Latest News :

’ஆரகன்’ திரைப்பட விமர்சனம்

40dad5b837a83f81b328db6919664405.jpg

Casting : Michael Thangadurai, Kavipriya Manoharan, Sriranjani, Kalairani, Yazar

Directed By : Arun.KR

Music By : Vivek and Jeshwanth

Produced By : Hariharan Panchalingam

 

நாயகி கவிப்ரியாவும், நாயகன் மைக்கேல் தங்கதுரையும் காதலிக்கிறார்கள். மலைப்பிரதேசம் ஒன்றில் உள்ள வீட்டில் நோய்வாய்ப்பட்டு தனிமையில் வசிக்கும் நடுத்தர பெண்மணி ஸ்ரீரஞ்சனியை பார்த்துக் கொள்ளும் பணிக்கு செல்ல கவிப்ரியா முடிவு செய்கிறார். ஒரு சாதாரண பணிக்கு நினைத்து பார்க்க முடியாத சம்பளம் என்பதால் சந்தேகம் அடையும் மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியாவை அங்கு செல்ல விடாமல் தடுத்தாலும், அதை கேட்காமல் அவர் அங்கு செல்கிறார்.

 

செல்போன் டவர் கிடைக்காத, ஆள்நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் அந்த வீடு மர்மமாக இருக்க, அந்த வீட்டில் இருக்கும் பொருட்களும் மர்மம் நிறைந்தவைகளாக இருப்பதோடு, முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக் கொள்வது எங்கள் குடும்பத்திற்கு ஆகாது, என்பதால் நாங்கள் அதை பயன்படுத்த மாட்டோம், என்று ஸ்ரீரஞ்சனி சொல்கிறார். சில நாட்களில் ஸ்ரீரஞ்சனியை போல் தானும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை உணரும் நாயகி, தனது காதலனோடு செல்போனில் பேசுவதன் மூலம் ஆறுதல் அடைந்து நாட்களை கடத்துகிறார். 

 

நாயகியின் கைப்பேசி பழுதடைய அதன் மூலம் இருந்த காதலனுடனான தொடர்பும் இல்லாமல் போக, திடீரென்று நாயகியின் உருவத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அவருடைய தோற்றம் வயதனாவராக தெரிகிறது. இது படம் பார்ப்பவர்களுக்கு தெரிந்தாலும் நாயகிக்கு தெரியவில்லை, காரணம் அங்கு தான் கண்ணாடி இல்லையே. இருப்பினும் தன்னை சுற்றி நடக்கும் மர்மங்கள் பற்றி நாயகி உணரும் தருணத்தில், அவரது காதலன் அந்த இடத்தில் இருக்கிறார், ஆனால் அவர் வெவ்வேறு உருவங்களில் நாயகியின் கண்களுக்கு தெரிகிறார். மைக்கேலின் இந்த திடீர் மாற்றங்கள் பார்வையாளர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வேலையில், நாயகி தான் மிகப்பெரிய சதிவலையில் சிக்கியிருப்பதை உணர்கிறார். அது என்ன? அதில் இருந்து அவர் மீண்டாரா? என்பதை வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் சொல்வதே ‘ஆரகன்’.

 

காதலி மீது அதீத அன்பும், அக்கறையும் கொண்டவராக இருக்கும் நாயகன் மைக்கேல் தங்கதுரை, தனது சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் தனது கொடூர முகத்தோடு, உண்மையான முகத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் அதிர வைக்கிறது.

 

மகிழ்நிலா என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிரிப்பு மலர்ந்த முகத்தோடும், அழகோடும் இருக்கிறார் நடிகை கவிப்ரியா. ஆதரவற்ற தனக்கு காதலன் மூலம் புதிய உறவும், வாழ்க்கையும் கிடைக்கப் போகிறது என்ற தனது மனமகிழ்ச்சியை தனது குழந்தைத்தனமான முகத்தில் அழகாக வெளிப்படுத்தும் கவிப்ரியா, தன்னை சுற்றி நடக்கும் மர்மங்கள் மற்றும் அச்சமூட்டும் சம்பவங்கள் மூலம் முகத்தில் பதற்றத்தையும், தனக்கு எதிராக நடந்த சதி பற்றி தெரிந்து ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் ஒட்டுமொத்த திரையரங்கமும் அவர் மீது பரிதாபப்படுகிறது.

 

பார்வையாளர்களை பயமுறுத்தும் விதத்தில் நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி, இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். காதலனால் ஏமாற்றப்பட்டு பல ஆண்டுகளாக அடிமை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலைராணி தனது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்தை மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார். இவர்கள் தவிர சில முகங்கள் சில காட்சிகளில் எட்டிப்பார்த்து திரைக்கதையோட்டத்திற்கு உதவியிருக்கிறது.

 

அடர்ந்த வனப்பகுதி, அதனுள் இருக்கும் அழகான வீடு என்று அழகு நிறைந்த கதைக்களத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்தி, அதே பகுதியை மர்மம் நிறைந்தவைகளாக காட்டி பார்வையாளர்களை பதற்றம் அடையவும் செய்திருக்கிறார்.

 

இரண்டு கதபாத்திரங்களின் தனிமையையும், நாயகியின் எதிர்பார்ப்பு மற்றும் ஏமாற்றத்தையும் தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர்கள் விவேக் - ஜெஷ்வந்த், பாடல்களையும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.

 

படத்தொகுப்பாளர் சாய் தக்‌ஷா, வித்தியாசமான கதைக்களம் மற்றும் அதில் இருக்கும் திருப்பங்களை தொகுத்த விதம் படத்தை விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் பயணிக்க வைக்கிறது. கலை இயக்குநர் காகி ஜெயசீலனின் கைவண்ணமும் கவனம் ஈர்க்கிறது.

 

இந்தியாவின் முக்கிய இதிகாசமான இராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சஞ்சீவி மூலிகை மனிதருக்கு இறப்பு இல்லாத வாழ்க்கையை கொடுக்கும் என்பது உண்மையா? பொய்யா? என்பது ஒரு பக்கம் இருக்க, இப்படி ஒரு கருவை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் நம்மை பதற்றத்துடன் படம் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் அருண்.கே.ஆர்.

 

இரண்டு கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி, ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை, பல திருப்பங்களோடு நகர்த்தி செல்லும் இயக்குநர், இறப்பு இல்லாத வாழ்க்கைக்காக அப்பாவி பெண்களை தனது சதிவலையில் சிக்க வைக்கும் ஒருவரது கொடூர முகம் மற்றும் அமானுஷ்ய சக்திகளை மிக எளிமையாக காட்சிப்படுத்தியிருந்தாலும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு பார்வையாளர்கள் படத்துடன் ஒன்றிவிடுகிறார்கள்.

 

திரைக்கதை நகர்த்தலில் சில தடுமாற்றங்களும், லாஜிக் மீறல்களும் இருக்கிறது. ஆனால், அவை குறைகளாக படத்தை பாதிக்காதவாறு, ஆரம்பம் முதல் முடிவு வரை, தான் எடுத்துக்கொண்ட கதைக்கருவை வித்தியாசமான முறையில் சொல்லி, பார்வையாளர்களை பதற்றத்துடன் படம் பார்க்க வைத்ததில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘ஆரகன்’ ரசிகர்களை ஏமாற்றவில்லை.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery