Latest News :

’நீல நிற சூரியன்’ திரைப்பட விமர்சனம்

6cb0333c8d26fb36ec9061ddd5c658a0.jpg

Casting : Samyuktha Vijayan, Kitty, Gajaraj, Geetha Kailasam, Prasanna Balachandran, KVN Manimegalai, Masanth Natarajan, Haritha, Winner Ramachandran, Mona Bedra, Semmalar Annam, Kausalya Saravanaraja, Vaideeswari

Directed By : Samyuktha Vijayan

Music By : Steev Benjamin

Produced By : Mala Manyan

 

ஆணாக பிறந்தாலும் ஹார்மோன் பாதிப்பால் வேறு பாலினத்தவராக மாறும் நபர்களை திருநங்கைகளாகவே பார்க்கும் இந்த சமூகம் பெண்ணாக அங்கீகரிப்பதில்லை. அப்படி ஒரு சூழலுக்கு தள்ளப்படும் கதையின் நாயகனான அரவிந்த், பானுவாக மாற்றம் அடைவது எப்படி?, அதை அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, அவர்களை கடந்து செல்லும் அவரது பயணத்தை இதயம் கனக்கும் படி சொல்வதே ‘நீல நிற சூரியன்’.

 

அரவிந்த மற்றும் பானு என்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சம்யுக்தா விஜயன், முதன்மை வேடத்தில் நடித்ததுடன், படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். வேற்று பாலினத்தவர்களின் வலியை சோகமாக மட்டுமே சொல்லாமல், திரை மொழியில், சிறப்பான மேக்கிங் மூலம் சொல்லியிருப்பவர் இயக்குநராக ஒரு விசயத்தை மக்களிடம் கடத்துவதில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.

 

பிறப்பில் அரவிந்த் என்ற ஆணாக இருந்தாலும், பெண்ணாக வேண்டும் என்ற விருப்பத்தை நோக்கி அவர் பயணிக்கும் போது தனக்குள் இருக்கும் பதற்றத்தை தனது நேர்த்தியான நடிப்பு மூலம் சிறப்பாக வெளிக்காட்டியிருக்கும் சக்யுக்தா விஜயன், பானுவாக மாறிய போது இந்த சமூகத்தின் பார்வையை எப்படி கடக்க வேண்டும் என்பதை தனது இயல்பான நடிப்பு மூலம் வெளிக்காட்டியிருக்கிறார்.

 

மனநல மருத்துவராக நடித்திருக்கும் கிட்டி, அரவிந்தின் தந்தையாக நடித்திருக்கும் கஜராஜ் மற்றும் தாயாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அரவிந்தின் உறவினராக நடித்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன், பள்ளி துணை தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் கே.வி.என்.மணிமேகலை, கார்த்திக் வேடத்தில் நடித்திருக்கும் மசாந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமச்சந்திரன், மோனா பத்ரா, செம்மலர் அன்னம், கெளசல்யா, விஸ்வநாத் சுரேந்திரன், வைதீஸ்வரி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் ஒரு சில காட்சிகளில் முகம் காட்டினாலும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு, இசை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பணிகளை கவனித்துள்ள ஸ்டீவ் பெஞ்சமின், பணி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருப்பதோடு படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படும் பல நோய்களைப் போல், பிறந்த பாலினத்தில் இருந்து வேறு பாலினத்திற்கு மாறுபவர்கள், இந்த சமூகத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், இந்த சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சம்யுக்தா விஜயன், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை மிக கவனமுடன் கையாண்டு பார்வையாளர்களை யோசிக்க வைத்து விடுகிறார்.

 

இயக்குநர் சொல்ல வந்த விசயம் ஏற்கனவே குறும்படங்களாகவும், ஆவணப்படங்களாகவும், திரைப்படமாகவும் சொல்லப்பட்டிருந்தாலும், மேக்கிங் மூலம் தான் சொல்ல வந்ததை தனித்து காட்டியிருக்கும் சம்யுக்தா விஜய், உலக சினிமா என்ற ரீதியில் ஒரு காட்சியை மிக நீளமாக படமாக்கும் விதத்தை தவிர்த்திருக்கலாம். 

 

மொத்தத்தில், ‘நீல நிற சூரியன்’ மக்களை சிந்திக்க வைக்கும்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery