Casting : Ranga, Riya, Elango Kumanan, Suma, Tharani, Nithin Mehtha, Dilipan, Thansivi, Vadsan M.Natrajan
Directed By : Ranga
Music By : Shiva Padmayan and Jen Martin
Produced By : Ranga Film Company
இந்திய கப்பல் படையில் அதிகாரியாக விரும்பும் நாயகன் ரங்கா, தனது அப்பாவின் மறைவுக்குப் பின் அவர் தொடங்கிய உணவகத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார். இதனால், தன் ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு தனது மாமாவுடன் இணைந்து உணவகத்தை நடத்துகிறார். ஆனால், அவரது மாமா செய்த தவறால் அந்த உணவகம் அவர்களிடம் இருந்து கைமாறி விடுகிறது. இதனால் சொந்த உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றும் ரங்கா, எத்தனை வருடங்கள் ஆனாலும், பிரச்சனைகளை முடித்துவிட்டு தங்களது தொழிலை மீண்டும் சொந்தமாக்க வேண்டும், என்ற எண்ணத்தில் பயணிக்கிறார்.
ரங்காவின் உணவகத்தை கைப்பற்றும் வில்லன் நித்தின் மேத்தா, கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சூதாட்டங்களை நடத்துவதோடு, அதன் மூலம் வரும் பணத்தை அந்த உணவகத்தில் வைத்து விநியோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த சமயத்தில், அந்த பணத்தை கொள்ளையடிக்க மர்ம கும்பல் ஒன்று திட்டம் போடுகிறது. விசயம் அறிந்த நித்தின் மேத்தா, கொள்ளையர்களை தேடி தேடி கொலை செய்வதோடு, அந்த கும்பலின் முக்கிய நபரை பிடிக்க முடியாமல் திணறுகிறார்.
இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்ட பணம் முழுவதையும் உணவகத்தில் வைக்கும் வில்லன், பணத்திற்கு எந்த பிரச்சனையும் வரவில்லை என்றால் உணவகத்தை திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும், எதாவது பிரச்சனை வந்தால் உணவகம் உங்களுக்கு கிடைக்காது, என்று நாயகனிடம் சொல்கிறார். அதன்படி, பணத்தை காப்பாற்றும் பணியில் ஈடுபடும் நாயகன், தனது உணவகத்தை திரும்ப பெற்றாரா?, பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கும் கும்பலின் மூளையாக செயல்படும் நபர் யார்? என்பது தான் ‘தென் சென்னை’ படத்தின் கதை.
முதல் படத்திலேயே நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கம் என மூன்று பணிகளை தூக்கி சுமந்திருக்கும் ரங்கா, மூன்றையும் ஓரளவு சமாளித்திருக்கிறார். நாயகன் ரங்கா மிக அமைதியானவராக இருக்கிறார். சண்டைக்காட்சியில் கூட மிக மென்மையாக செயல்பட்டிருக்கும் அவர், காதலை சொல்வது, தங்களது தொழில் கைவிட்டு போக காரணமாக இருந்த மாமா மீது கோபப்படுவது, அப்பாவை கொலை செய்தவரை தாக்குவது என்று அனைத்து காட்சிகளிலும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார். எனவே, நடிப்பு பயிற்சி பெற்றுக்கொண்டு பிறகு நடிப்பு பற்றி யோசிப்பது ரங்காவுக்கு நல்லது.
இயக்குநர் ரங்கா, தான் சொல்ல வந்த கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்து சொதப்பியிருக்கிறார். முக்கிய மையக்கருவுடன் பல கிளைக்கதைகளை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருப்பவர், ரசிகர்கள் குழப்பமடையும் விதத்தில் பல விசயங்களை படத்தில் திணித்திருக்கிறார். ஆகையால், இயக்குநராகவும் அவருக்கு பயிற்சி தேவை.
தயாரிப்பாளர் ரங்கா, குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் படம் எடுக்க நினைத்தது தவறில்லை, ஆனால் அந்த கதையை உணவகம் ஒன்றை மையப்படுத்தி எழுதியிருப்பவர், அந்த உணவகம் மற்றும் அங்கு நடக்கும் சம்பவங்களை உணர்வுப்பூர்வமாக காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடாதது படத்திற்கு பலவீனமாக அமைந்திருப்பதோடு, பலருக்கு கதையும் புரியாமல் போய்விடுகிறது.
வில்லனாக நடித்திருக்கும் நித்தின் மேத்தா, ஸ்டைலிஷான வில்லனாக இருக்கிறார். அவரது திரை இருப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருந்தாலும், அவருக்கான காட்சியமைப்புகள் பெரிதாக இல்லை.
நாயகியாக நடித்திருக்கும் ரியா, நாயகனின் மாமாவாக நடித்திருக்கும் இளங்கோ குமரன், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுமா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சரத்குமார்.எம், இசையமைப்பாளர்கள் சிவா பத்மயன் மற்றும் ஜென் மார்டின் ஆகியோர் கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்கள்.
திரில்லர் ஆக்ஷன் ஜானர் கதை என்றாலும், அதில் பல தேவையில்லாத விசயங்களை இணைத்து இயக்குநர் ரங்கா எழுதியிருக்கும் திரைக்கதை படத்தை தொய்வடைய செய்து விடுகிறது. இருப்பினும், வில்லன் மற்றும் அவரது சூதாட்ட பணம், அதை கொள்ளையடிக்க முயற்சிக்கும் கும்பல், அதன் பின்னணி ஆகியவை படத்திற்கு சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. இந்த சுவாரஸ்யத்துடன் காட்சிகளை நகர்த்தியிருந்தால் இந்த ‘தென் சென்னை’ நிச்சயம் வட சென்னை போல் கவனம் ஈர்க்கும் படமாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், ‘தென் சென்னை’ சரியில்லை.
ரேட்டிங் 25