Casting : Nivetha Thomas, Arundev Pothula,Vishwadev Rachakonda, Priyadarshi Pulikonda, K.Bhagyaraj, Krishna Teja
Directed By : Nanda Kishore Emani
Music By : Vivek Sagar
Produced By : Suresh Productions, S Originals, Waltair Productions - Srujan Yarabolu, Siddharth Rallapalli
விஷ்வதேவ் - நிவேதா தாமஸ் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அனைத்து பெற்றோர்கள் போல் இவர்களும் தங்களது இரண்டு மகன்களையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இவர்களது மூத்த மகனான சிறுவன் அருண்தேவுக்கு, ”மதிப்பற்ற பூஜ்ஜியம் அருகே 1 சேர்த்தால் வரும் 10 எப்படி 9-ஐ விட அதிகம் மதிப்பு பெற முடியும்?” என்ற கேள்வி எழுகிறது. கணிதத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்தை எந்த ஆசிரியராலும் தீர்த்து வைக்க முடியாததால், நாம் படிக்கும் கணிதமே தவறு என்று சொல்லும் சிறுவன், தனக்கு புரியாத கணிதத்தை படிக்க மாட்டேன் என்று கூறி, அனைத்து வகுப்புகளிலும் கணிதத்தில் மட்டும் பூஜ்ஜியம் மதிப்பெண் பெறுகிறார்.
இதற்கிடையே புதிதாக வரும் ஆசிரியர் பிரியதர்ஷி புலிகொண்டாவும் மாணவன் அருண் தேவின் சந்தேகத்தை தீர்த்து வைக்காமல், அவரது பூஜ்ஜியம் மதிப்பெண்ணை வைத்து அவரை நிராகரிப்பதோடு, அவரது பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.
மகனின் நிலையை கண்டு வருந்தும் நிவேதா தாமஸ், அவரது கணித சந்தேகத்தை வாழ்க்கை சம்பவங்கள் மூலம் தீர்த்து வைக்க முயற்சித்து, ஆசிரியர் வைக்க நினைத்த முற்றுப்புள்ளியை மாற்றும் பயணத்தில் ஈடுபட, அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை கணித பாடத்தை எப்படி எளிமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்கும் விதத்தில் சொல்வதே ‘35 சின்ன விஷயம் இல்ல’.
கணிதம் என்றாலே அச்சப்படும் மாணவர்களுக்கு நடுவே, கணிதத்தின் மீது தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்து வைக்காத வரை, கணித பாடத்தையே படிக்க மாட்டேன், என்று பிடிவாதம் காட்டும் மணவராக நடித்திருக்கும் சிறுவன் அருண்தேவ் அம்மா பிள்ளையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். தனது சிறுவயது நண்பனது பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை கலங்கடிக்கச் செய்வதோடு, படம் முழுவதும் தனது கியூட்டான நடிப்பு மூலம் ரசிக்க வைக்கிறார்.
சிறுவன் அருண்தேவை மையமாக கொண்டு கதை நகர்ந்தாலும், அவரது தாயான சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவேதா தாமஸ், ஒட்டு மொத்த கதையையும் நகர்த்தி செல்வதோடு, மனைவியாகவும், தாயாகவும் தனது கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ், சிறு சிறு பாவங்கள் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
நிவேதா தாமஸின் கணவராக நடித்திருக்கும் விஷ்வதேவ் ரச்சகொண்டா, சராசரி தந்தையாக தனது மகன் மீது கோபம் கொண்டாலும், அவரது எதிர்காலத்தை நினைத்து கலங்கும் காட்சிகளாகட்டும், தனது அடையாளமான ”சின்ன விஷயம் இல்ல” என்ற வசனத்தை உச்சரிக்கும் விதத்திலும் தனது திரை இருப்பை சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார்.
கணித ஆசிரியராக சாணக்ய வர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியதர்ஷி புலிகொண்டா, தனது கடுமையான வார்த்தைகள் மூலம் பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளாகும் வகையில் நடித்திருக்கிறார்.
பள்ளி தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், சரஸ்வதியின் சகோதரராக நடித்திருக்கும் கிருஷ்ணா தேஜ், கிரண்மயி வேடத்தில் நடித்திருக்கும் சிறுமி அனன்யா, சரஸ்வதியின் இளைய மகனாக நடித்திருக்கும் அபய் சங்கர் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கெளதமி என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
விவேக் சாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் கேமராவும், படத்தொகுப்பாளர் டி.சி.பிரசன்னாவின் பணியும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
பிரசாந்த் விக்னேஷ், அமராவதி மற்றும் நந்த கிஷோர் எமானி ஆகியோரது கதை எளிமையாக இருந்தாலும், கணித பாடத்தை எப்படி கையாள வேண்டும் மற்றும் படிப்பு என்றால் கற்றுக்கொள்வது, என்ற கருத்தை தங்கள் திரைக்கதை மூலம் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
திருப்பதியில் வசிக்கும் ஒரு பிராமண குடும்பத்தை வைத்துக் கொண்டு கணித ஆசிரியர்களுக்கு பாடம் எடுத்திருக்கும் வகையில் படத்தை இயக்கியிருக்கும் நந்த கிஷோர் எமானி, படம் முழுவதும் வசனங்கள் அதிகமாக இருந்தாலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் திரைக்கதையை நகர்த்தி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக பள்ளி காட்சிகள் அனைத்தும் புதிதாக இருப்பதோடு, அதில் என்ன பேச வேண்டுமோ அதை மட்டுமே பேசி, தான் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதியச் செய்து விடுகிறார். அதே சமயம், படிப்பு தொடர்பான ஒரு கதையை பிராமண குடும்பத்தின் பின்னணியில் சொல்வதற்கான காரணம் என்ன? என்பதை சொல்ல் தவறியிருக்கிறார்.
நம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களோடு கணிதத்தை தொடர்புபடுத்தி, அதை எளிமையான முறையில் கற்பிக்கும் முறையை இயக்குநர் கையாண்ட விதம் மிகச்சிறப்பு. இதுபோல் கணித பாடத்தை கற்றுக்கொடுத்தால் மாணவர்கள் அனைவரும் கணிதத்தை கொண்டாடுவார்கள்.
மொத்தத்தில், ‘35 சின்ன விஷயம் இல்ல’ படத்துக்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கலாம்.
ரேட்டிங் 4/5