Latest News :

’பாட்டல் ராதா’ திரைப்பட விமர்சனம்

4593e7ecb4808889f6eb4818b4c5ef51.jpg

Casting : Guru Somasundaram, Sanchana Natarajan, John Vijay, Lollu Sabha Maaran

Directed By : Dhinakaran Sivalingam

Music By : Sean Roldan

Produced By : Neelam Productions and Balloon Pictures - Pa. Ranjith and T. N. Arunbalaji

 

“மது வீட்டிற்கும் நாட்டுக்கும் கேடு” என்பார்கள். ஆனால், உண்மையில் மதுப்பழக்கம் தனி மனிதனின் உடல்நலத்தை மட்டும் இன்றி அவர் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சியை சீர்குலைத்து எத்தகைய கேடு விளைவிக்கிறது, என்பதை கலகலப்பாகவும், கண் கலங்கும்படியும் சொல்வது தான் ‘பாட்டல் ராதா’.

 

கட்டுமானத் தொழிலாளரான நாயகன் குரு சோமசுந்தரம், பெரும் கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையில் பயணிக்கிறார். அவரது கனவு உலகம் ஒரு நாள் மெய்ப்படும் என்ற எதிர்பார்ப்பில் அவருடன் கைகோர்க்கிறார் நாயகி சஞ்சனா நடராஜன். இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகள். இந்த அழகான குடும்பம், நாயகனின் மதுப்பழக்கத்தினால் எப்படி அழிவை நோக்கி பயணிக்கிறது என்பதையும், அதில் இருந்து தனது கணவரை காப்பாற்ற போராடும் மனைவியின் முயற்சி, அந்த முயற்சியினால் ஏற்படும் விபரீதம், அதில் இருந்து நாயகன் மீண்டாரா? இல்லையா? என்பதை மதுப்பழக்கத்திற்கு அடிமையானதை அறியாமல் அறிவுரைகளை நிராகரிப்பவர்களை எச்சரிக்கும் விதமாக சொல்வதே ‘பாட்டல் ராதா’.

 

நாயகனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தனது எதார்த்தமான நடிப்பு மூலம் பாட்டல் ராதா என்ற கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்துவிடுகிறார். மதுப்பழக்கத்தால் தனது கனவுகளை தொலைத்ததோடு, தான் யார் ? என்பதையும் மறந்துவிட்ட மனநிலையில் வாழும் அவரது ஒவ்வொரு அசைவுகளும் அவரது கதாபாத்திரத்திற்கும், காட்சிகளுக்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன், குடியால் பாதிக்கப்படும் குடும்பத் தலைவிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். 

 

வில்லத்தனம் மற்றும் ஜாலியான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஜான் விஜய், மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். அதிலும், கிளைமாக்ஸ் நெருங்கும் போது தனது வாழ்க்கைப் பற்றி சொல்லி கண் கலங்கும் காட்சியில், ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார். 

 

இறுக்கமான கதைக்களம் மற்றும் திரைக்கதை என்றாலும், அதை இலகுவான மனநிலையுடன், மகிழ்ச்சியாக சிரித்து ரசிக்க வைத்துவிடுகிறார் லொள்ளு சபா மாறன். அவரது டைமிங் காமெடி வசனங்கள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.

 

ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் கேமரா கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்துவதில் அதிகம் மெனக்கெட்டிருக்கிறது.

 

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை விவரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. 

 

சோகமான கதைக்களம் என்றாலும், அதை ஜாலியாகவும் அதே சமயம் இயக்குநர் சொல்ல வரும் கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கும்படியும் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் இ.சங்கத்தமிழன்.

 

எழுதி இயக்கியிருக்கும் தினகரன் சிவலிங்கம், பிரச்சாரம் போன்ற ஒரு கதைக்கருவை, தனது திரைக்கதை மூலம் சிரிக்க வைக்கும் படமாக மட்டும் இன்றி சிந்திக்க வைக்கும் நல்ல படைப்பாகவும் கொடுத்திருக்கிறார்.

 

குடி நோயாளிகள் யார் ?, மதுப்பழக்கத்தினால் குடும்பங்கள் எப்படி சீரழிகிறது ?,  மறுவாழ்வு மையங்கள் செயல்படும் விதம், அதன் மூலம் மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டவர்களின் அடுத்த நிலை, என இதுவரை திரையில் பார்த்திராத பல விசயங்களை, எந்தவித நெருடல் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் தினகரன் சிவலிங்கம், திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தி பொழுதுபோக்கு படமாகவும் ரசிக்க வைக்கிறார்.

 

மொத்தத்தில், ‘பாட்டல் ராதா’ நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery