Latest News :

’டப்பாங்குத்து’ திரைப்பட விமர்சனம்

630049cd2f96d2d5ea93ebcf66641338.jpg

Casting : Sankarapandi, Deepthy, Kadhal Sukumar

Directed By : Muthuveera

Music By : Saravanan

Produced By : Modern Digitech Media LLP - S.Jegannathan

 

நாயகன் சங்கரபாண்டி தனது தாத்தாவை போல் சிறந்த தெருக்கூத்து கலைஞராக வலம் வருவதோடு, சொந்தமாக தெருக்கூத்து குழு ஒன்றை நடத்தி வருகிறார். அப்பா யார் என்று தெரியாமல், அம்மா வேறு ஒரு நபருடன் ஓடிவிட்டார் என்ற அவப்பெயருடன் வளர்ப்பு தாய் மூலம், தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துகொடுக்கும் தரகரான சைக்கிள் மாமா என்பவரின் மேற்பார்வையில் வளரும் நாயகி தீப்தி, நாயகனின் கலைக்குழுவில் இணைந்து நடனமாட ஆசைப்படுகிறார். ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடும் சைக்கிள் மாமா, அவரை பணக்காரர்களுக்கு விருந்தாக்க நினைக்கிறார்.

 

இதற்கிடையே, நாயகனும், நாயகியும் காதலித்தாலும், தனது அம்மா யார் என்று கண்டுபிடித்து, அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்த பிறகே திருமணம் என்பதில் நாயகி உறுதியாக இருக்கிறார். நாயகியின் அம்மாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாயகன் ஈடுபட, அவரது அப்பா யார்? என்ற உண்மை தெரிய வருகிறது.  அதன் மூலம் நாயகியின் அம்மா பற்றிய உண்மை தெரிந்ததா?, நாயகியின் முடிவின்படி அவரது திருமணம் நடந்ததா?, வில்லன் சைக்கிள் பாண்டியின் எண்ணம் ஈடேறியதா? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு, பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் சொல்வது தான் ‘டப்பாங்குத்து’.

 

மதுரையைச் சுற்றி நடக்கும் தெருக்கூத்து கலைகள் மற்றும் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை இதுவரை நாம் பார்த்திராத ஒரு பாணியில் முழுக்க முழுக்க பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் நிரம்பியிருந்தாலும் அவை அனைத்துமே கேட்க கேட்க திகட்டாதவைகளாக இருக்கின்றன.

 

தொலைக்காட்சி தொடர்களில் அசத்திய சங்கரபாண்டி, வெள்ளித்திரையில் நாயகனாக நடித்திருக்கும் முதல் படத்திலேயே நடிப்பில் மட்டும் அல்லாமல் நடனத்திலும் அசத்தியிருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி மற்றும் நடனம் ஆகியவை மூலம் தெருக்கூத்து கலைஞராகவே வலம் வந்திருக்கும் அவர், படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களிலும் வெளிப்படுத்தும் எனர்ஜி பார்வையாளர்களையும் ஆட வைக்கும் விதத்தில் இருக்கிறது. படத்தின் பல முக்கிய திருப்பங்களை பாடல்கள் மூலமாக விவரித்தாலும், அதை தனது எக்ஸ்பிரஷன்கள் மூலம் காட்சிகளாக ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் சங்கரபாண்டி, எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதை மிக சரியாக செய்யக்கூடியவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

கதையின் மையப்புள்ளியாக பயணித்திருக்கும் நாயகி தீப்தி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகனுடன் இணைந்து அவர் நடனம் ஆடுவதும், இறுதிக் காட்சியில் தனது தந்தை குறித்த ரகசியத்தை சொல்லும் காட்சியில், நடனத்துடன் சேர்த்து வெளிப்படுத்தும் நடிப்பு கச்சிதம்.

 

நாயகனின் நடனக் குழுவில் பப்பூன் வேடம் போடும் காதல் சுகுமார், படம் முழுவதும் வருவதோடு மட்டும் அல்லாமல், நாயகனுக்கு இணையாக தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளில் ஆட்டம், பாட்டு ஆகியவற்றின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக உடுக்கை பூசாரி பாடலில் மனுஷன் அசத்திவிட்டார்.

 

வில்லனாக சைக்கிள் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், தொழிலதிபர் பூபதியாக நடித்திருப்பவர், நாயகனின் அம்மா, நாயகியின் வளர்ப்பு தாய் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் சரவணன் முழுக்க முழுக்க நாட்டுப்புற பாடல்களின் பாணியில் பாடல்களை கையாண்ட விதம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. படத்தின் பெரும் பகுதியை பாடல்கள் ஆக்கிரமித்தாலும், அவற்றை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கொடுத்திருப்பவர் பின்னணி இசையையும் அளவாக கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் ஓடும் 45 ஆறுகளைக் கொண்டு பாடல் எழுதியிருக்கும் பாடலாசிரியரையும் வெகுவாக பாராட்டலாம்.

 

ஒளிப்பதிவாளர் ராஜா கே.பக்தவச்சலத்தின் கேமரா கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, தெருக்கூத்து நிகழ்ச்சிகளை எந்தவித சினிமாத்தனமும் இன்றி படமாக்கி பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

 

வசன காட்சிகளை விட, பாடல் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் அதை நேர்த்தியாக் தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளரின் பணியும், தெருக்கூத்து கலைகளுக்கு ஏற்பவும், எந்தவித ஆபாசமும் இல்லாமல் நடனம் அமைத்திருக்கும் நடன இயக்குநர் தீனா மாஸ்டரின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

அழிந்து வரும் தெருக்கூத்து கலைகள் மற்றும் கலைஞர்களின் அவல நிலையை தனது கதை, திரைக்கதை, வசனம் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் எஸ்.டி.குணசேகரன்.

 

படத்தை இயக்கியிருக்கும் முத்துவீரா, தெருக்கூத்து கலையையும், கலைஞர்களையும் மையப்படுத்திய படம் என்பதால், படத்தின் முக்கியமான திருப்பங்களை கூட, அந்த கலைஞர்களின் பாணியில் பாடல்கள் மூலம் விவரித்திருப்பது வித்தியாசமாகவும், தமிழ் சினிமாவுக்கு புதிதாகவும் இருக்கிறது.

 

கதை, திரைக்கதை ஆகியவற்றில் சில குறைபாடுகள் இருந்தாலும், கதை சொல்வதில் வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு, தெருக்கூத்து கலைகளை மையப்படுத்திய படம் என்பதால், அதன் மூலமாகவே கதை சொல்லியிருக்கும் இயக்குநர் முத்துவீராவின் முயற்சியை பாராட்டி வரவேற்கலாம்.

 

மொத்தத்தில், ‘டப்பாங்குத்து’ தெருக்கூத்து கலைகளுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery