Casting : Bharath, Abirami, Anjali Nair, Thalaivasal Vijay, Rajaji, Kanika, Shan, Kalki, Pavithra Lakshmi, PGS, Arol D.Shankar
Directed By : Prasad Murugan
Music By : Jose Franklin
Produced By : Friday Film Factory - Captain MP Anand
உயிருக்கு போராடும் காதல் மனைவியை காப்பாற்ற போராடும் ஆட்டோ ஓட்டுநர் பரத், பணத்திற்காக எதையும் செய்ய தயாராகிறார். அந்த நேரத்தில் அவரிடம் ஒரு துப்பாக்கி கிடைப்பதோடு, அதற்கான ஒரு வேலையும் வருகிறது. தன் மனைவிக்காக அந்த வேலையை அவர் செய்தாரா? இல்லையா? என்பது ஒரு கதை.
கணவர் இல்லாமல் தனி ஆளாக தன் மகனை வளர்க்கும் துப்புரவு தொழிலாளி அபிராமிக்கு மகனை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், அவரது மகன், மனதளவில் பெண்ணாக மாறிக்கொண்டிருப்பதை அறிந்த அபிராமி, மகனாக இருந்தவரை மகளாக அரவணிப்பதோடு, மகளை மருத்துவராக்கும் ஆசையை மாற்றிக்கொள்ளாமல் பயணிக்கிறார். அதனால் அவர் கடனாளியாகி விட, கடன் கொடுத்தவர் வட்டி கேட்டு மிரட்டுவதோடு, அவரது மகனாக பிறந்து மகளாக மாறியவருக்கு தொல்லையும் கொடுக்கிறார். கடனை திருப்பி கொடுக்க என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அபிராமியிடம் ஒரு துப்பாக்கி கிடைக்க, அதன் மூலம் தன் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார். அது முடிந்ததா? என்பது மற்றொரு கதை.
படித்து பெரிய வேலையில் சேர்ந்து சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படும் அஞ்சலி நாயருக்கு வீட்டில் திடீர் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். திருமணம் ஆனால் என்ன?, ஆசைப்பட்டபடி வேலைக்கு செல்லலாம் என்று அவர் நினைக்கும் போது கர்ப்பமடைந்து விடுகிறார். ஆனால், அந்த கர்ப்பத்திற்கு தன் கணவன் காரணம் அல்ல, என்ற உண்மையை தெரிந்துக் கொள்வதோடு, திருமணம் என்ற பெயரில் தான் சதிவலையில் சிக்கியிருப்பதையும் அறிந்துக்கொள்கிறார். அதில் இருந்து விடுபட முயற்சிப்பவர் கையில் துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது. அந்த துப்பாக்கி சதிவலையை அறுப்பதற்கு பயன்பட்டதா? இல்லையா? என்பது மூன்றாவது கதை.
சாதி வெறிப்பிடித்த தலைவாசல் விஜயின் மகள் பவித்ரா லட்சுமி, வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறார். விசயம் அறிந்தவர், மகளுக்கு அன்பாக அறிவுரை சொல்லிவிட்டு சாதி பஞ்சாயத்துக்கு செல்லும் போது, அவருக்கே தெரியாமல் அவர் காரில் துப்பாக்கி ஒன்று பயணிக்கிறது. அதை காவல்துறையிடம் ஒப்படைக்க நினைக்கும் போது, வேலைக்கு சென்ற மகள், காதலனை பதிவுத் திருமணம் செய்ய இருக்கும் தகவல் கிடைக்கிறது. கொலைவெறியோடு திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு செல்லும் தலைவாசல் விஜய், துப்பாக்கியை வைத்து என்ன செய்தார்? என்பது நான்காவது கதை.
