Casting : Kishore, Krishna, Kani, Kaali Venkat, Iyal, Shakthi, Bava Chelladurai, Sharanya Ramachandran
Directed By : Rasu Ranjith
Music By : Yuvan Shankar Raja
Produced By : Tribal Horse Entertainment -
கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் பணி செய்து வரும் கிஷோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். குறைவான வருமானம் என்றாலும் பிள்ளைகளை பெரிய பள்ளியில் படிக்க வைக்கும் கிஷோர் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். அவரை பார்த்தாலே பயத்தில் சிறுநீர் கழிந்துவிடும் அளவுக்கு மகனிடம் அதிகமான கண்டிப்பை காட்டுகிறார்.
என்ன தான் தந்தையை பார்த்து பயந்தாலும் அவர் இல்லாத போது தனக்கு பிடித்ததை செய்யும் அவரது மகன் தனது தங்கையை மகிழ்விப்பதற்காக தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பயணிக்கிறார். நெடுநேரம் ஆகியும் பிள்ளைகள் வீடு வந்து சேராததால் அச்சத்தில் அவரது அம்மா போலீஸிடம் புகார் அளிக்கிறார். வேறு ஒரு முக்கிய பிரச்சனையில் ஒட்டுமொத்த காவலர்களும் மூழ்கியிருக்க, காணாமல் போன பிள்ளைகளை கண்டுபிடித்தார்களா?, இரு சக்கர வாகனத்தில் பயணித்த பிள்ளைகள் என்ன ஆனார்கள்? என்பதை ஐந்து அத்தியாயங்களாக சொல்வதே ‘பாராசூட்’.
கிஷோர், கிருஷ்ணா, கனி, பாவா செல்லதுரை, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், முதன்மை கதாபாத்திரத்தில் அண்ணன், தங்கையாக நடித்திருக்கும் சிறுவன் சக்தி, சிறுமி இயல் ஆகியோரது நடிப்பு மற்றும் திரை இருப்பு ஒட்டுமொத்த தொடரையும் தூக்கி நிறுத்தியிருக்கிறது.
குழந்தைகளின் எதார்த்தமான மற்றும் அழகிய உலகத்தை தங்களது ஒவ்வொரு அசைவுகளிலும் பார்வையாளர்களின் இதயங்களில் கடத்தியிருக்கும் வருண் மற்றும் ருத்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த சிறுவர்களுக்காகவே இந்த தொடரை பார்க்கலாம்.
காணாமல் போன குழந்தைகளை தேடும் ஒரு பயணம் தான் கதை என்றாலும், கதையாசிரியர் ஸ்ரீதர் பிரச்சாரம் செய்வது போல் வசனங்களை வாரி இறைக்காமல், அளவான வசனங்கள் மூலம் பெற்றோர்களுக்கு அளவான அறிவுரை வழங்கியிருப்பதும், வேகமாகவும், விறுவிறுப்பாக பயணித்தாலும், சிறுவர்களின் உணர்வுகளையும், தந்தை மீதான அவர்களின் பயத்தை பார்வையாளர்கள் உணர்ந்துக் கொள்வதோடு, யோசிக்கும்படியான திரைக்கதை அமைத்திருப்பதும் தொடரின் மிகப்பெரிய பலம்.
காவல்துறையின் செயல்பாடுகளையும், அவர்களிடையே இருக்கும் ஈகோ மோதல்கள் ஆகியவற்றை மேலோட்டமாக சொன்னாலும், சிறுவர்கள் பெற்றோர்களிடம் கிடைப்பார்களா? அவர்கள் தேடிச் செல்லும் அவர்களின் பாராசூட் அவர்களுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடனேயே ஐந்து அத்தியாயங்களையும் மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் ராசு ரஞ்சித், குழந்தைகளின் உலகம் எத்தகைய அழகு என்பதையும், அவர்களின் எதிர்பார்ப்பு, அதை புரிந்துக்கொள்ளாத பெற்றோர்களின் தடுமாற்றம் ஆகியவற்றை காட்சி மொழியில் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை குழந்தைகளின் தேடல் பயணத்தை அழகியலோடு சொல்வதற்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறது. ஓம் நாராயணின் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் தொடரை தொய்வில்லாமல் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.
இணையத் தொடர் என்றாலே குற்றம், திரில்லர், திகில், ஆக்ஷன் போன்ற ஜானர்கள் மட்டுமே எடுபடும் என்பதை மாற்றும் முயற்சியில் இந்த ‘பாராசூட்’ தொடரை தயாரித்திருக்கும் நடிகர் கிருஷ்ணா, குழந்தைகளின் உலகத்தை ரசிகர்களின் இதயங்களில் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘பாராசூட்’ உயர பறப்பது உறுதி.
ரேட்டிங் 3.5/5