Casting : Vishwath, Sunaina, Naga Vishal, Kathadi Ramamurthy, Jegan, Ramachandran Durairaj
Directed By : Sriram Anandhasangar
Music By : Kausik Giris
Produced By : Stories By The Shore - Anirudh Vallab
விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்று விரும்பும் நாயகன் விஷ்வத்தின் ஏழ்மை அவரது கனவை தகர்த்துவிடுகிறது. இதனால், ஆட்டோ ஓட்டுநராக தனது வாழ்க்கையை ஓட்டும் அவர் மீது பெண் போக்குவரத்து காவலரான சுனைனா அக்கறை காட்டுகிறார். தனது ஆசை நிறைவேறாமல் போனதால் எப்போதும் சலிப்பான மனநிலையுடன் பயணிக்கும் விஷ்வத்தின் ஆட்டோவில் ஒரு நாள், 16 வயது ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பயணிக்கிறார். 1948-ல் இருந்து நிகழ்காலத்துக்கு டைம் டிராவல் மூலம் கலாம் வந்திருப்பதை விஷ்வத் புரிந்து கொள்கிறார்.
அதே சமயம், 1948-ல் இருந்து தற்போதைய காலக்கட்டத்திற்கு வந்ததற்கான நோக்கம் பற்றி தெரியாமல் 16 வயது கலாம் தவிக்கிறார். கலாமின் நோக்கம் என்ன? என்பதை அறிந்து அதை நிறைவேற்றும் கட்டாயத்துக்குத் தள்ளப்படும் விஷ்வத், கலாமுடன் இணைந்து அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த நோக்கம் என்ன?, அதை விஷ்வத் எப்படி கண்டுபிடிக்கிறார்?, என்பதை நெகிழ்ச்சியாக சொல்வதே ‘ராக்கெட் டிரைவர்’.
பிரபா என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஷ்வத், அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார். பிரபா மீது அக்கறை காட்டும் தோழியாக நடித்திருக்கும் சுனைனாவுக்கு திரைக்கதையோடு பயணிக்க கூடிய வேடம் இல்லை என்றாலும், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
சிறுவயது கலாமாக நடித்திருக்கும் நாகவிஷால் மற்றும் கலாமின் நண்பராக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி இருவரும் சிறப்பான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள்.
இசையமைப்பாளர் கெளஷிக் கிரிஷ், ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் ஆகியோரது பணி கதைக்களத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது.
ஃபேண்டஸி டிராமா வகை படங்கள் என்றாலே பிரமாண்டமும், திருப்பங்களும் நிறைந்தவையாக இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர், அறிவியலையும் தத்துவத்தையும் இணைக்கும் முயற்சியாக படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு விசயங்களின் பின்னணியில் எவ்வளவு பெரிய சிறந்த நோக்கங்கள் இருக்கின்றன, என்பதை சுவாரஸ்யமான திரைக்கதை நகர்த்தல் மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர், ஃபேண்டஸி டிராமா வகை கதையை எளிமையான முறையில் படமாக்கியிருந்தாலும், அதில் அருமையான கருத்தை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெறுகிறார்.
மொத்தத்தில், ‘ராக்கெட் டிரைவர்’ நெகிழ்ச்சியான பயணம்.
ரேட்டிங் 3.5/5