எந்தவித தொடர்பும் இல்லாமல் பயணிக்கும் நான்கு கதைகளையும், தொடர்புபடுத்தும் அந்த துப்பாக்கி இவர்களிடம் எப்படி கிடைத்தது? அதன் மூலம் இவர்களின் வாழ்க்கை எத்தகைய மாறுதல்களை சந்திக்கிறது? என்பதை நான்-லீனர் முறையில் சொல்வது தான் ’ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்’.
உயிருக்கு போராடும் மனைவியை காப்பாற்ற பணத்திற்காக அலையும் பரத், தனது அவல நிலையை வெளிப்படுத்தும் போது இதயத்தை கனக்கச் செய்கிறார். பணத்திற்காக எதையும் செய்ய தயாரானவர், அந்த பணம் தன் கண்முன் இருக்கும் போது, அது தனக்கு வேண்டும், என்பதை தன் கண்கள் மூலமாகவும், முக பாவனைகள் மூலமாக சிறப்பாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்துகிறார். அதே பணம் கையில் இருந்தும் அவரது மனைவியின் நிலை கேள்விக்குறியாகும் போது, தன் நிலையை எண்ணி அவர் வருந்தும் காட்சியில் அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது.
துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்திற்கு ஏற்ப இயல்பாக நடித்திருக்கும் அபிராமி, தன் மகன் மனதளவில் பெண்ணாக மாறினாலும், அவரை அரவணித்து பாசம் காட்டுவதோடு, அவர் நன்றாக படிக்க வேண்டும், என்ற ஆசையோடு பயணிக்கும் காட்சிகளில் கனகச்சிதமாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
அப்பாவின் பேச்சைக் கேட்டு திருமணம் செய்துக் கொள்ளும் அஞ்சலி நாயர், அதே அப்பாவின் வார்த்தைக்காக தனக்கு எதிராக நடந்த சதியில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கையில், தன் அதிரடி மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியம் கொடுப்பவர், தன் அழகு மூலம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கவும் செய்கிறார்.
கல்கி, ராஜாஜி, கனிகா, எம்.ஜெகன் கவிராஜ், அரோல் டி.சங்கர், ஷான், பி.ஜி.எஸ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் கே.எஸ்.காளிதாஸ் மற்றும் கண்ணா.ஆர் கதைக்கு ஏற்ப தங்களது கேமராக்களை பயணிக்க வைத்திருந்தாலும், தங்கள் பணியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இசையில் பாடல்கள் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை என்றாலும், பின்னணி இசையில் குறையில்லை.
நான்கு கதைகளின் பயணங்களுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை என்றாலும், அவற்றை சம்மந்தப்படுத்தி பயணிக்கும் துப்பாக்கியின் பயணத்தை லான் லீனர் முறையில் தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு உதவியிருக்கிறார்.
உண்மை சம்பவம் ஒன்றை மையக்கருவாக வைத்துக்கொண்டு இயக்குநர் பிரசாத் முருகன் அமைத்திருக்கும் திரைக்கதையின் பயணம் சுவாரஸ்யமாக இருப்பதோடு, நான்கு கதைகளையும் நகர்த்திய விதம், அடுத்தது என்ன? என்ற கேள்வியோடு பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிடச் செய்து விடுகிறது. ஆனால், இரண்டாம் பாதியில், நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் எளிதில் யூகித்துவிடும்படி இருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்துவிடுகிறது.
சாதி பாகுபாடு, சமத்துவம், கம்யூனிசம், பெண்ணியம், அரசியல், மாற்று பாலினத்தவர்களின் உணர்வு ஆகியவற்றை தனது கூர்மையான வசனங்கள் மூலம் ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கிறார் எம்.ஜெகன் கவிராஜ்.
துப்பாக்கி ஒன்றை மையப்புள்ளியாக வைத்துக் கொண்டு சமூக அக்கறையோடு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் பிரசாத் முருகன், பொருளாதார ரீதியாக தனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லையில், அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சியில் சில தடுமாற்றங்கள் தெரிந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்மையாகவும், நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ நல்ல தொடக்கும்.
ரேட்டிங் 3.5/5