Latest News :

’லாரா’ திரைப்பட விமர்சனம்

389c556b93cc6318e810776143edd7fd.jpg

Casting : Ashok Kumar, Karthikesan, Anusreya Rajan, Venmathi, Varshini Venkat, Mathew Varghese, Bala, SK babu, Dilip Kumar, ES Pradeep

Directed By : Mani Moorthy

Music By : Raghu Sravan Kumar

Produced By : MK Film Media Works - M.Karthikesan

 

காரைக்கால் கடற்கரை பகுதியில் பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்குகிறது. அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன் தலைமையிலான காவலர்கள் குழு, பல நாட்களாக தண்ணீரில் இருந்து முகம் முழுவதும் சிதைந்த நிலையில் இருக்கும் அந்த சடலம் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். அதே சமயம், வேன் ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி காணாமல் போனதாக போலீஸில் புகார் அளிக்கிறார். மறுபக்கம் இரண்டு பேர் ஒரு பெண்ணை துரத்தும் சிசிடிவி காட்சிகள் போலீஸுக்கு கிடைக்கிறது. இவற்றை வைத்து, சடலமாக இருப்பவர் வேன் ஓட்டுநரின் மனைவி தான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்த, வேன் ஒட்டுநரோ அது தனது மனைவி இல்லை, என்று உறுதியாக சொல்கிறார். அதேபோல், இருவரால் துரத்தப்பட்ட பெண்ணும் வேறு ஒருவர் என்பதை கண்டுபிடிக்கும் போலீஸ், கரை ஒதுங்கிய சடலம் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் கஷ்ட்டப்படுகிறார்கள்.

 

இதற்கிடையே, காணாமல் போன வேன் ஓட்டுநரின் மனைவி பற்றிய தகவல் ஒன்று மர்ம பெண் மூலம் போலீஸுக்கு கிடைக்கிறது. அந்த தகவலை வைத்துக் கொண்டு தனது விசாரணையை இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன், தீவிரப்படுத்த, அதன் மூலம் சில எதிர்பார்க்காத அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அவை என்ன? அதற்கும் கரை ஒதுங்கிய சடலத்திற்கும் என்ன சம்மந்தம்? என்பதை சஸ்பென்ஸாக சொல்வதே ‘லாரா’.

 

ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை முக்கியத்துவமாக கொண்டு பயணிக்காமல், படத்தில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்களை கூட திரைக்கதையின் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக சித்தரிக்கும் படங்களால் தான் கிரைம் திரில்லர் சஸ்பென்ஸ் ஜானர் படங்களை விரும்பும் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்த முடியும். அந்த வகையில், இந்த படம் படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை அதை மிக நேர்த்தியாக செய்திருக்கிறது.

 

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேசன், புதுமுகம் என்றாலும் எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். சூடாக டீ குடித்தவாறு விசாரணைகளை கையாண்டாலும், எப்போதும் கூலாக இருக்கும் போலீஸாக வலம் வரும் கார்த்திகேசன், அளவான நடிப்பு மூலம் பார்வையாளர்களை கவர்ந்துவிடுகிறார்.

 

சிறிய வேடத்தில் நடித்தாலும் வழக்கம் போல் தனது அதிகப்படியான நடிப்பின் மூலம் தன் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்த முயற்சித்திருக்கும் அசோக் குமார், மக்கள் மனதில் தங்கிவிடுகிறார்.

 

அனுஷ்ரேயா ராஜனின் வேலை குறைவு என்றாலும் கதையின் மையப்புள்ளி கதாபாத்திரத்தில் அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.  

 

வேன் ஓட்டுநரின் மனைவியாக நடித்திருக்கும் வெண்மதி, வாலிபர்களால் துரத்தப்படும் வர்ஷினி வெங்கட், கவுன்சிலராக நடித்திருக்கும் எஸ்.கே.பாபு, வேன் ஓட்டுநராக நடித்திருக்கும் பாலா, பெண் ஆசையால் தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களாக நடித்திருக்கும் திலீப் குமார் மற்றும் இ.எஸ்.பிரதீப், அசோக்கின் தந்தையாக நடித்திருக்கும் மேத்தீவ் வர்க்கீஸ் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

காரைக்கால் பகுதிகளை களமாக கொண்டு பயணிக்கும் கதைக்கு ஏற்றவாறு தனது கேமராவை பயணிக்க வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.ஜே.ரவீன், திருவிழா காட்சியை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார். 

 

ரகு ஸ்வரன் குமாரின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு ஈடுகொடுத்து பயணித்தாலும், தேவையில்லாத சத்தங்களை தவிர்த்துவிட்டு அளவான பின்னணி இசை மூலம் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது.

 

ஒரு சடலத்தை வைத்துக்கொண்டு போலீஸ் மேற்கொள்ளும் விசாரணை மூலம் பல கிளைக்கதைகள் சொல்லப்பட்டாலும், இறுதியில் சடலம் யார்? என்பதை யூகிக்க முடியாதபடியும், தொய்வில்லாதபடியும் காட்சிகள் நகர படத்தொகுப்பாளரின் பணி கைகொடுத்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் மணி மூர்த்தி புதுமுகங்களை வைத்துக்கொண்டு ஒரு புலனாய்வுக் கதையை புத்திசாலித்தனமாக நகர்த்திச் சென்று ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு சடலம், அது யார் ? என்பதை கண்டுபிடிப்பதில் தொடங்கும் கதை, வெளிநாட்டு பண பரிவர்த்தனை, பாலியல் தொழில் செய்யும் பெண்களின் அவல நிலை, பெண்கள் மீது கொடூரத்தை வெளிப்படுத்தும் கொடூர மனிதர்களின் மர்ம முகங்கள், எம்.எல்.ஏ-வின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியம் என பல கிளைக்கதைகளை சுவாரஸ்யமாக பயணிக்க வைத்திருப்பதோடு, லாரா பற்றிய காதல் கதையோடு அவற்றை முடிச்சு போட்டு, இறுதியில் முழுமையான கிரைம் திரில்லர் படத்தை கொடுத்து பாராட்டு பெறுகிறார்.

 

நடிகர்கள் தெரிந்த முகங்களாக இல்லை என்றாலும், அவர்களின் இயல்பான நடிப்பு மூலமாகவே கதாபாத்திரங்களை ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருக்கும் இயக்குநர், அவர்களின் இயல்பான உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் பல இடங்களில் பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

 

லாராவின் காதல் மற்றும் ஆசிரம கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் திரைக்கதையின் வேகத்தை சற்று குறைப்பது போல் இருப்பது, படத்தின் குறையாக இருந்தாலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் புத்திசாலித்தனமாக வழக்கை முடிப்பது மற்றும் இறுதியில் லாராவின் நிலை ஆகியவை முழுமையான கிரைம் திரில்லர் அனுபவத்தை கொடுப்பதோடு, அடுத்த பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

 

மொத்தத்தில், ‘லாரா’ படத்தை நம்பி பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery