Latest News :

’அப்பு’ திரைப்பட விமர்சனம்

6d3a323a1eea60923cd7ca2237b03122.jpg

Casting : Vinoth, Priya, Darling Madhan, PL Thenappan, Velu Prabhakaran, Priyanka Robo Shankar, Vijay Sathya, Veera, Subramani, Jeevan Prabhakar, Selva, Vinoth Francis, Murthy, Chitra

Directed By : Vasigaran Balaji

Music By : Alan Vijay

Produced By : RK Cretive Makers - Veera

 

தாய் இல்லாத சிறுவன் அப்பு தந்தை அரவணைப்பில் வளர்கிறார். தன் மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் அப்புவின் தந்தை, கூலி வேலை செய்து கஷ்ட்டப்பட்டாலும் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்.  விபத்தால் தந்தை உயிரிழக்க, அப்புவின் படிப்பு, வாழ்க்கை என அனைத்தும் கேள்விக்குறியாகி விடுகிறது.  அப்பு வசிக்கும் பகுதியில் வசிக்கும் நாயகன் வினோத், சூழ்நிலையால் தனது வாழ்க்கையை தொலைத்துவிட்டு ரவுடியாகி விட, அவரை போலீஸ் என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறது. 

 

எத்தனை கஷ்ட்டங்கள் வந்தாலும் அப்பாவின் ஆசைப்படி படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் அப்பு நினைத்தது நடந்ததா?, சந்தர்ப்ப சூழ்நிலையால் ரவுடியாகி போலீஸுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கும் வினோத்தின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

அப்பு என்ற சிறுவனை சுற்றி கதை நடந்தாலும், ரவுடி தர்மா மற்றும் வினோத் ஆகியோருக்கான கிளை கதைகளோடு பயணிக்கும் படத்தில் இயக்குநர் வசீகரன் பாலாஜி பல நல்ல விசயங்களை சொல்லியிருக்கிறார். குறிப்பாக, கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும், எத்தனை கஷ்ட்டம் வந்தாலும் கல்வியை மட்டும் கைவிட கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த கல்லூரி வினோத், இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். சூழ்நிலையால் ரவுடியாக மாறும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் பிரியா, ஆணவக்கொலைகளின் கொடூரத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து மனதில் நிற்கிறார்.

 

அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவன் பிரபாகரன், படிப்பதற்காக ஏங்கும் காட்சிகளில் இதயத்தை கனக்க செய்கிறார். தனது தந்தையின் இறப்புக்கு பிறகு சுற்ரியிருப்பவர்கள் தங்களது தேவைக்காக அவரை பயன்படுத்திக் கொண்டாலும், அனைத்து கஷ்ட்டங்களையும் தாண்டி படித்துவிட வேண்டும் என்று பயணிக்கும் கதாபாத்திரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை சிறுவன் ஜீவன் பிரபாகரன் சிறப்பாக செய்திருக்கிறார்.

 

போலீஸ் கமிஷ்னராக நடித்திருக்கும் பி.எல்.தேனப்பன், ஓய்வு பெற்ற ஆசிரியராக நடித்திருக்கும் வேலு பிரபாகரன், வீரா, சுப்பிரமணி, விஜய் சத்யா, பிரியங்கா ரோபோ சங்கர், செல்வா, வினோத் பிரான்சிஸ், மூர்த்தி, சித்ரா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் தீபக் எளிய மக்களின் வாழ்க்கையை பற்றி பேசும் கதைக்களத்திற்கு ஏற்ப எளிமையான களங்களில், தனது கேமராவை பயணிக்க வைத்து காட்சிகளை இயல்பாக பதிவு செய்திருக்கிறார்.

 

ஆலன் விஜய் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் என்றாலும், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. 

 

படத்தொகுப்பாளர் கே.கே.விக்னேஷ், படத்தின் நீளத்தில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக அப்புவை சுற்றி நடக்கும் கதையோடு பயணிக்கும் கிளைக்கதையில் வரும் காட்சிகளில் கருணை காட்டாமல் கத்திரி போட்டிருக்கலாம்.

 

இயக்குநர் வசீகரன் பாலாஜி, கல்வியின் முக்கியத்துவத்தை கருவாக வைத்துக்கொண்டு சமூக அவலங்களை பேசியிருக்கிறார். இந்த சமூகத்தில் தவறு செய்பவர்களை காட்டிலும், எந்தவித தவறும் செய்யாதவர்கள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள், என்பதை அப்பு கதாபாத்திரம் குற்றவாளியாகும் காட்சியின் மூலம் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

 

தந்தை இறப்புக்கு பிறகு அப்புவின் வாழ்க்கை மற்றும் சுற்றியிருப்பவர்கள் எத்தகைய சுயநலமாக செயல்படுகிறார்கள், என்பதை இயக்குநர் காட்சிப்படுத்திய விதம் இதயத்தை கனக்க செய்து நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறது. இதனுடன் கல்லூரி வினோத்தின் திசை மாறும் வாழ்க்கை மற்றும் அதன் பின்னணியை  கிளைக்கதையாக சொன்ன விதம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும், ரவுடி தர்மாவின் கதாபாத்திரமும் அவரது கதையும் திணிக்கப்பட்டது போல் இருக்கிறது.

 

மேக்கிங் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், எளிய மக்களின் வாழ்வியலை, மிக எளிமையான திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் எதார்த்தமாக சொல்லியிருப்பதோடு, கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் வசீகரன் பாலாஜியை மனதார பாராட்டலாம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery