Latest News :

‘தேவரா’ திரைப்பட விமர்சனம்

bd874339251a5e7deb1b5b5b1b83e4d3.jpg

Casting : NTR, Janhvi Kapoor, Saif Ali Khan, Prakash Raj, Srikanth, Shine Tom Chacko, Narain, Kalaiyarasan

Directed By : Koratala Siva

Music By : Anirudh Ravichander

Produced By : NTR Arts and Yuvasudha Arts - Mikkilineni Sudhakar and Hari Krishna K

 

கடலை நம்பி வாழும் நான்கு மலை கிராம மக்களின் வறுமையை பயன்படுத்திக் கொள்ளும் கடத்தல்காரர்கள் அவர்கள் மூலம் நடுக்கடலில் செல்லும் கப்பல்களில் இருக்கும் கடத்தல் பொருட்களை கரைக்கு கொண்டு வருகிறார்கள். கடத்தப்படும் பொருட்கள் என்னவென்று தெரியாமல், என்.டி.ஆர் தலைமையில் கிராம மக்களில் சிலர் அந்த வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் கடத்தப்படுவது ஆயுதங்கள் என்பதையும், அதன் மூலம் பல அப்பாவி மக்கள் கொள்ளப்படுவதையும் அறிந்துக்கொள்ளும் என்.டி.ஆர், இனி அத்தகைய வேலையைசெய்ய கூடாது என்று முடிவு எடுக்கிறார். ஆனால், அவரது முடிவுக்கு கட்டுப்பட மறுக்கும் சிலர், அந்த வேலையை தொடர்ந்து செய்ய முயற்சிக்க, அவர்களுக்கு என்.டி.ஆர் கடுமையான தண்டனை வழங்குவதோடு, அந்த கிராமத்தை விட்டே விலகிச் சென்று விடுகிறார். அப்படி விலகி செல்பவர், தான் எங்கிருந்தாலும் கெட்ட நோக்கத்தோடு கடலுக்குள் வருபவர்களை நிச்சயம் அழிப்பேன், என்று எழுதி வைத்துவிட்டு சென்று விடுகிறார். அவர் சொன்னது போல், தவறான வேலைக்காக கடலுக்குள் செல்பவர்கள் அவரது தண்டனையோடு கரை திரும்புகிறார்கள். இதனால், கடத்தல் வேலைக்காக கடலுக்குள் செல்பவர்கள் அடங்கி விடுவதோடு, என்.டி.ஆரை அழிப்பதற்கான வாய்ப்பையும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, என்.டி.ஆரின் மகன் (மற்றொரு என்.டி.ஆர்) வளர்ந்து உருவத்தில் தனது அப்பா போல் இருந்தாலும், வீரத்தில் அவருக்கு எதிர்மாறாக இருக்கிறார். பயந்த சுபாவம் கொண்ட அவர் மூலம் அப்பா என்.டி.ஆரை திரும்ப வர வைத்து கொலை செய்ய திட்டம் போடும் எதிரிகள், தங்களது கூட்டத்துடன் மகன் என்.டி.ஆரை கடலுக்குள் அனுப்புகிறார்கள். தேவரா என்ற அப்பா என்.டி.ஆர் திரும்ப வந்தாரா?, எதிரிகள் அவரை கொலை செய்தார்களா?, பயந்த சுபாவம் கொண்ட மகன் என்.டி.ஆர் என்ன ஆனார்? ஆகிய கேள்விகளுக்கான விடையை வழக்கமான தெலுங்குப் படங்கள் பாணியில் அடித்து நொறுக்குவது தான் ‘தேவரா’.

 

அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் என்.டி.ஆர் நடித்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் தேவரா என்ற அப்பா என்.டி.ஆரைக் கொண்டு பயணிக்கிறது. இரண்டாம் பாதி வரா என்ற மகன் என்.டி.ஆரைக் கொண்டு பயணிக்கிறது. அதிரடி ஆக்‌ஷனோடு அப்பா என்.டி.ஆர் அமர்க்களப்படுத்த, பயம், காதல் ஆகியவற்றின் மூலம் மகன் என்.டி.ஆர் அசத்துகிறார். ஆனால், தேவராவின் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு மற்றும் வேகம், வராவின் இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது படத்தை தொய்வடைய செய்து விடுகிறது.

 

மகன் என்.டி.ஆர்க்கு ஜோடியாக நடித்திருக்கும் ஜான்வி கபூர் சில காட்சிகளில் தலைக்காட்டி விட்டு, ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடிவிட்டு மறைந்துவிடுகிறார். வில்லனாக நடித்திருக்கும் சயிப் அலி கான் தனது வேடத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். 

 

பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சைன் டாம் ஜாக்கோ, நரேன், கலையரசன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களுக்கு ஒரே வகையிலான வண்ணங்களை பயன்படுத்தியிருப்பது அவர்களுடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறது. படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் கற்பனைக்கு மீறியதாக இருந்தாலும் அதை தனது கேமரா மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். 

 

அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களை விட பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பவர், அதிவேகமாக கடக்கும் காட்சிகளை கூட தனது பீஜியம் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.

 

இரத்தம் தெறிக்கும் முதல் பாதி, காதல், காமெடி என்று நகரும் இரண்டாம் பாதி என்று திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கொரட்டல சிவா, இரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் மேக்கிங் மூலம் அதை ரசிக்க வைத்திருக்கிறார். 

 

‘சுறா’ படத்தில் விஜய் அறிமுகம் போல், என்.டி.ஆர் அறிமுக காட்சி, சுறா பயணம், ஒரே ஆளாய் ஒரு டன் எடை கொண்ட பொருளை தள்ளுவது, பெரும் கூட்டத்தை எந்தவித காயமும் இன்றி வெட்டி வீழ்த்துவது போன்ற காட்சிகள் மூலம் தெலுங்கு பட ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கொரட்டல சிவா, கப்பலில் இருந்து கடத்தல் பொருட்களை கரைக்கு கொண்டு வருவது, ஆயுத பூஜை போட்டி ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்களையும் எண்டர்டெயின் செய்கிறார். 

 

படத்தின் முதல் பாதியே ஒரு முழு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்க, இரண்டாம் பாதியில் தேவையில்லாத காதல் காட்சிகள் மற்றும் பாடல்களை திணித்திருப்பது ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் உற்சாகமடைந்த ரசிகர்களை சோர்வடைய செய்தாலும், படத்தின் இறுதிக் காட்சியில் திருப்பம் ஒன்றை வைத்து அதன் மூலம் இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், இந்த ‘தேவரா’ அதீத ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு ஏற்ற படம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery