Casting : Prajin, shakana, Bose Venkat, Aadukalam Naren Joseph Thomas
Directed By : Santhosh Gopinath
Music By : RD Mohan
Produced By : Silver Movies International - Rajan
நாயகன் பிரஜின் தனது நண்பர்களுடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால், ஊர் மக்களிடம் அவருக்கு நல்ல பெயரும் மரியாதையும் கிடைக்கிறது. மக்களிடம் பிரஜினின் செல்வாக்கு அதிகரிப்பதால் கோபமடையும் அரசியல்வாதிகள் அவரை அடக்கி வைக்க முயற்சிக்கிறார்கள். அது முடியாமல் போக காவல்துறையை ஏவி அவருக்கு தொல்லை கொடுக்கிறார்கள். அதற்கும் அசராத பிரஜின் அனைவரையும் விரட்டியடிக்கிறார். இதனால் அவர் மீது இருக்கும் கோபம் அதிகரிக்க, அவரது குடும்பத்திற்கு தொல்லை கொடுக்கிறார்கள். குடும்பத்தை சீண்டியதால் வெகுண்டெழும் பிரஜின், அவர்களுக்கு கொடுக்கும் பதிலடியால் காவல்துறையே ஆடிப்போவதோடு, அவர் மீது சமூக விரோதி மற்றும் தீவிரவாதி என்ற பழியை சுமத்துகிறது.
அரசியல் அதிகாரம் கொண்டவர்களாலும், காவல்துறை அதிகாரிகளாலும் தீவிரவாதி என்ற பழியோடு தலைமறைவு வாழ்க்கை வாழும் பிரஜின், தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்காக அதிரடி பாதையில் பயணிக்க முடிவு செய்கிறார். மறுபக்கம் அனைத்து உண்மைகளையும் ஆதாரங்களோடு நிரூபித்து உண்மையான குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை பெற்று தரும் முயற்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரியான போஸ் வெங்கட் ஈடுபடுகிறார். இவர்கள் இருவரில் யார், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப் போகிறார்கள், என்பதை அதிரடி ஆக்ஷனோடு சொல்வதே ‘சேவகர்’.
நீண்ட காலமாக தனக்கான இடத்தை பிடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் பிரஜின், சினிமாவில் தனது இருப்பை காண்பிப்பதற்காகவே கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். அப்படி ஒரு படம் தான் இது என்றாலும், இதில் பிரஜினுக்கு அறிமுக பாடல் ஒன்றை வைத்து அசத்தியிருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் ஷகானா ஒரு சில காட்சிகளில் சிரிப்பது, பாடல் காட்சிகளில் முகம் காட்டுவது, பிரஜினை பார்த்து வெட்கப்படுவது என்று வழக்கமான கமர்ஷியல் பட நாயகியாக வந்துவிட்டு போகிறார்.
நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட் மற்றும் அமைச்சராக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித், மனோ, ஜமீன் குமார், ஷர்புதீன், சந்துரு, ராஜ்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரதீப் நாயர் தனது கேமராவை கதைக்கு ஏற்ப பயணிக்க வைத்தாலும், கதை நடக்கும் பகுதியை அடிக்கடி பறந்து பார்வையில் காண்பித்து பார்வையாளர்களை சற்று சலிப்படைய வைக்கிறார்.
இசையமைப்பாளர் ஆர்.டி.மோகன் இந்த படத்திற்கு தான் இசையமைத்தாரா? அல்லது வேறு ஏதோ படத்திற்கு அமைத்த இசையை மாற்றி இந்த படக்குழுவிடம் கொடுத்தாரா? என்று தெரியவில்லை, அந்த அளவுக்கு காட்சிகள் ஒரு பக்கம் பயணிக்க, அவரது பின்னணி இசை வேறு ஒரு பக்கம் பயணிக்கிறது. கையில் கிடைக்கும் வாத்தியங்களை எல்லாம் வாசித்து பின்னணி இசையமைத்திருக்கும் அவரது பணி ஐயோ...ரகம்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் கோபிநாத், இந்த சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணிக்கும் இளைஞர்களுக்கு ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரம் மிக்கவர்களால் எத்தகைய துன்பங்கள் வரும் என்பதை சொல்வதோடு, அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஆக்ஷன் மற்றும் கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.
கமர்ஷியல் படம் என்றாலும் அதை சமூக அக்கறையோடு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சந்தோஷ் கோபிநாத், நாயகனின் தங்கையாக நடிக்க வேண்டியவரை நாயகியாகவும், நாயகியாக நடித்திருக்க வேண்டியவரை தங்கையாகவும் நடிக்க வைத்தது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
சில நேரங்களில் நாம் சொல்ல நினைத்தது எழுத்து வடிவில் முழுமை பெற்றாலும், காட்சி வடிவில் முழுமை பெறாமல் போவதுண்டு, அப்படிப்பட்ட சில குறைபாடுகள் இந்த படத்தில் இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மையக்கரு மற்றும் அதை நேர்மையான முறையில் சொல்ல வேண்டும் என்ற இயக்குநரின் முயற்சி ஆகியவற்றுக்காக இந்த படத்தை தாரளமாக ஒரு முறை பார்க்கலாம்.
மொத்தத்தில், ‘சேவகர்’ சோர்வு.
ரேட்டிங் 2/5