Latest News :

‘திரு.மாணிக்கம்’ திரைப்பட விமர்சனம்

a8608eb25d55b465095452b4cb097853.jpg

Casting : P.Samuthirakani, Bharathi Raja, Ananya. Thambi Ramaiah. Ilavrasu, Nasar, Chinni Jeyanth, Vadivukarasi. Gracy, Karunakaran, Sulil Kumar, Chandru, Chaams, Sriman

Directed By : Nanda Periyasamy

Music By : GP Rekha Ravikumar, Chintha Gopala Krishna Reddy, Raja Senthil

Produced By : GPRK Cinemas -

 

கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் லாட்டரி டிக்கெட் கடை நடத்தும் சமுத்திரக்கனி, மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளோடு எளிமையாகவும், பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளோடும் வாழ்ந்தாலும், அனைவரிடத்திலும் அன்பாக பழகுகிறார். இந்த சமயத்தில், அவரிடம் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பாரதிராஜா, பணம் தொலைந்துவிட்டதால், வாங்கிய டிக்கெட்டுகளை பணம் கொடுத்துவிட்டு பெற்றுக்கொள்கிறேன், என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார். அவர் வாங்கிய டிக்கெட்டுகளில் ஒன்றுக்கு ரூ.1.50 கோடி பரிசு அடித்துவிட, அதை அவரிடம் ஒப்படைக்க சமுத்திரக்கனி முடிவு செய்கிறார்.

 

பாரதிராஜா யார்?, எந்த ஊர்? உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாமல் அவர் கொண்டு வந்த மஞ்சள் பையில் இருந்த ஊர் பேரை வைத்துக்கொண்டு, அவரை கண்டுபிடித்து பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை அவரிடம் ஒப்படைக்க சமுத்திரக்கனி பயணிக்கிறார். விசயம் தெரிந்த  அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தார், அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சியால் சமுத்திரக்கனியை சில ஆபத்துகளும் துரத்த, உரியவரிடம் லாட்டரி டிக்கெட்டை ஒப்படைத்தாரா?, அவரது நேர்மை குணம் சரியானதா?, அதனால் அவருக்கு நேர்ந்தது என்ன? ஆகிய கேள்விகளுக்கான பதிலை மனிதத்தோடு சொல்வதே ‘திரு.மாணிக்கம்’.

 

எளிமை, அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் குணம், தெளிவான சிந்தனை, நேர்மையான வாழ்க்கை என்று சமுத்திரக்கனிக்காகவே தைக்கப்பட்ட சட்டைப்போல் இருக்கும் மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில், மனுஷன் மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் அதிகம் பேசவில்லை என்றாலும், மாணிக்கம் கதாபாத்திரத்தின் நேரமியும், அதன் பின்னணியும் பல விசயங்களை பேசாமல் பேசிச் செல்கிறது.

 

சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் அனன்யா, கல்லூரி, காதல் என்று இளம் வயது கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவராக இருந்தாலும், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாய், என்று முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்ப கஷ்ட்டம் தீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும், கணவரின் நேர்மையால் அது முடியாமல் போகும்போது, உள்ளுக்குள் எழும் கோபத்தை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி நல்ல நடிகையாக முத்திரை பதிக்கிறார்.

 

முதியவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் பாரதிராஜா, வழக்கும் போல் எதார்த்தமாக நடித்திருக்கும் இளவரசு, சிறு காட்சியில் வந்தாலும் நினைவில் தங்கிவிடும் நாசர், வடிவுக்கரசி, தேவாலய பாதிரியராக நடித்து பாதிரியார்களை கலாய்த்த சின்னி ஜெயந்த், காவலராக நடித்திருக்கும் கருணாகரன், பேருந்து ஓட்டுநர்களாக நடித்திருக்கும் சாம்ஸ், ஸ்ரீமன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தங்களது அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பங்கம் விளைவிக்கவில்லை. 

 

ஆனால், லண்டன் ரிட்டர்னாக நடித்திருக்கும் தம்பி ராமையா, காமெடி என்ற பெயரிலும், நடிப்பு என்ற பெயரிலும் வெளிக்காட்டும் பாவனைகளும், செயல்களும் சிரிக்க முடியாத கோமாளித்தனமாக மட்டும் இன்றி பார்வையாளர்களுக்கு கோபத்தை வர வைக்கும் விதத்தில் இருக்கிறது. 

 

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. பின்னணி இசையும் அளவு.

 

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா கண்கள் கேரள பகுதிகளை எதார்த்தமாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தியிருப்பதோடு, எளிமையானவர்களின் சோகம் மற்றும் கண்ணீரை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது. 

 

சமுத்திரக்கனியின் பயணம் வெற்றி பெறுமா? என்ற கேள்வியோடு ரசிகர்களை பதற்றமாகவே படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் குணா.

 

எழுதி இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி, எளிமையானவர்களின் நேர்மையான வாழ்க்கையை, பிரச்சாரமாக அல்லாமல், விறுவிறுப்பான திரில்லர் ஜானராகவும், குடும்பமாக பார்க்க கூடிய நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

லாட்டரி டிக்கெட், பரிசு, நேர்மை, அதன் மூலம் எழும் பிரச்சனைகள் ஆகியவற்றை நாம் ஏற்கனவே சில படங்களில் பார்த்திருந்தாலும், அதை வேறு ஒரு பாணியில் சொல்ல முயற்சித்திருக்கும் நந்த பெரியசாமி, கதை குடும்ப பின்னணியோடு பயணித்தாலும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்திச் சென்றிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

இப்படி ஒரு மனிதர் இருப்பரா? என்று யோசிக்காமல், ஒவ்வொருவரும் இப்படித்தான் இருக்க வேண்டும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் நந்தா பெரியசாமி, எப்படி வேண்டுமானாலும் வாழலாம், என்று நினைப்பவர்களுக்கு நேர்மையான வாழ்க்கையின் மூலம் கிடைக்கும் மன நிம்மதியை படம் பார்ப்பவர்களும் உணரும்படி திரைக்கதையை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘திரு.மாணிக்கம்’ நேர்மையற்றவர்களை திருத்தும்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery