம் இவர்களில் யாரோ ஒருவர் தான் கொலை செய்யப்பட போகிறார், என்று நாம் எதிர்பார்க்கும் போது, வேறு ஒரு கோணத்தில் கதையை நகர்த்திச் செல்லும் இயக்குநர், தற்போதைய டிஜிட்டல் உள்ளடக்கங்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி, அனைத்து வயதினரையும் சென்றடைவதே அந்த கொலைக்கு  காரணம், என்பதை அழுத்தமாக சொல்லி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறார்.

 

காதல் முறிவு ஏற்பட்ட பிறகும் காதலரின் தொல்லைக்கு ஆளாகும் நிகிலாவின் நடிப்பு அமர்க்களம். பக்கத்து வீட்டு பெண் போல் மிக சாதாரணமான திரை இருப்பு மூலம் ரசிகர்களை ஈர்க்கும் நிகிலா, தனது ஒவ்வொரு ரியாக்‌ஷன் மூலம் அசத்துபவர், கோபத்தில் பேசும் போது கூட அழகாக இருக்கிறார். பெண்ணியம் குறித்து அவர் சொல்லும் நிஜ குட்டி கதையை விட, அதை அவர் சொல்லும் விதம் ரசிக்க வைக்கிறது. பெரிய வாய்ப்பு கிடைத்தால் நிகிலா தமிழ் சினிமாவில் நிச்சயம் தவிர்க்க முடியாத நடிகை ஆவார்.

 

மகேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் மற்றும் அவரது மனைவியாக நடித்திருக்கும் விபிதா இருவரும் யூடியுபில் என்ன செய்வார்களோ அதையே தான் இதிலும் செய்திருக்கிறார்கள், அதே எக்ஸ்பிரசனை தான் இங்கேயும் கொடுத்திருப்பதால், அவர்கள் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.

 

மதுசூதனன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரவ், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையானவர்களின் அவல நிலையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தை மிக இயல்பாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார்.

 

ராகவ், சாம்சன், சத்யா, சக்திவேலன் என படத்தில் நடித்திருப்பவர்கள் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது நடிப்பு மூலம் காட்சிகளை உயிரோட்டமாக பயணிக்க வைத்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரனின் எளிமையான ஒளிப்பதிவு திரைக்கதையில் உள்ள உணர்வுகளை சிதைக்காமல் பயணித்திருக்கிறது. அலன் சோஜி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு.

 

எழுதி இயக்கி தயாரித்திருப்பதோடு, பாடல்கள் எழுதி படத்தொகுப்பும் செய்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரவ், சொல்லப்பட வேண்டிய சமூக பிரச்சனையை பிரச்சாரமாக அல்லாமல் ரசிகர்களுக்கு பித்த கிரைம் திரில்லர் பாணியில் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

 

படத்தில் நடித்த நட்சத்திரங்கள், கதைக்களம் மற்றும் படமாக்குதல் ஆகியவை எளிமையாக இருந்தாலும், இயக்குநர் திரவ் தான் சொல்ல வந்த விசயத்தை தனது வலிமையான திரைக்கதை மூலம் பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிய செய்துவிடுகிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘டோபோமைன் @ 2.22’ அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery