Casting : Rajkumar, Vellaiyammal, Muthayi, Muthusamy, Kuppusamy, SM Manickam, Indirani, SM Senthilkumar, Sivarathinam, Periyasamy, Mohanapriya, Thangarasu, Dharma Selvan, Namachivayam, Rajesh Krishnan, Ranjith, Nila
Directed By : Sankagiri Rajkumar
Music By : Tajnoor
Produced By : Chandra Sooryan, Prabhu & Periyasamy
சங்ககிரி ராச்குமார் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘வெங்காயம்’ திரைப்படம் பத்திரிகையாளர்கள், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களால் பெரிதும் பாராட்டு பெற்ற நிலையிலும், வியாபார ரீதியாக தோல்வியடைந்தது. அதே சமயம், தனது குடும்பம், உறவினர்கள் மற்றும் கிராம மக்களை வைத்துக்கொண்டு முழு படத்தையும் எடுத்த இயக்குநர் சங்ககிரி ராச்குமார் பற்றி பாராட்டி பல கட்டுரைகளை பல பத்திரிகைகள் வெளியிட்டது. அதில், ”இவர்கள் படம் எடுத்த கதையை ஒரு படமாக எடுக்கலாம்”, என்று பிரபல வார இதழ் ஒன்று குறிப்பிட்டிருந்தது.
அதன்படி, ‘வெங்காயம்’ என்ற கதை எழுத தூண்டுதலாக இருந்த சம்பவம் தொடங்கி, அந்த கதைக்கான குறும்படம் எடுப்பதற்கான பணத்தை தனது தந்தையிடம் தற்கொலை மிரட்டல் விடுத்து பெற்றது, பிறகு தானே அந்த கதையை படமாக எடுக்க முயற்சித்தது, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைக் கொண்டு படத்தை எடுக்க தொடங்கி, அதற்காக தனது வீட்டில் இருந்த ஆடு, மாடு என அனைத்துயும் விற்று இறுதியில் ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்வாதாரம் மற்றும் இருப்பிடமான நிலத்தை விற்று படத்தை வெளியிட்டது, என தான் படம் எடுத்த கதையை அதிக வலியுடனும், கொஞ்சம் கலகலப்புடனும் இயக்குநர் சங்ககிரி ராச்குமார் சொல்வது தான் ‘பயாஸ்கோப்’.
பத்து வருடங்களுக்கு முன்பு தான் இயக்கிய திரைப்படத்தின் சில காட்சிகளையும், அப்படத்தின் மூலம் தான் கடந்து வந்த சில கசப்பான மற்றும் கலகலப்பான சம்பவங்களை மீண்டும் காட்சிப்படுத்தி அதையே ஒரு படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் சங்ககிரி ராச்குமார், தனது முந்தைய பட பாணியிலேயே கிராமத்து மனிதர்களை கதையின் மாந்தர்களாக்கி, திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு எந்தவிதமான சினிமா சாயமும் பூசாமல் மீண்டும் ஒரு எதார்த்த கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை ’பயாஸ்கோப்’ மூலம் பதிவு செய்திருக்கிறார்.
கேமரா உள்ளிட்ட சினிமா படப்பிடிப்பு கருவிகளின் பெயர்கள் கூட தெரியாத மனிதர்களை வைத்துக்கொண்டு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்ததற்காகவே இயக்குநர் ராச்குமாரை பாராட்டியாக வேண்டும், அதிலும் அந்த முடிவை செயல்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும், அதற்கு தடைகள் பல வந்தாலும், தன் கதை மீதும், தன் மீதும் கொண்ட நம்பிக்கையால், இறுதிவரை முயற்சித்து இறுதியில் நிலத்தை அடகு வைத்து படத்தை முடிக்கும் காட்சிகள் அனைத்தும் நெகிழ்ச்சியாக இருப்பதோடு, அடகு வைத்த நிலத்தை அவரால் மீட்க முடியுமா? என்பது நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கும் திரில்லர் அனுபவத்தை கொடுக்கிறது.
பத்திரிகைகள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்தாலும் வியாபாரா ரீதியாக படம் தோல்வியடைவது தற்போதைய சினிமா வியாபாரத்தின் நடைமுறையை உணர்த்துவதோடு, என்ன தான் நல்ல கதையாக இருந்தாலும் அதை நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட நடிகர்கள் மூலம் சொன்னால் மட்டுமே மக்களிடம் சென்றடையும் என்ற உண்மையையு உணர்த்தும் படம், இயக்குநர் சங்ககிரி ராச்குமார், எந்த நோக்கத்திற்காக ‘வெங்காயம்’ என்ற படத்தை எடுத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறும் தருணத்தைக் கண்டு ராச்குமார் மகிழும் காட்சி அவருக்கு மட்டும் அல்ல படம் பார்க்கும் அனைவருக்கும் திருப்தியைக் கொடுக்கிறது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராச்குமார், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி, தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி, அப்பா வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக நடித்திருக்கும் இந்திராணி, தம்பிகளாக நடித்திருக்கும் எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கையாக நடித்திருக்கும் மோகனபிரியா, ஜோதிடராக நடித்திருக்கும் தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் தர்மசெல்வன், குவாரி முதலாளியாக நடித்திருக்கும் நமச்சிவாயம், நண்பராக நடித்திருக்கும் ராஜேஷ்கிருஷ்ணன், இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் ரஞ்சித், ஹீரோயினாக நடித்திருக்கும் நிலா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கதையின் மாந்தர்களாக பார்வையாளர்கள் மனதில் பசைப்போட்டு ஒட்டிக்கொள்கிறார்கள்.
சங்ககிரி ராச்குமாருக்கு கடவுள் போல் தோன்றி உதவி செய்த இயக்குநர் சேரன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்த நடிகர் சத்யராஜ் இருவரின் திரை இருப்பு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் முரளி கணேஷின் கேமரா கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் தாஜ்நூருக்கு வேலை மிக மிக குறைவு என்றாலும், அதை மிக நிறைவாக செய்திருக்கிறார்.
தான் படம் எடுத்த அனுபவத்தை ஒரு கதையாக எழுதி இயக்கியிருக்கும் சங்ககிரி ராச்குமார், தனது முதல் படத்தின் காட்சிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஒரு படமாக கொடுத்திருக்கிறார். முதல் படம் போலவே, கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து எதார்த்தமான காட்சிகள் மூலம், இப்படியும் திரைப்படம் எடுக்கலாம் என்பதை உலகிற்கு சொல்லியிருப்பவர், வியாபாரம் என்று வந்துவிட்டால் நல்லது, கெட்டது என்பதெல்லாம் பார்க்க மாட்டார்கள், என்பதை மக்களுக்குச் சொல்லியிருப்பவர் தானும் உணர்ந்திருப்பார் என்று தெரிகிறது.
எனவே அடுத்த படத்தையாவது இப்படி எதார்த்தமாக அல்லாமல் கொஞ்சம் சினிமா பாணியிலும், வியாபாரம் அம்சம் நிறைந்தவையாகவும் எடுத்து இயக்குநர் சங்ககிரி ராச்குமார் வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துவோம்.
ரேட்டிங் 2.5/5